Published:Updated:

இறால்களை வாங்க மறுக்கும் ஏற்றுமதியாளர்கள்! -மீன் பிடிப்பைத் தள்ளிப்போடும் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் ( உ.பாண்டி )

வறுமையில் வாடிய மீனவர்கள், மீன்பிடி தடைக்காலத்துக்கு முன்னதாகவே தாங்கள் மீன்பிடிக்கச் செல்வதை நிறுத்திவிட்டதால், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலத்தை 60 நாள்களில் இருந்து 45 நாள்களாக குறைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மீன்பிடி தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களைக் கொள்முதல் செய்ய மறுப்பு போன்ற காரணங்களால் அரசு அறிவித்துள்ள நாளில் மீன்பிடிக்கச் செல்வதில்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்
உ.பாண்டி

கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீன் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 60 நாள்களுக்கான தடைக்காலமும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கியது. இதனால் ஒட்டுமொத்த மீனவர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து ஊரடங்கு தடையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கான தடை விலக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

விசைப்படகுகள்
விசைப்படகுகள்
உ.பாண்டி

ஆனால், ஊரடங்கினால் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டாலும் மீன் இனப்பெருக்கத்துக்கான தடை நீடித்தது. இதனால் சென்னை பழவேற்காடு துவங்கி கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி வரையிலான பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் வறுமையில் வாடிய மீனவர்கள், மீன்பிடி தடைக்காலத்துக்கு முன்னதாகவே தாங்கள் மீன்பிடிக்கச் செல்வதை நிறுத்திவிட்டதால், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலத்தை 60 நாள்களில் இருந்து 45 நாள்களாகக் குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு ஜூன் 15 வரை விதிக்கப்பட்டிருந்த தடைக்காலத்தை மே 31-ம் தேதியுடன் முடித்துக்கொள்ள முடிவெடுத்தது. இதையடுத்து, ஜூன் முதல் தேதியிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் விசைப்படகு மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டுவரும் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்
மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் தயாராகி வந்தனர். ஆனால், மீனவர்களிடம் இறால் மீன்களைக் கொள்முதல் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போதைக்கு இறால் மீன்களை வாங்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் எஸ்.ஏ. மகத்துவம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கிய ஏராளமான விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. இதைச் சரிசெய்யும் பணி இன்னும் முடியவில்லை. மேலும், போக்குவரத்து தொடங்காததால் வெளியூர்களில் உள்ள மீன்பிடி தொழிலாளர்கள் ராமேஸ்வரம் திரும்புவதில் சிரமம் உள்ளது. இவற்றுடன் அரசு அறிவித்த நாளில் கடலுக்குச் செல்பவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை வாங்க ஏற்றுமதி நிறுவனங்கள் மறுத்துள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு ஜூன் 1-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 15-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்வது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு