Published:Updated:

Fact Check:`சென்னையில் ஆக்ஸிஜன், உணவு இலவசம்!' - வாட்ஸ்அப்பில் உலவும் தகவல்கள் உண்மையா?

Whatsapp
Whatsapp ( Image by Alfredo Rivera from Pixabay )

இந்த டிஜிட்டல் யுகத்தில், உறுதிசெய்யப்படாத செய்திகள் பலவும் மிக விரைவாக வாட்ஸ்அப் வாயிலாக மக்களிடம் சென்றடைகின்றன. அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை பலரும் சரிபார்ப்பதில்லை. இதனால், பெரும்பாலானோருக்குத் தேவையில்லாத அச்சமும் சிக்கலும் ஏற்படுகின்றன.

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி, நாட்டில் கொரோனா பாதித்தோர் ஒரு நாள் நிலவரம் மூன்று லட்சத்தைக் கடந்திருக்கிறது. இது, உலக அளவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஒருநாள் தொற்றின் அதிகபட்ச அளவைவிட அதிகம். வட மாநிலங்களில் பெருந்தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவரும் நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் பதற்றத்துடன், உயிரிழப்புகள் அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது.

ஆக்ஸிஜன் காஸ் தட்டுப்பாடு
ஆக்ஸிஜன் காஸ் தட்டுப்பாடு

`நிலைமை எல்லை மீறிச் சென்றுவிட்டது. கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்' என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா வருத்தத்துடன் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தச் சூழல்கள் எல்லாம், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த நிலையில், 'கோவிட் தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்போருக்கு 14 நாள் பேக்கேஜ் முறையில் மூன்று வேளைக்கான உணவு தருகிறோம். தவிர, தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளுக்கு எங்களை அணுகுங்கள்' என்று சில தொலைபேசி எண்களுடன் வாட்ஸ்அப் செய்திகள் வேகமாகப் பகிரப்படுகின்றன.

நாடு முழுக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில், `இலவசமாக ஆக்ஸிஜன் காஸ் சப்ளை செய்கிறோம். எங்களைத் தொடர்பு கொண்டால், 24 மணிநேரத்தில் டெலிவரி செய்யப்படும்' என்றும் தகவல்கள் பகிரப்படுகின்றன. 'சென்னையில் உள்ளோருக்கு ஒரு குடும்பத்துக்கு 12 லிட்டர் ஆக்ஸிஜன் காஸ் 400 ரூபாய் விலைக்குக் கொடுக்கிறோம். எங்களை அணுகலாம்' என்றும் தகவல் உலவுகின்றன. இந்த டிஜிட்டல் யுகத்தில், உறுதிசெய்யப்படாத செய்திகள் பலவும் மிக விரைவாக வாட்ஸ்அப் வாயிலாக மக்களிடம் சென்றடைகின்றன. அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை பலரும் சரிபார்ப்பதில்லை. இதனால், பெரும்பாலானோருக்குத் தேவையில்லாத அச்சமும் சிக்கலும் ஏற்படுகின்றன.

ஆக்ஸிஜன் காஸ் தட்டுப்பாடு
ஆக்ஸிஜன் காஸ் தட்டுப்பாடு

இலவச உணவு, ஆக்சிஜன் காஸ் விநியோகம், மலிவு விலையில் ஆக்ஸிஜன் காஸ் குறித்த வாட்ஸ்அப் தகவல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோம். இரண்டு எண்களுக்கு மட்டுமே அழைப்பு சென்ற நிலையில், யாரும் பதிலளிக்கவில்லை. மற்ற எல்லா எண்களுமே 'ஸ்விட்ச் ஆஃப்' நிலையிலேயே இருந்தன. இந்தச் செய்தியை உண்மை என நம்பி, உதவி தேவைப்படுவோர் பலர் ஏமாந்திருக்கக்கூடும். இதுபோன்ற வாட்ஸ்அப் தகவல்கள் வந்தால், அவற்றைச் சோதித்துப் பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள். அல்லது பகிராமலேயே இருப்பது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

முக்கியமாக `வாட்ஸ்அப் கொள்கை பரப்புச் செயலாளர்களே'...

ஏற்கெனவே நம் அரசாங்கங்கள் கொரோனா சூழலில் மக்களை படாதபாடு படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோல நீங்களும் சேர்த்து படுத்தத்தான் வேண்டுமா? இப்படி பிறழ்தகவல்களைப் பரப்பி பலரையும் துன்புறுத்துவதைவிடவும், நீங்கள் சும்மா இருந்தாலே அது பலருக்கு உதவியாக இருக்கும்!

தனித்திருங்கள்... விழித்திருங்கள்... இப்படி போலி வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை ஷேர் செய்யமாலும் இருங்கள்... ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு