Published:Updated:

ஈரோடு அருகே பிரசவத்துக்காக 6 கி.மீ தொட்டில் பயணம்! - பரிதவித்துப்போன கர்ப்பிணிப் பெண்

கர்ப்பிணி குமாரியை தொட்டிலில் தூக்கிச் செல்லும் காட்சி
கர்ப்பிணி குமாரியை தொட்டிலில் தூக்கிச் செல்லும் காட்சி

கொட்டும் மழையில் கொஞ்சம்கூட யோசிக்காமல், 25 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு போயிருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலையில் உள்ள சுண்டைப்போடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி (23) என்ற பெண்ணுக்கு நேற்று காலை பிரசவ வலி வந்திருக்கிறது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல பேருந்தோ, வாகன வசதியோ இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், அரசு அந்தப் பகுதிக்கு ஒரேயொரு பேருந்து வசதியை செய்துகொடுத்திருக்கிறது. அதுவும் ஒருநாளைக்கு இரண்டுமுறைதான் வந்து செல்லுமாம். அவசரத்துக்கு எந்த வாகனமும் இல்லை.

வலியில் துடித்த கர்ப்பிணி; பிளாட்பாரத்தில் சென்ற ஆட்டோ! - உதவி செய்த ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்

கொட்டும் மழையில் கொஞ்சம்கூட யோசிக்காமல், மூங்கிலில் சேலையை தொட்டில் போலக் கட்டி கர்ப்பிணியான குமாரியை தூக்கிக்கொண்டு கிளம்பியிருக்கின்றனர். 25 கி.மீ தூரத்திலிருக்கும் தாமரைக்கரை அரசு மருத்துவமனைக்கு போயாக வேண்டும். எந்த நம்பிக்கையில் கிளம்பினார்களோ..! செல்லும் வழியில், ஓசூர் என்கின்ற இடத்தில் அரசுப்பள்ளியின் கட்டடத்தில், பத்துக்குப் பத்து அறையில் சிறிய ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. அங்கு எந்த வசதியும் இல்லை. பிரசவ வலியில் கதறும் கர்ப்பிணியோடு கிட்டத்தட்ட 6 கி.மீ நடந்தே பயணித்திருக்கின்றனர்.

அந்தநேரம் பார்த்து வேன் ஒன்று எதிரே வர, அதை நிறுத்தி கர்ப்பிணி குமாரியை ஏற்றிக்கொண்டு கிளம்பியிருக்கின்றனர். சில நிமிடங்களிலேயே வலி அதிகமாக, வண்டியை ஓரம்கட்டியிருக்கின்றனர். வண்டியில் வைத்தே குமாரிக்குப் பிரசவம் நடந்திருக்கிறது. பல்வேறு பதைபதைப்புகளுக்குப் பிறகு குமாரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.

மருத்துவமனையில் குழந்தையுடன் குமாரி
மருத்துவமனையில் குழந்தையுடன் குமாரி

பிறகு அந்த வண்டியிலேயே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். ``எல்லா நேரமும் இப்படி தொட்டிலில் சென்றவர்கள் சுகமாக வீடு திரும்பி விடுவதில்லை. பல நேரங்களில் அந்தத் தொட்டில் பயணமே இறுதிப் பயணமாகிவிடும் சம்பவங்களும் நடப்பதுண்டு' என கவலை தெரிவிக்கின்றனர் பழங்குடியின ஆர்வலர்கள்.

இதுகுறித்து பழங்குடியினருக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருபவரும், சுடர் அமைப்பின் இயக்குநருமான சுடர் நடராஜிடம் பேசினோம். ``இன்றைக்கு நிலவை ஆராய சந்திராயன் விடுகிறோம். என்னென்னமோ ஆராய்ச்சிக்காக கோடி கோடியாய் செலவிடுகிறோம். நினைத்தவுடன் எல்லா வசதிகளும் கிடைக்கும் நவீன உலகமாய் இது இருக்கிறது. ஆனால், இங்கு வாழும் பழங்குடிகளோ, இன்னும் அவசரத்துக்கு தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் நிலையில்தான் இருக்கின்றனர். இப்படி அவசர சிகிச்சைக்காக தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட பலர் வழியிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.

Vikatan

கல்வி, மருத்துவம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்களாக பழங்குடியினர்கள் இருக்கின்றனர். அவசரத்துக்கு 108-ஐ கூப்பிட செல்போன் டவர்கூட அந்தக் கிராமங்களில் இல்லை. சரியான சாலை வசதிகள் இல்லாதது ஒருபுறம், இருக்கிற சாலைகளிலும் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தாமரைக்கரையில் இருந்து கொங்காடை பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து விட்டிருக்கிறார்கள். அவசரத்துக்கு அது சுத்தமாகப் பயன்படுவதில்லை. பழங்குடிகளின் நலனைப் பற்றி அரசு கொஞ்சம் கூட அக்கறை கொள்வதில்லை. அவர்களும் ஓர் உயிர்தான் என நினைத்து, குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளையாவது அரசு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு