Published:Updated:

ஆட்டோ ஓட்டுநர் டு போலி டி.ஐ.ஜி; மோசடி! - உடந்தை எனப் பெண் இன்ஸ்பெக்டர் மீதும் வழக்கு பதிவு

போலி டி.ஐ.ஜி
போலி டி.ஐ.ஜி

வடமாநில போலீஸ் டி.ஐ.ஜி எனக் கூறி நாகையில் நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்ததாக போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகை புதிய கடற்கரைச் சாலையில், நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் வீடு இருக்கிறது. அதனருகில் தனியாருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டுவருகிறது. கடந்த 24 -ம் தேதி இரவு கடைக்குப் பொருள்கள் வாங்க காரில் டிப்டாப் நபர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் கடையில்  வாங்கிய பொருள்களுக்குக்  கடை ஊழியர் பில்லைக் கொடுத்து பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் பணம் தராமல், தனது காரில் வந்து கார்டு மூலம் பணத்தைப்  பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து கடையின் கேஷியர் விக்னேஷ்வரன் கார்டு இயந்திரத்துடன் காருக்கு அருகில் சென்றிருக்கிறார்.

போலி டி.ஐ.ஜி
போலி டி.ஐ.ஜி

அப்போது  காருக்குள் இருந்த நபர் தன்னை மகேந்திர வர்மா என்று அறிமுகப்படுத்தியதுடன் தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி எனவும், குஜராத்தில் டி.ஐ.ஜி-யாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், `நாகை எஸ்.பி ஜவகர் எனது ஜூனியர்தான். நான் கூப்பிட்டால் உடனே வருவார். அப்படியிருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா?’ என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.  

இதில் சந்தேகமடைந்த விக்னேஷ்வரன் இது குறித்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் வெளிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஐ.பி.எஸ் அதிகாரி என மிரட்டியவரைத்  தேடிவந்தனர்.

கடந்த  28 -ம்தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும்  ரவி என்பவர், ``காரில் வந்த நபர் ஒருவர் 1,000 ரூபாய்க்குப் பழங்கள் வாங்கிக்கொண்டு டி.ஐ.ஜி எனக் கூறிப் பணம் தராமல் மிரட்டிச் சென்றார்’’ என வெளிப்பாளையம் போலீஸில் புகார் செய்தார்.

இரண்டு புகார்களையும் பெற்றுக்கண்ட வெளிப்பாளையம் காவல் நிலையத்தினர் இரு சம்பவங்களிலும் ஒரே நபர்தான் மிரட்டிச் சென்றிருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டு அவரைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று (31.08.2021) மதியம் நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக அந்த நபர் தப்பிச் செல்வதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை மடக்கி, அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த  நபர் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, ஜமீன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேந்திர வர்மா  என்பதும், அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

போலி நாக மாணிக்கக்கல்லை விற்க முயற்சி! தலைமறைவான கும்பலில் ஒருவர் கைது!

இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவந்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த கவிதா என்பவரிடம் ஓட்டுநராக இருந்திருக்கிறார். கவிதா பணி மாறுதல், பணி உயர்வு பெற்று வேலூர், வாணியம்பாடி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை  போன்ற இடங்களில் ஆய்வாளராக வேலை பார்த்தபோது அவருடன் டிரைவராக இருந்துவந்திருக்கிறார்.

போலி டி.ஐ.ஜி - பெண் இன்ஸ்பெக்டர்
போலி டி.ஐ.ஜி - பெண் இன்ஸ்பெக்டர்

கணவரைவிட்டுப் பிரிந்து, தற்சமயம் நாகை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவில் காவல் ஆய்வாளராக இருக்கும் கவிதா, மகேந்திர வர்மாவுடன் சேர்ந்து வாழ்ந்துவருவதாகக் கூறப்படுகிறது. ஆய்வாளர் கவிதா, `மகேந்திர வர்மா IPS என்றும், இவருடைய தந்தை அலோக் வர்மா IPS என்றும், மகேந்திர வர்மா வடமாநிலத்தில் டி.ஐ.ஜி-யாக வேலை பார்த்துவருவதாகவும்’ பலரிடம் கூறி அறிமுகப்படுத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையிலுள்ள சிலரிடமும் டபுள் புரொமோஷன் வாங்கித் தருவதாகக் கூறி மகேந்திரவர்மா கூறிவந்ததாகவும் தெரியவந்திருக்கிறது.

எனவே மகேந்திர வர்மாவைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். மேலும் இந்த மோசடியில் இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதால் அவரிடமும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்ஸ்பெக்டர் கவிதா மீது துறைரீதியிலான விசாரணை நடைபெற்றுவருகிறது என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு