Published:Updated:

`போலி பாஸ்கள் மூலம் சட்டவிரோத செயல்கள்..!’- ஊரடங்கால் கலங்கும் மருந்து வணிகர்கள்

மருந்து
மருந்து

ஊரடங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை முறைப்படுத்த வழங்கப்படும் பாஸ்களில் நடக்கும் முறைகேடுகளும் அதன் மூலம் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களும் அனைத்துத் தரப்பு மக்களையும் கவலை கொள்ளச் செய்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அத்தியாவசியத் தேவைகள் அன்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்தத் தடை உத்தரவு அமலில் உள்ளது, குறிப்பாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாஸ்
பாஸ்

ஊரடங்கு நாள்களில் மருந்துப்பொருள்களைக் கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு, மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் சீரியல் நம்பர்களுடன் கூடிய பாஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிலர், முத்திரையுடன் வெளியாகும் இந்த பாஸை போலியாக தயாரிப்பதாகவும் சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும், இந்த பாஸைப் பயன்படுத்தி சில இடங்களில் மது பாட்டில்களின் விநியோகமும் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின.

`சினிமா பிரபலங்களுக்கு டோர் டெலிவரியில் மதுபானம்!' - துணை நடிகர் சிக்கிய பின்னணி #Lockdown

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருந்து எடுத்துச் செல்லும் பணிகளுக்கு சுமார் 5,000 பாஸ் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் இந்த பாஸ்களைப் போன்று போலி பாஸ்களைத் தயாரிப்பதாகவும் சுமார் 300 போலி பாஸ்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.

`போலி பாஸ்கள் மூலம் சட்டவிரோத செயல்கள்..!’- ஊரடங்கால் கலங்கும் மருந்து வணிகர்கள்

இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். ``லாக் டெளன் காலம் தொடங்கப்பட்டது முதலே மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மூலமாகவும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலமாகவும் மருந்துகள் தடை இன்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்றுவரை மருந்துப்பொருள்கள் தங்குதடையின்றி அனைவருக்கும் கிடைக்கிறது.

மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்கிறபோது பல இடங்களில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சோதனைகள் இருந்தது. சில நேரங்களில், சில இடங்களில் எங்கள் பணியாளர்கள் சில இடர்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் மருந்துகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களுக்கு தனியாக பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனினும் காவல்துறை மூலமாகவோ வருவாய்த் துறை மூலமாகவோ பாஸ்கள் வழங்கப்படவில்லை.

லாரி
லாரி
Representational Image

பின்னர் திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக அம்மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட அட்டை இருந்தால் அனுமதி வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின்னர் இது படிப்படியாக சில மாவட்டங்களில் இது போன்ற உத்தரவு வந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் பாஸ்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என காவல்துறையினர் வாய்மொழியாக தெரிவித்தனர், இந்த நிலையில்தான் பாஸ்கள் ஒருசிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. மருந்து என்ற பெயரில் தவறான, வேறு எந்தப் பொருள்களும் எடுத்துச் செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கமும்.

இதனால், பாஸ் யார் வழங்கினாலும், ஒரு கணக்கீடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எந்த பாஸ் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை சீரியல் நம்பர் மூலம் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே தவறு செய்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும். சீரியல் நம்பர் இல்லாத பாஸ்கள் தவறான விஷயங்களுக்கு வழிவகை செய்யும்” என்றார்.

Representational Image
Representational Image

மேலும், சிலர் போலி பாஸ்களை வைத்து சட்டவிரோதமாக செயல்படுவதால், இந்த லாக் டெளன் நேரத்திலும் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள். ஒருபுறம் ஊரடங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை முறைப்படுத்த வழங்கப்படும் பாஸ்களில் நடக்கும் முறைகேடுகளும் அதன் மூலம் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களும் அனைத்துத் தரப்பு மக்களையும் கவலைகொள்ளச் செய்கிறது.

அடுத்த கட்டுரைக்கு