Published:Updated:

துரை வையாபுரி நியமனம்: 'தலைவரைவிட கொள்கைதான் பெரிது' - விலகினார் மதிமுக இளைஞரணிச் செயலாளர்

மதிமுக-வில் வைகோ மகன் துரை வையாபுரி முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் விலகியிருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், நேற்று உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், வைகோ மகன் துரை வையாபுரி தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மதிமுக-விலும் வாரிசு அரசியல் தலை தூக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வைகோ
வைகோ
மதிமுக: `தலைமைக் கழகச் செயலாளராகிறார் துரை வையாபுரி; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வைகோ!'

இந்நிலையில், துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றிவந்தேன். கட்சி இட்ட கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறேன். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும், சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன்.

துரை வையாபுரி
துரை வையாபுரி

எனக்கு எந்தப் பதவியும் கிடைக்காவிட்டாலும், ஏராளமான பொருள் இழப்புகளைச் சந்தித்திருந்தாலும், மக்களுக்காகப் பணியாற்றி பல வெற்றிகளைப் பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்கத்தின் பொதுவான மனநிலைக்கும், எனது செயல்பாடுகளுக்கும் முரண்பாடுகள் வரத் தொடங்கும்போது, நான் இங்கு இயங்குவது இயக்கத்துக்கும் நல்லதல்ல; எனக்கும் நல்லதல்ல. எனது சட்டப் போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளைத் தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

அதனால் `மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்’ என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறேன். இது அரசியல் இயக்கமல்ல. ஆனால் அரசியலைத் தூய்மைப்படுத்தவும் பயன்படும்.

தலைவர் வைகோ என் உள்ளத்தில் பல அடிப்படைக் கொள்கைகளை விதைத்துவிட்டார். அது இன்று மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை. என் தலைவரா, அவர் விதைத்த கொள்கையா என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது.

வைகோ
வைகோ

கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு