Published:Updated:

நாமக்கல்: கிணற்றில் தவறி விழுந்த பசு; மீட்க குதித்த விவசாயிக்கு நேர்ந்த துயரம்!

முதற்கட்ட விசாரணையில், கிணற்றுக்கு அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, பசு தவறி கிணற்றுக்குள் விழுந்ததும், அதைக் காப்பாற்றும் முயற்சியில் சீரங்கன் கிணற்றில் குதித்து உயிரிழந்ததும் தெரியவந்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட காணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (70). விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். அதோடு, பசுமாட்டையும்வைத்து வளர்த்துவருகிறார். இவருடைய மனைவி ராசம்மாள். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், வெளியில் சென்ற சீரங்கன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால், அவர் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் அவரைத் தேடியிருக்கின்றனர்.

நேற்று காலை அதே பகுதியிலுள்ள காவேரி என்பவரின் விவசாயக் கிணற்றில் ஒரு பசு மாடு செத்து மிதப்பதாக ஊரில் தகவல் பரவியது. அதையடுத்து, உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஏழுமலை தலைமையிலான வீரர்கள் விரைந்தனர். கயிற்றைக் கட்டி கிணற்றில் செத்து மிதந்த பசு மாட்டின் உடலை மிகவும் சிரமத்திற்கிடையில் மீட்டு மேலே கொண்டுவந்தனர். அப்போது, கிணற்றின் ஒரு பகுதியில் செருப்பு மிதந்திருக்கிறது. அந்த நேரத்தில், அங்கே வந்த சீரங்கனின் உறவினர்கள், கிணற்றில் இறந்துகிடந்த பசுமாடு தங்களுடையது என்று தெரிவித்திருக்கின்றனர்.

மரணம்
மரணம்
சித்தரிப்புப் படம்

அதனால், அந்தக் கிணற்றில் செருப்பு மிதந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் குதித்துத் தேடினார்கள். அப்போது, விவசாயி சீரங்கன் பிணமாகக் கிணற்றுக்குள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு, சீரங்கனின் உடலை மேலே கொண்டுவந்தனர். பின்னர், இது குறித்து வெண்ணந்தூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கிணற்றில் விழுந்து இறந்த சீரங்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ராசம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கிணற்றுக்கு அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, பசு தவறி கிணற்றுக்குள் விழுந்ததும், அதைக் காப்பாற்றும் முயற்சியில் சீரங்கன் கிணற்றில் குதித்து உயிரிழந்ததும் தெரியவந்திருக்கிறது. தன் பசுமாட்டைத் தனியொரு ஆளாகக் கிணற்றுக்குள் குதித்து மீட்கப் போராடி விவசாயி ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல்: `பலகாரத் தயாரிப்பின்போது வெடித்துச் சிதறிய சிலிண்டர்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 10 பேர்!'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு