Published:Updated:

புவிசார் குறியீடு பெற்ற தோடா எம்ப்ராய்டரியிலும் போலி! - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடி மக்கள்!

புவிசார் குறியீடு பெற்ற தோடர் பழங்குடிகளின் எம்ப்ராய்டரி என்ற பெயரில் போலிப் பொருள்கள் தயாரித்து விற்கப்படுவதால் பழங்குடிப் பெண்கள் வருவாய் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாரம்பர்ய உடை அணிந்து நடனமாடும் பெண்கள்
பாரம்பர்ய உடை அணிந்து நடனமாடும் பெண்கள் ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர் என ஆறு வகை பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் தங்களுக்கே உரித்தான பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். கால்நடை வளர்ப்பை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள தோடர் இன மக்களும் இன்றளவும் தங்கள் பாரம்பர்யங்களை பின்பற்றி வருகின்றனர். தோடா எம்ப்ராய்டரி எனப்படும் தோடர் இனப் பெண்கள் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தோடர் பெண்களின் இந்தக் கலைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

பாரம்பர்ய உடை அணிந்து நடனமாடும் பெண்கள்
பாரம்பர்ய உடை அணிந்து நடனமாடும் பெண்கள்
கே.அருண்

பருத்தி துணியில் கறுப்பு மற்றும் சிவப்பு நூல்களைக்கொண்டு மலைகள், ஆறுகள், அத்திப்பூ, வண்ணத்துப்பூச்சி, மயில், தங்களின் குல தெய்வமான எருமை போன்ற இயற்கை சார்ந்த பல உருவங்களை பூ வேலைப்பாடுகள் மூலம் மிக நேர்த்தியாக வடிவமைக்கின்றனர். இவர்களின் பிறப்பு, திருமணம், திருவிழா, இறப்பு என எல்லா நிகழ்வுகளிலும் பூத்துக்குளி எனப்படும் இந்த உடையை அணிந்து பங்கேற்பதே வழக்கம். மேலும் இந்தப் பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையை மிக புனிதமாகக் கருதுகின்றனர்.

இது மட்டும் அல்லாது தோடர் இனத்தில் பிறந்த பெண்கள் அனைவரும் இந்தக் கலையை அறிய வேண்டும் என இந்தக் கலையை அழியாது மீட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் விழாக்கள், அரசு நிகழ்வுகள் என அனைத்திலும் தவறாமல் இந்த தோடர் எம்ப்ராய்டரி பொருள்கள் இடம் பெரும். அதே சமயம் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் இந்தத் தோடர் எம்ப்ராய்டரி பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

பாரம்பர்ய உடை அணிந்து நடனமாடும் ஆண்கள்
பாரம்பர்ய உடை அணிந்து நடனமாடும் ஆண்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பினதங்கிய நிலையில் உள்ள தோடர் குடும்பப் பெண்களின் முக்கிய வருவாய் அளித்தும் இவர்களின் அடையாளமாக இருந்துவந்த இந்தக் கலையை தோடர் அல்லாத சிலர், வணிக நோக்கில் போலியாக தயாரித்து தோடர் எம்ப்ராய்டரி என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்துவருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும் பழங்குடி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தோடர் இனத்தைச் சேர்ந்த வாசமல்லி கூறுகையில், “தோடர் சமுதாய மக்களால் நேர்த்தியாக மேற்கொள்ளப்படும் எம்ராய்டரி கலைக்கு மத்திய அரசு புவி சார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் தோடர் எம்ராய்டரிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தோடர் பழங்குடியின மக்கள் மட்டுமே தங்களுக்கே உரித்தான இந்தக் கலையை தற்போது செய்து வணிக ரீதியாக விற்பனை செய்து வருகின்றனர்.

பாரம்பரிய உடையில் தோடர் பழங்குடி பெண்
பாரம்பரிய உடையில் தோடர் பழங்குடி பெண்
கே.அருண்

தோடர் அல்லாத சிலர் தோடர் பெண்களை ஏமாற்றி அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு எம்ராய்டரி சால்வைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதுதவிர தற்போது தோடர் அல்லாத நபர்களுக்கும் இக்கலையினைக் கற்று இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்து பழங்குடி பெயரைச் சொல்லி போலியாக விற்பனை செய்கின்றனர். இதனால் இந்தக் கலையை நம்பி உள்ள பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. மேலும் எங்களின் இந்தக் கலைக்கு உள்ள நன்மதிப்பும் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.