Election bannerElection banner
Published:Updated:

`காய்கறிகளை விற்க வந்த விவசாயி... மயங்கி விழுந்து மரணம்!’ - அதிர்ச்சியில் வாணியம்பாடி

உயிரிழந்த விவசாயி உமாபதி
உயிரிழந்த விவசாயி உமாபதி

காய்கறிகளை விற்பனைக்காகக் கொண்டுவந்த விவசாயி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம், வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள். மூவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களுடைய தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், கொரோனாவைத் தடுக்கும் வகையில், ஆம்பூரைத் தொடர்ந்து வாணியம்பாடி நகரமும் இன்று முதல் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிரிழந்த விவசாயி உமாபதி
உயிரிழந்த விவசாயி உமாபதி

பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்கள், பால், பழம் மற்றும் இறைச்சியை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய 90 நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு வாணியம்பாடியை அடுத்த ஜனதாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொகுப்புகளாக பேக்கிங் செய்யப்படுகிறது. காய்கறித் தொகுப்பு 100 ரூபாய்க்கும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு 500 மற்றும் 1,000 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

முதல் நாளான இன்று வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் 800 காய்கறி தொகுப்பு பை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காய்கறிகளைக் கொள்முதல் மண்டபத்துக்குக் கொண்டு வந்த விவசாயி திடீரென சுருண்டு விழுந்து இறந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காயம் ஓமக்குப்பத்தைச் சேர்ந்த உமாபதி (48) என்ற அந்த விவசாயி, தன்னுடைய நிலத்தில் விளைந்திருந்த பீர்க்கங்காய்களை இன்று காலை மூட்டைகட்டிக் கொண்டு வந்து வரிசையில் நின்றிருந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த நபர்கள்
சம்பவ இடத்தில் இருந்த நபர்கள்

அப்போது, மயங்கி விழுந்த அவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தனர். அவர் விழிக்கவில்லை. பரிசோதனை செய்த மருத்துவர்கள், உமாபதி இறந்துவிட்டதாகக் கூறினர். இதைக் கேட்டு அங்கிருந்த அதிகாரிகளும் விவசாயிகளும் அதிர்ந்து போயினர். மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்டறிய அவரின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு