Published:Updated:

`பேசிக்கொண்டிருக்கும் போதே துப்பாக்கியுடன் வந்தார்!’ - சுங்கச்சாவடி நிமிடங்களை விவரிக்கும் பாலபாரதி

கரூர், மணவாசி சுங்கச்சாவடியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி பங்கேற்றுள்ளார். அதை முடித்துக்கொண்டு ஈரோட்டில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகக் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் பயணித்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில், பாலபாரதியின் கார் நின்றுள்ளது.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

உடனடியாக தன் முன்னாள் எம்.எல்.ஏவின் அடையாள அட்டையை சுங்கச்சாவடி ஊழியர்களிடம் காட்டியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள், பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன் பாலபாரதியின் கார் ஓட்டுநரிடம் மரியாதை குறைவாகப் பேசியுள்ளனர். தொடர்ந்து சில ஊழியர்கள் காரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் சுங்கச்சாவடியிலிருந்த பாதுகாவலர் துப்பாக்கியுடன் வந்து பாலபாரதியின் கார் முன்பு நின்றுகொண்டு 30 நிமிடங்கள் அவரின் காரை விடாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இது பற்றித் தகவல் அறிந்த சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள புறநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பாலபாரதியை அனுப்பிவைத்துள்ளனர்.

பாலபாரதி
பாலபாரதி

முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியிடம் துப்பாக்கி வைத்து வாக்குவாதம் செய்த சம்பவம் அவரது கட்சியினரைக் கொதிக்கச் செய்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் தொலைபேசி மூலம் பேசிய பாலபாரதி, ``நான் ஈரோடு சென்றுகொண்டிருக்கும்போது மணவாசியில் ஒரு சுங்கச் சாவடி வந்தது. அது நான்கு வழிச் சாலை கிடையாது, இரண்டு வழியும் இல்லை அப்படியிருக்கையில் இங்கு எதற்காகச் சுங்கச்சாவடி அமைத்துள்ளனர் என விசாரித்துக்கொண்டே சென்றோம்.

துப்பாக்கி முனையில் பாலபாரதிக்கு மிரட்டலா?!- கரூர் சுங்கச்சாவடி சர்ச்சை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து கேட்டுக்கு முன்னால் எங்கள் கார் நின்றது. உடனடியாக முன்னாள் எம்.எல்.ஏவுக்கான அடையாள அட்டையைக் காண்பித்தோம். ஆனால், `அதெல்லாம் பெற முடியாது’ என ஆரம்பத்திலிருந்தே மரியாதை குறைவாகப் பேசினார்கள் ஊழியர்கள். பிறகு என் ஓட்டுநர், ‘சுங்கச்சாவடியின் மேனேஜர் எங்கே?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள் ‘மேனேஜரெல்லாம் இல்லை’ என்று கூறினார்கள், நாங்கள் ஊழியர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் சுங்கச்சாவடியின் உள்ளே இருந்து ஒரு பாதுகாவலர் பெரிய துப்பாக்கியுடன் வந்து கேட்டுக்கு முன்னால் நின்றார்.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

அதைப் பார்த்ததும், ‘இப்படி பகல் நேரத்தில் துப்பாக்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டேன். இந்தச் சம்பவங்கள் சுமார் அரை மணி நேரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்குள் காவலர்கள், எங்கள் கட்சித் தோழர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் நாங்கள் அவசரமாகப் புறப்பட்டு ஈரோடு சென்றுவிட்டோம். தற்போது பிரச்னை என்னவென்றால், நான் செல்லும் அனைத்து இடங்களிலும் சுங்கச்சாவடிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

அவர்கள் பயணிகளிடம் மிகவும் மரியாதை குறைவாகப் பேசுகிறார்கள். மேலும் ஃபாஸ்ட் டாக் (Fast tag) எடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அதுவும் பெரிய நகரங்களில் இந்தப் பிரச்னை மிக அதிகமாகவே உள்ளது. முன்னதாக ரூ.40 வசூலித்த இடங்களில் தற்போது ரூ.80, ரூ.150 என வசூலிக்கிறார்கள். இதையெல்லாம் விட வங்கிகளுக்குப் பணம் கொண்டு செல்லும்போது கூட பெரும்பாலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால், இந்தச் சுங்கச்சாவடியில் துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர் பட்டப்பகலில் கேட் முன் வந்து நிற்கவேண்டிய அவசியம் என்ன. அவர் எங்கள் முன்பு துப்பாக்கியைக் காட்டவில்லை. ஆனால், அவர் நின்ற தொனி எங்களை அச்சுறுத்தும்விதமாக இருந்தது. அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருந்தாலுமே பொது இடத்தில் அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

இரவு நேரங்களில் பணம் களவாடப்படும் என்பதற்காகத் துப்பாக்கி வைத்திருக்கலாம். ஆனால், காலையில் எதற்காக வைத்திருக்க வேண்டும். அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் இதேபோன்று ஆயுதம் ஏந்திய மற்றும் சமூக விரோதக் கும்பல் இருக்கிறார்கள். நிறைய பணம் வருவதால் சுங்கச்சாவடி நிர்வாகமே சமூக விரோதிகளை வைத்துள்ளது. நேற்று மாலை முதல் எனக்கு நிறைய போன் கால்கள் வருகின்றன. அவர்கள் கூறுவதைக் கேட்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. காரில் செல்லும் பெண்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாகவும், ஊழியர்கள் எப்போது ரசீது கொடுக்கிறார்களோ அப்போதுதான் வாங்க முடியும் எனப் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆம்புலன்ஸுக்குக் கூட வழி விடாமல் பணம் செலுத்திய பின்னர்தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்களாம். ஆனால் மணல் லாரிகளெல்லாம் வந்தால் நிற்பதுகூட இல்லை என்று எனக்குத் தகவல் வந்துள்ளது. நேற்று நடந்த விவகாரத்தில் ஊழியர்கள் மீது புகார் அளித்து எந்தப் பயனும் இல்லை. நான் மாவட்ட நிர்வாகம் மீதும் அரசு மீதும்தான் தவறு சொல்வேன். மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் டோல் கேட்டுகள் உள்ளன. அவர்களும் அந்த வழியாகச் செல்வார்கள், ஒருவேளை அவர்களுக்கு இந்த விஷயங்கள் பற்றிப் புகார் வராமல் இருக்கலாம். ஆனால், சமீபகாலமாக ஊடகங்களில் இதுபோன்ற பல விஷயங்கள் பற்றிக் கூறப்படுகிறது. அப்போதாவது இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆயுதங்கள், துப்பாக்கியெல்லாம் எப்படி அவர்கள் வைத்திருக்கலாம்.

பாலபாரதி
பாலபாரதி
File Photo

சுங்கச்சாவடியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது கூட கலெக்டர்களுக்குத் தெரியாது. சுங்கச்சாவடியினர் எந்த நடைமுறையில் இயங்குகிறார்கள் என்றே தெரியவில்லை. கேட்டால் நாங்கள் மத்திய அரசாங்கத்தினர் மாநில அரசுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார்கள். கேரளா போலத் தமிழகத்திலும் டோல் கேட் என்பது இல்லாமல் இருக்க வேண்டும். சாலை போட்ட அடுத்த சில வருடங்களில் அதற்கான தொகையை எடுத்துவிட்டார்கள். இருந்தும் தொடர்ந்து வரி செலுத்த வேண்டியநிலை உள்ளது. எனவே, அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் நேரடியாக மாநில அரசே கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு