Published:Updated:

சாத்தான்குளம்: `வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!’ - இனி என்ன நடக்கும்?

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ்
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ்

நீதிமன்றம் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு காவல்துறை செயல்பட வேண்டும். ஆனால், அவை எதையும் பின்பற்றாமல் செயல்பட்ட சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கிறது. இது காவல்துறைக்கு அவமானம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டதில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்கள்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்த நிலையில், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நடத்திய விசாரணைக்கு போலீஸார் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. இது நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றதும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் ஆவணங்கள், தடயங்களைப் பாதுகாத்திடும் வகையில் வருவாய்த்துறை அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டனர்.

சாத்தான்குளம்: `நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்' -நம்பிக்கையில் ஜெயராஜ் குடும்பம்

நீதிமன்ற உத்தரவுப்படி தாசில்தார் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 17 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், வருவாய்த்துறையின் கண்காணிப்பில் சாத்தான்குளம் காவல் நிலையம் உள்ளது.

ஓய்வு பெற்ற அதிகாரியின் ட்விட்
ஓய்வு பெற்ற அதிகாரியின் ட்விட்

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான டாக்டர் என்.சி. அஸ்தானா, ``1861-ல் இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாததின் காரணமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது காவல்துறைக்கு பெரும் அவமானமான சம்பவம்” எனத் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் மரியாதையை சாத்தான்குளம் ஸ்டேஷனில் பணியாற்றியவர்கள் சீர்குலைத்து விட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இது பற்றி தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டதற்கு, ``சாத்தான்குளம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு மட்டும்தான் வருவாய்த்துறைக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இது இந்த வழக்கு விசாரணைக்காக மட்டுமே பொருந்தும். மற்றபடி, புகார் பெறுதல் சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல் போன்ற காவல் நிலையத்தின் வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்" என்றார்.

இந்த விவகாரம் குறைத்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மாவிடம் பேசினோம். ``காவல்துறை என்பது சேவைப் பணி. அவர்கள் நீதிமன்றம் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும். அதை மீறி, தான்தோன்றித்தனமாகச் செயல்படும்போது அதைத் தடுக்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது. 

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

காவல்துறையினரைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதற்காகவே நீதிமன்றம் இந்தக் கண்காணிப்புப் பணியை வருவாய்த்துறையின் வசம் ஒப்படைத்திருக்கிறது. நிச்சயமாக இது காவல்துறையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாகவே பார்க்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு