Published:Updated:

திருமணம் செய்யாமல் தியாகம்; விடாமல் விரட்டிய சோகம்! - கடனால் நிலைகுலைந்த குடும்பம்

விஷம்

கடன் தொல்லையால் இளைஞர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் செய்யாமல் தியாகம்; விடாமல் விரட்டிய சோகம்! - கடனால் நிலைகுலைந்த குடும்பம்

கடன் தொல்லையால் இளைஞர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விஷம்

சென்னை நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலை, செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (35). இவரின் அம்மா மீனாட்சி (55). சகோதரி சந்தனமாரி (40), இவரின் மகள் மோகனப்பிரியா (20). இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். ராம்குமாரின் அப்பாவும், சந்தனமாரியின் கணவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனால் டிப்ளமோ படித்த ராம்குமாரின் தலையில் குடும்பச் சுமை விழுந்தது. இதையடுத்து நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினீயராக ராம்குமார் பணியாற்றினார். சந்தனமாரியின் மகள் மோகனப்பிரியா, மனவளர்ச்சி குன்றியவர்.

ராம்குமார்
ராம்குமார்

குடும்ப சூழலைக் கருதிய ராம்குமார், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அக்காள் மகளுக்கு மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என ராம்குமாருக்கு பொருளாதார தேவை அதிகரித்தது. ஆனால் அவர் வாங்கிய சம்பளமோ குடும்பத் தேவைக்குப் போதவில்லை. அதனால் ராம்குமார், தெரிந்தவர்களிடமும் வங்கியிலும் கடன் வாங்கினார். அந்தக் கடன் தொகையும் லட்சங்களானது. அதனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் ராம்குமார் சிரமப்பட்டு வந்தார். மேலும் ராம்குமாரின் வாழ்க்கையில் அவரை விடாமல் சோகம் விரட்டி வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்தினரோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என ராம்குமார் முடிவெடுத்தார். அது குறித்து தன்னுடைய அம்மா, அக்காள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தார். அவர்களும் தற்கொலை செய்துகொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து ராம்குமார் விஷம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அதை உணவில் கலந்து அனைவரும் சாப்பிட்டனர். அப்போது திடீரென ராம்குமார் மனமாறி தான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் உள்ள நண்பரிடம் தகவலை போனில் தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராம்குமாரின் நண்பர்கள் அவரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவையும் உடைக்க முடியவில்லை.

ராம்குமாரின் வீட்டின் முன் போலீஸ்
ராம்குமாரின் வீட்டின் முன் போலீஸ்

இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு ராம்குமாரின் நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்தனர். அப்போது வீட்டுக்குள் நான்கு பேரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்தனர். நான்கு பேரையும் மீட்ட போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தனமாரி, அவரின் மகள் மோகனப்பிரியா ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராம்குமார் அவர் அம்மா மீனாட்சிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்த சந்தனமாரி, மோகனப்பிரியா ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மயக்கம் தெளிந்த ராம்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், ``அம்மா, அக்காள் ஆகியோருக்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தேன். நான் வாங்கும் சம்பளத்தைவிட குடும்பச் செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக எனக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. குடும்பத்தினர் கஷ்டப்படக்கூடாது என்று கடன் வாங்கி சமாளித்து வந்தேன்.

ராம்குமார் வீடு
ராம்குமார் வீடு

கடன் நெருக்கடியால்தான் இந்த விபரீத முடிவை எடுத்தேன். குடும்பம் கடனில் தத்தளித்தபோது என்னுடைய உறவினர்கள் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. ஏன் ஆதரவாக ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை" என்று கூறியிருக்கிறார். இதையடுத்து ராம்குமாரும் அவரின் அம்மாவும் சிகிச்சையில் இருப்பதால் அக்காள் சந்தனமாரி, மோகனப்பிரியா ஆகியோரின் சடலங்களை யாரிடம் ஒப்படைப்பது என்று போலீஸார் ஆலோசித்து வருகின்றனர். இவர்களின் சொந்த ஊர் நெல்லை. அதனால் நெல்லையிலிருக்கும் உறவினர்களிடம் இருவரின் சடலங்களை ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.