Published:Updated:

`மறப்போம், மன்னிப்போம்!’ - ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிகளை வழங்கிய ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள் உதவி
ரஜினி ரசிகர்கள் உதவி

நடிகர் ரஜினியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூர் சிறுவனைச் சந்தித்த ரசிகர்கள், அவனின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துள்ளனர்.

நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

`சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது’ என்று போன் அழைப்பு 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. அதைக்கேட்ட ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உஷாரான சென்னை தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் ரஜினியின் வீட்டுக்குச் சென்றனர். சோதனை நடத்தியபோது வெடிகுண்டு சிக்கவில்லை. அதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிந்த பிறகே போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் நிம்மதியடைந்தனர்.

ரஜினி ரசிகர்கள்
ரஜினி ரசிகர்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் தேனாம்பேட்டை போலீஸார், மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரித்தனர். போலீஸாரின் விசாரணையில் மிரட்டல் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திலிருந்து வந்தது தெரியவந்தது. மேலும், மிரட்டல் விடுத்தது 15 வயதுச் சிறுவன் என்று தெரிந்தது. உடனடியாகச் சிறுவனின் முழுவிவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு மனநல பாதிப்பு இருப்பதாக அவனின் பெற்றோர் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனை எச்சரித்த போலீஸார், அவனின் பெற்றோரிடம் எழுதிவாங்கிவிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உதவிகளை வழங்கிய ரசிகர்கள்

இந்தச் சூழலில் சிறுவனின் குடும்பத்தினரை கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரவி மற்றும் சிலர் இன்று சந்தித்தனர். அப்போது சிறுவனின் தந்தை, தானும் ஒரு ரஜினி ரசிகன்தான் என்று கூறினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், மிரட்டல் விடுத்த சிறுவனின் குடும்ப வறுமையைத் தெரிந்ததும் உதவிகளை வழங்கினர். பின்னர் அந்தக் குடும்பத்தினருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ரவி என்பவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `மறப்போம், மன்னிப்போம் மனநிலை பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அதையும் செய்வோம் #மக்கள்தலைவர் வழியில் நம் பயணம்’ என்று பதிவு செய்துள்ளார்.

 `பூஜையில் நடந்த தவறால்  இறந்துவிட்டார்’ -ரூ.7 லட்சம் கேட்டு சென்னை ஜோதிடரைக் கடத்திய கும்பல்
சிறுவனின் தந்தை
சிறுவனின் தந்தை

சிறுவனின் தந்தை பேசிய வீடியோவில், ``என்னுடைய மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன். மன்னித்துவிடுங்கள் சார். நானும் உங்கள் ரசிகன்தான். உங்களின் எந்தப் படம் என்றாலும் நான் பார்த்துவிடுவேன். அண்ணாத்த படம் வந்தாலும் பார்ப்பேன். வீட்டிலிருந்த செல்போனை எடுத்து அப்படிச் செய்துவிட்டான். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கைகளைக் கூப்பியபடி கூறுகிறார்.

நடிகர் ரஜினியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூர் சிறுவனுக்கு ரசிகர்கள் உதவிகளைச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு