Published:Updated:

தஞ்சாவூர் : 'ரூ.6,000 வசூல்;ரூ.200-க்கு பில்! விரட்டிய போலீஸ்; ட்விட்டர் புகார் மூலம் கிடைத்த நீதி!

ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்குப் புகார்
ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்குப் புகார்

`அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிக்கு இதுதான் நிலையா?' எனப் புகாராகப் பதிவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு அனுப்பினார்.

கொரோனா லாக்டெளன் நேரத்தில் வருமானத்துக்காக திருவையாற்றில் லோடு ஆட்டோ மூலம் பழம் வியாபாரம் செய்துவந்த விவசாயியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ 6,000 அபராதம் வசூல் செய்ததுடன், அதற்கான பில்லையும் தர மறுத்திருக்கிறார். இது தொடர்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்குப் புகார் தெரிவிக்கப்பட, உடனடியாகப் பணம் திரும்பக் கிடைத்துள்ளது.

விவசாயி சிலம்பரசன்
விவசாயி சிலம்பரசன்
ம.அரவிந்த்

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, ஜமீன் குளத்தூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (31). விவசாயியான இவர், மொத்தமாக பழ வியாபாரமும் செய்துவருகிறார். கொரோனா லாக்டெளன் அமலில் இருப்பதால், ஆண்டிமடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநரிடம் உரிய அனுமதி பெற்று, லோடு ஆட்டோவில் கிர்ணி உள்ளிட்ட பழங்களை எடுத்துச் சென்று திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்துவந்திருக்கிறார்.

சம்பவம் குறித்து சிலம்பரசனிடம் பேசினோம். "மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை பழ வியாபாரம் செய்வதற்கான உரிய அனுமதி பெற்று, அதற்கான அனுமதிச் சான்றிதழையும் வைத்துக்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தேன். அன்றைக்கு நான் வியாபாரத்துக்குச் செல்லாமல் டிரைவர் சங்கர் மட்டும் சென்றார். கொண்டு சென்ற பழத்தில் பாதிகூட விற்பனையாகாமல் மாலை 4 மணி அளவில் ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார். வண்டியை மறித்த இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், லோடு ஆட்டோவை ஸ்டேஷனுக்கு வரவழைத்தார். பின்னர் டிரைவரிடம் ரூ 6,000 கொடுங்க எனக் கேட்டிருக்கிறார். 'பணம் இல்லைன்னா வண்டியை விட்டுட்டுப் போங்க' எனக் கூறியுள்ளார்.

போலீஸ் பறிமுதல் செய்த லோடு ஆட்டோ
போலீஸ் பறிமுதல் செய்த லோடு ஆட்டோ

"வண்டியில் பழம் இருக்கு, பஸ்ஸும் இல்லை. எப்படி சார் ஊருக்குப் போறது’’ என்று கேட்க, ``எப்படியாவது போங்க... பழத்தை வேற வண்டியைக் கொண்டு வந்து எடுத்துக்கிட்டு போங்க!" எனக் கூறிவிட்டு வழக்கும் பதிந்துவிட்டார். டிரைவர் சங்கர் எனக்கு போன் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். நான் லோக்கலில் இருந்த எனது நண்பர் அன்புவிடம் தகவல் சொல்லி ஸ்டேஷனுக்குப் போய் பார்க்கச் சொன்னேன். அன்பு போய், வாகனத்தை விடுங்க எனக் கூறியதற்கு, 'எஃப்.ஐ.ஆர் போட்டாச்சு. அபராதம் செலுத்தினால் மட்டுமே விட முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். பின்னர் ரூ 6,000 கொடுத்த பிறகு அதற்கான ரசீதைக் கொடுக்காமல் ரூ.200 அபராதம் வசூலித்ததாக ரசீது கொடுத்துள்ளனர். `என்ன சார் இது’ என்று கேட்டதற்கு, `வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்புங்க' எனக் கூறியுள்ளனர்.

கொரோனா அச்சத்தையும் மீறி, லாக்டெளன் நேரத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சொற்ப வருமானத்துக்காக உயிரையே பணயம்வெச்சு வியாபாரம் செய்யப்போறோம். போலீஸ் அபராதம் வாங்கிக்கிட்டு அதற்கான பில்லையும் கொடுக்கவில்லை. அப்படியென்றால் இதை என்னவென்று சொல்வது என எனக்கு தெரிந்தவரான அரியலுார் விவசாய சங்கத்தை சேர்ந்த செல்வம் தனவேல் என்பவரிடம் புலம்பியபடி தகவல் தெரிவித்தேன். அவர், ட்விட்டர் மூலம், 'விவசாயியிடம் ரூ 6,000 பணம் வாங்கிக்கொண்டு வண்டியை விடுவித்துள்ளார் திருவையாறு இன்ஸ்பெக்டர். ஊரடங்கால் நஷ்டம் அடைந்துகொண்டிருக்கும் விவசாயியை மேலும் நஷ்டமடையவைப்பது சரியா, அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிக்கு இதுதான் நிலையா?' எனப் புகாராகப் பதிவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்தார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

இதையடுத்து அந்தப் பதிவு கவனம் பெற்றது. பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் போன் செய்து விசாரித்ததுடன், வங்கிக் கணக்கு எண்ணையும் பெற்றுக்கொணடனர். மேலும் போலீஸ் உயரஅதிகாரிகள், என்னிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் வலியுறுத்தினர். அதன் பிறகு என் வங்கி கணக்குக்கு ரூ 6,000 பணம் வந்து சேர்ந்தது. ட்விட்டரில் பார்த்து விவசாயியான எனக்கு நியாயம் கிடைக்கச் செய்த, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட போலீஸ் தரப்புக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ட்விட்டரிலும் எங்களது நன்றியை பதிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு