Published:Updated:

` நடிகையைக் கேட்டு நோகடிக்கறாங்க சார்!'- ஈரோடு பிரமுகருக்கு அதிர்ச்சி கொடுத்த போலி ஃபேஸ்புக் பக்கம்

குருநாதன்
குருநாதன்

``ராத்திரி நேரத்துல ஏதோ எமர்ஜென்சி போன் கால்னு நினைச்சு எடுத்தா, நடிகையைக் கேட்டு நோகடிக்கிறாங்க சார்..!”

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அண்ணாமடு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். பிரபல சீரியல் நடிகை ஒருவரின் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கிய மர்ம ஆசாமிகள், அந்த முகநூல் பக்கத்தில் குருநாதனின் செல்போன் நம்பரைப் பதிவேற்றியுள்ளனர்.

இது சின்னத்திரை நடிகையின் செல்போன் நம்பர் என நினைத்துப் பலரும் வரிசை கட்டி இரவு பகல் பாராமல் குருநாதனுக்கு போன் செய்திருக்கின்றனர். ஒருநாள் இரண்டு நாளல்ல கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இந்தச் சம்பவம் நடந்து வந்திருக்கிறது. `இது ராங் நம்பர்... என் பேர் குருநாதன்’ என ஒருகட்டம்வரை நிதானமாக ஹேண்டில் செய்தவர், அதன்பிறகு பொறுமையிழந்து போயிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத் உற்று கவனிக்கும் தமிழக ஐ.பி.எஸ்  முனிராஜ்... பதற்றமான இடத்தில் முக்கிய அசைன்மென்ட்!

கடந்த டிசம்பர் மாதமே ஈரோடு எஸ்.பி-யைச் சந்தித்து, புகார் கொடுத்ததோடு போலி முகநூல் பக்கத்தை முடக்குமாறு கூறியிருக்கிறார். அதன்பிறகு ஒருமாதகாலம் எந்தவித தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருக்கிறார். தற்போது மீண்டும் சின்னத்திரை நடிகையைக் கேட்டு போன்கால்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், வெறுத்துப் போன குருநாதன், அருகிலுள்ள அந்தியூர் காவல் நிலையத்துக்குச் சென்று உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகார் கொடுத்திருக்கிறார்.

குருநாதனிடம் பேசினோம். ``கடந்த நான்கு மாதங்களாக சின்னத்திரை நடிகை எண் என எனக்குத் தொடர்ந்து போன் வந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் இருந்து பேசிய பெண் ஒருவர், மேடத்திடம் பேச வேண்டும் என்றார். இந்த நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது எனக் கேட்க, ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்ததாகச் சொன்னார். உடனே அந்த முகநூல் பக்கம் குறித்து ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் செய்தேன். ஒருமாத கால அமைதிக்குப் பிறகு மறுபடியும் போன் வந்துகொண்டிருக்கிறது.

போலி முகநூல் பக்கம்
போலி முகநூல் பக்கம்

புது நம்பரில் இருந்து போன் வந்தால் எடுக்கவே பயமாக இருக்கிறது. ராத்திரி நேரத்துல ஏதோ எமர்ஜென்சி போன் கால்னு நினைச்சு எடுத்தா, நடிகையைக் கேட்டு நோகடிக்கிறாங்க. செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணியும் வைக்க முடியலை. இதனால எனக்குக் கடுமையான மன உளைச்சல். உடனே அந்த முகநூல் கணக்கை முடக்கி, அதிலுள்ள என்னுடைய செல்போன் எண்ணை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்றார் வேதனையான குரலில்.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த போலி முகநூல் பக்கத்தைக் கிட்டத்தட்ட 80,000 பேருக்கு மேல் ஃபாலோ செய்து கொண்டிருப்பதுதான்.

அடுத்த கட்டுரைக்கு