Published:Updated:

`இரவு உணவு உண்ணாமல் தூங்கச் செல்லும் குடும்பங்கள்!' -கொரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

நிவாரண உதவி
நிவாரண உதவி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மார்ச் மாதத்தில் வேலை செய்த நாள்களுக்கு மட்டுமே சம்பளம் பெற்றுள்ளனர். குறிப்பாக, வாடிப்பட்டி ஜவுளிப் பூங்காவிலுள்ள இரண்டு நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் மார்ச் மாத ஊரடங்கு விடுப்பு நாள்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

"கொரோனாவும் அதைத் தொடர்ந்த ஊரடங்கும் அனைத்து மக்களையும் பாதித்துள்ள நிலையில், குறிப்பாக அடித்தட்டு மக்களிடம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் வேலைக்குc செல்லும் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்" என்கிறார், சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் செல்வகோமதி.

நிவாரண உதவி
நிவாரண உதவி

கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து கிராமப்புறங்களில் ஆய்வுசெய்துள்ள நீதிபதி சிவராஜ் பாட்டீல் பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் செல்வகோமதியிடம் பேசும்போது, ``கொரோனா ஊரடங்கு, நகர்ப்புற கிராமப்புற ஏழை மக்களை அதிகம் பாதித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் வட்டாரத்திலுள்ள 40 கிராமங்களில் 135 பெண் தொழிலாளர்களிடம் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றி ஆய்வுசெய்தோம். அவர்கள் எல்லோரும் ஜவுளி ஆலைகளில் வேலை செய்பவர்கள். ஆய்வில் அவர்களுக்கு பொருளாதாரத் தேவை அதிகம் இருப்பதையும், போதிய உணவுப் பொருள்கள் கிடைக்காததால், பசியாலும் பட்டினியாலும் அவர்கள் துன்புறுவதை அறிய முடிந்தது.

ஊரடங்கு காலத்தில் விடுப்பு நாள்களுக்கு தொழிலாளர்களுக்கு முழு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவிட்டுள்ளதை அவர்கள் வேலைபார்க்கும் ஜவுளி ஆலைகள் புறக்கணித்துள்ளதாகக் கூறினார்கள். மார்ச் மாதத்தில் வேலை செய்த நாள்களுக்கு மட்டுமே சம்பளம் பெற்றுள்ளனர். குறிப்பாக, வாடிப்பட்டி ஜவுளிப் பூங்காவிலுள்ள இரண்டு நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் மார்ச் மாத ஊரடங்கு விடுப்பு நாள்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

செல்வகோமதி
செல்வகோமதி
ஈ.ஜெ.நந்தகுமார்

இதுபோல ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஊரடங்கு கால சம்பளம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் ஏற்கெனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், நிறுவனங்கள் ஊதியம் வழங்காதது அதை நம்பி வாழ்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் இல்லாத காரணத்தால் பெரியவர்கள், பெண்கள் குழந்தைகள் அன்றாட உணவுக்கு வழியில்லாத நிலையில் உள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்பதுகூட கனவாகிவருகிறது. பல குடும்பங்களில் இரவு உணவு உண்ணாமல் தூங்கச் செல்கின்றனர்.

செல்வகோமதி
செல்வகோமதி
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மாவட்டத்திலுள்ள ஜவுளி ஆலைகள் பெரும்பாலனவற்றில் இந்த நிலை என்றால், தமிழகம் முழுவதும் சொல்லவேண்டியதில்லை. அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றவர், ''இதுபோன்று மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயத் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தனித்து வாழும் பெண்கள், கைம்பெண்கள் உள்ளிட்ட 200 தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு