Published:Updated:

தலைநகரில் கழிப்பிடமின்றி தவிப்போம்... சிறந்த மாநில விருது பெறுவோம்!

``எங்கள் பகுதியிலிருந்த ரெண்டு கழிப்பிடங்களையும் இடிச்சி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. ஆனா, புதுசா கழிப்பிடம் கட்டித்தரவே இல்லை!’’

ThisisMyToilet
ThisisMyToilet

மத்திய அரசின் அறிக்கையின்படி தமிழகம் 100 சதவீதம் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம். அதாவது, தமிழகத்தில் உள்ள அனைவருமே கழிவறையைத்தான் பயன்படுத்துகின்றனர் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், நிஜத்தில் நடப்பது வேறு.

மத்திய அரசின் தகவல்
மத்திய அரசின் தகவல்

தமிழகம் முழுவதும் வேண்டாம், தலைநகர் சென்னையில் என்ன நிலைமை என்பதைத் தெரிந்துகொள்வோம். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்றுவரை திறந்தவெளி கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். எல்லோரும் சொல்லும் ஒரே காரணம், கழிப்பறை வசதி இல்லை என்பதுதான்.

பெருநகரத்தில் வாழும் பெரும்பாலோனோரின் வீடுகள் மிகவும் சிறியவை. அவற்றில் தனியே கழிவறை கட்டுவதற்கான வசதிகள் கிடையாது. இவர்கள் அனைவரும் பொதுக்கழிப்பிடங்களை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான பொதுக்கழிப்பிடங்கள் மூடிக்கிடக்கின்றன. அரிதினும் அரிதாகச் சில கழிப்பிடங்கள் திறந்திருந்தால், அவை பயன்படுத்த முடியாதளவுக்கு படு மோசமாக இருக்கின்றன.

பொது கழிவறை
பொது கழிவறை

சென்னை புளியந்தோப்பையொட்டியுள்ள கன்னிகாபுரம் பகுதியை எடுத்துக்கொள்வோம். இங்கு கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 150 வீடுகளில் கழிவறை கிடையாது. இந்தப் பகுதியில் இரண்டு பொதுக்கழிப்பிடங்கள் இருந்துள்ளன. இவை இரண்டுமே கடந்த 6 வருடங்களாகப் பயன்படுத்த முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

இடிக்கப்பட்ட கழிவறை
இடிக்கப்பட்ட கழிவறை

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த இரண்டு கழிப்பிடங்களையும் புதிதாகக் கட்டிக்கொடுப்பதற்கு இடித்துள்ளனர். அப்போது இடித்த கட்டடம் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பொதுக்கழிப்பிடம் என்று எதுவுமே கிடையாது.

இடிக்கப்பட்ட கழிவறை
இடிக்கப்பட்ட கழிவறை

பெண்கள் உட்பட அனைவருமே ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள செடி கொடி மற்றும் புதர் மறைவுகளில்தான் இயற்கை உபாதைகளைக் கழித்து வருகின்றனர். இல்லையென்றால் A பிளாக் பகுதியிலிருந்து B பிளாக் பகுதிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அங்குள்ள கழிப்பிடங்களும் பெரும்பாலும் மூடியே காணப்படுகின்றன.

B பிளாக் கழிவறை
B பிளாக் கழிவறை
அரவிந்த் - பகுதி வாசி
அரவிந்த் - பகுதி வாசி

இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் அரவிந்த் மற்றும் அருண் ஆகியோர், "காலனி வீடுங்கதான் இங்க அதிகம். மொத்த லயன் வீட்டுக்கும் ஒரு கழிவறைதான் இருக்கும். பெரும்பாலானவங்க வீட்டுல கழிவறைகளே இருக்காது. எல்லோருமே ரயில்ரோடு பக்கமா இருக்கும் புதருங்க பக்கத்துலதான் போக வேண்டியிருக்கு. எங்கள் பகுதியிலிருந்த ரெண்டு கழிப்பிடங்களையும் இடிச்சி ரெண்டு வருஷம் ஆகப் போகுது. ஆனா, புதுசா கழிப்பிடம் கட்டித்தரவே இல்லை. பேருக்கு இருந்த கழிப்பிடம்கூட இப்போ கிடையாது. கழிவறைகள் இல்லாததால் எங்கள் பகுதி மக்கள் ரொம்ப சிரமப்படுறாங்க. இதில் ரொம்பவே கஷ்டப்படுறது பெண்கள்தான். அரசு சீக்கிரம் எங்கள் பகுதிக்குக் கழிப்பிடம் கட்டிக்கொடுக்க வேண்டும். அப்படிக் கட்டிக் கொடுத்தால் இந்தப் பகுதி மக்களே நல்ல முறையில் பராமரிப்போம்" என்று உறுதி கூறினர்.

நகோமி - பகுதி வாசி
நகோமி - பகுதி வாசி

கன்னிகாபுரம் A பிளாக் பகுதியில் வசிக்கும் தேவி மற்றும் நகோமி, "பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் அனைவருமே திறந்த வெளியில்தான் செல்ல வேண்டியுள்ளது. நடக்கவே முடியாத வயதானவர்களும்கூட அங்கேதான் செல்ல வேண்டும். திறந்த வெளியில் செல்ல வேண்டும் என்பதால், பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் செல்ல வேண்டியுள்ளது. அப்படிச் செல்லும்போது திருட்டு, பாலியல் தொந்தரவுகள் பயம் அதிகம் உள்ளது. மழை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறோம். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கு ஏன் அடிப்படை வசதியான கழிப்பிடத்தைக்கூட இந்த அரசாங்கம் கட்டிக்கொடுக்க மறுக்கிறது?" என்று கண்கலங்கினர்.

இந்த பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேசியபோது, "சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க சென்னை மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தப் பகுதிகளில் கழிப்பிடங்கள் இல்லாதது குறித்து எங்களுக்கு இதுவரை எந்தப் புகார்களும் வரவில்லை. அங்கு, இடித்த கழிப்பிடங்கள் ஏன் மீண்டும் கட்டப்படவில்லை என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதில், தவறு ஏதும் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பகுதியில் உடனடியாகக் கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்படும். சென்னையில் உள்ள அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் சிறந்த முறையில் பராமரிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையின் எந்தப் பகுதியில் பொதுக்கழிப்பிடம் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தாலும் அல்லது கழிப்பிடம் தேவை இருந்தாலும் எங்களுக்கு நேரில் வந்து புகார் மனுக்கள் அளிக்கக் கூட தேவையில்லை. `நம்ம சென்னை' செயலியின் மூலம் ஒரு புகார் அளித்தாலே உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பிடப் பிரச்னை மட்டுமன்றி, தங்கள் பகுதியில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்னைகளையும் `நம்ம சென்னை' செயலியின் மூலம் புகார் செய்யலாம். அந்தப் பிரச்னைகளை உடனடி தீர்வு காண சென்னை மாநகராட்சி எப்போதும் தயாராகவுள்ளது" என்றார்.

இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் தூய்மையைப் பேணிக் காப்பதில் சிறந்த மாநிலமாக 2019-ம் ஆண்டு தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் அறிக்கையின்படி 100 சதவிகிதம் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாகத் தமிழகம் கண்டறியப்பட்டுள்ளது. நிஜத்தில் தமிழகத்தின் தலைநகரிலேயே திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தொடுகிறது என்றால், ஒட்டுமொத்த தமிழகத்திலும் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். அப்படியானால், இந்த ஆய்வுகள் எப்படி நடத்தப்பட்டன, எதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்குத் துரிதமான நடவடிக்கைகளால் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இல்லாவிடில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்குச் சாதகமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு இப்படிப் பல விருதுகள் வழங்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியினர் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடும்.

ஒரு கழிவறையை பயன்படுத்துவோர் விவரம்
ஒரு கழிவறையை பயன்படுத்துவோர் விவரம்
தூய்மையான இந்தியா மகாத்மா காந்தியின் கனவு மட்டுமல்ல; அதுவே ஒவ்வொரு இந்தியனின் ஆசையும்கூட.