Published:Updated:

`விரைவில் வெளிவரும் தாமிரபரணி நாகரிகம்!' - தொடங்கியது ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வுப் பணிகள்

ஆதிச்சநல்லூர்
News
ஆதிச்சநல்லூர்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகளும் ஆதிச்சநல்லூரில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகளும் தொடங்கியுள்ளன.

`உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தொடர் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில், ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளுக்காக ரூ.28 லட்சமும், சிவகளை அகழாய்வுப் பணிகளுக்காக ரூ.32 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்படி, ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே கடந்த 1876, 1902, 1905, 2004, 2005 என இதற்கு முன்னர் வெளிநாட்டினர் மற்றும் மத்திய தொல்லியல் துறை சார்பாக 5 கட்ட ஆய்வுகள் நடந்தன.

அகழாய்வுப் பணி தொடக்கம்
அகழாய்வுப் பணி தொடக்கம்

இந்நிலையில், தமிழக தொல்லியல்துறை சார்பில் 6-ம் கட்ட அகழாய்வும் இதன் அருகேயுள்ள சிவகளையில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகளும் கடந்த மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும் இப்பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கால் இந்தப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், இன்று இந்த அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகளைத் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் நாகரிகம் குறித்து உலக மக்களிடம் ஏற்கெனவே எடுத்துரைக்கப்பட்ட நிலையில், இதன் அருகே உள்ள சிவகளையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிப்பட்ட பல முதுமக்கள் தாழிகளை அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மாணிக்கம் கண்டறிந்தார். இப்பகுதியில் மிகப்பழமையான கற்கள் உள்ளிட்ட பல தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை அதிகாரிகள், அகழாய்வு குழுவினர்
தொல்லியல் துறை அதிகாரிகள், அகழாய்வு குழுவினர்

இதுகுறித்து ஆசிரியர் மாணிக்கம் கூறுகையில், ``சிவகளையைப் பொறுத்தவரையில் பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், சுண்ணாம்பிலான முதுமக்கள் தாழிகள், கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள், தமிழ் வட்டெழுத்துகள், மேட்டு கற்குடி பகுதிகள், தாமிரபரணி பாய்ந்தோடிய பாதைகள் என அடுக்காகப் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் இங்கு புதைந்து கிடக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு அதிகமான பாறைக் கிண்ணங்களும் காணப்படுகின்றன. அத்துடன் இரும்புத்தாதுக்கள், குவார்ட்ஸ் வகை கற்களும் இங்கு அதிகம் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக இங்கு ஆய்வு செய்தால் மிகப்பெரிய தொல்லியல் களம் மறைந்து கிடப்பதையும் அகழாய்வினால் கீழடியைப் போன்றே தாமிரபரணி நாகரிகம் குறித்த தகவல்கள் வெளியாகும்” என்றார்.

இதுகுறித்து தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் பேசுகையில், ``சிவகளையில் இன்று தொடங்கியுள்ள அகழாய்வு பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும்.

அகழாய்வுப் பணி தொடக்கம்
அகழாய்வுப் பணி தொடக்கம்

இந்தப் பணியில் 15 அரசு அதிகாரிகளும், 100-க்கும் மேற்பட்ட ஊர் மக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்தப் பகுதியில் அகழாய்வு செய்யும்போது, பெரிய அளவில் அதன் வரலாறு வெளிப்படும்” என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் தொல்லியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊர் மக்கள் ஆகியோர் பெரிதும் உற்சாகத்தில் உள்ளனர்.