Published:Updated:

`கொரோனா பாதித்த டாக்டர்களுக்கே மருந்து இல்லை!' -அதிர்ச்சி கொடுத்த கோவை வாட்ஸ்அப் குரூப்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை

கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கே மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவையில் 126 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. அதேபோல, கிணத்துக்கடவு அருகே ஐந்து வயதுக் குழந்தைக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவை
கோவை

மேலும், ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்துவந்த 61 வயதுத் தன்னார்வலருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர், கோவையில் பல போலீஸாருக்கு உணவளித்ததுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோவையில் அனைத்து மக்களுமே மாஸ்க் அணிவது கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர்களுக்கே மருந்துகள் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், ‘தங்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கப்படுவதில்லை. எனவே, அந்த மருந்தை விரைந்து வழங்குங்கள்’ என்று மருத்துவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் கேட்டுள்ளனர்.

வாட்ஸ் அப் உரையாடல்
வாட்ஸ் அப் உரையாடல்

மருந்து கொடுக்கவேண்டிய உயரதிகாரிகள், மருந்து கேட்ட மருத்துவர்களை, `ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஸ்டாக் இல்லை’ என்று சொல்லி கடிந்துகொண்டதுடன், அவர்களை அந்த வாட்ஸ் அப் குழுவிலிருந்தும் நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் காட்டுத் தீயாகப் பரவியவுடன் மூத்த மருத்துவர் ஒருவர் தன் கைவசம் இருந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்குக் கொடுத்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கேட்டபோது, ``ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஸ்டாக் இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை. கொரோனா பாதித்த அனைவருக்குமே தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியர் ராசாமணி
ஆட்சியர் ராசாமணி

மருத்துவ மாணவர்களுக்குத் தேவைகளைச் செய்து கொடுப்பதில், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சில தவறுகளைச் செய்துவிட்டது. அதனால்தான், இப்படிப்பட்ட தகவல்கள் எல்லாம் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியுள்ளேன்” என்றார். இந்தநிலையில் கோவையில் மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு