Published:Updated:

``பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதற்கே கைது என்றால், அதை எதிர்கொள்ளத் தயார்!" - பாலபாரதி

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
News
முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

``தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்காக குரல் கொடுத்தால் கைது நடவடிக்கை இருக்கும் என்றால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்'' என்கிறார் பாலபாரதி.

திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே இயங்கி வரும் சுரபி நர்சிங் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில் கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதிமுருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமனறத்தில் ஆஜராகி பின்னர், பழனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் ஜோதிமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

அப்போது அங்கு வந்த வடமதுரையைச் சேர்ந்த சங்கவி என்ற இளம்பெண், அவருடைய வழக்கறிஞர் தெய்வேந்திரனுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத்தினரிடம், தனக்கு நேர்ந்த கொடுமைக்காக மாதர் சங்கத்தினர் குரல் கொடுக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாலபாரதி தரப்பினர் தன்னை அவதூறாகப் பேசித் தாக்கினர் என தெய்வேந்திரன் தாடிக்கொம்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாலபாரதி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து பாலபாரதி, ஜானகி, ராணி உள்ளிட்ட 6 பேர், ``புகார்தாதர் தேவையின்றி பிரச்னையை உருவாக்கி பொய் புகார் அளித்துள்ளார். எனவே இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், ``வரும் காலங்களில் இதுபோல் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடமாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்" எனக் கூறி வழக்கை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியிடம் பேசினோம். ``நீதிமன்ற வளாகத்திற்கு வெளியேதான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கறுப்பு கோட் அணிந்து வந்த ஒரு வழக்கறிஞர்தான் எங்களிடம் தகராறு செய்தார். இதை அங்கிருந்த பலரும் பார்த்தனர். அந்த வழக்கறிஞர் பெண்களிடம் அநாகரிகமாக பேசியது, தாக்க முற்பட்டது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தோம். அதற்கு மறுநாள் அந்த வழக்கறிஞர் பா.ஜ.க வழக்கறிஞர் அணி சார்பில் எஸ்.பி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்து எங்கள் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில் என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் என்மீது உள்பட மொத்தம் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது எஸ்.பி எங்களை சமாதானமாக போகச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது சம்பந்தமில்லாமல் ஒரு வழக்கறிஞர் வரவேண்டிய அவசியம் என்ன, பிரச்னை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வந்துள்ளார். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவர் கொடுத்த புகாருக்கு எங்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?' என எஸ்.பியிடம் கேட்டோம். ஆனால் எங்கள் மீது பிணையில் வரமுடியாதபடி வழக்குப் பதிவு செய்தனர்.

எங்கள் வழக்கறிஞர் பொய் வழக்கு எனக் கூறி நீதிமன்றத்தை நாடினார். எங்கள் மீது அன்பு கொண்டுள்ள நண்பர்கள் மூலமாகத்தான் ஜாமீன் கேட்கப்பட்டுள்ளது. டிஜிபியிடம், ``எங்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது என நாங்கள் கொடுத்த புகாருக்கு எஸ்.பி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என முறையிட்டோம். நடவடிக்கை இல்லை.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்காக குரல் கொடுத்தால் கைது நடவடிக்கை இருக்கும் என்றால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்'' என்றார்.