Published:Updated:

தஞ்சை: `2007-ம் ஆண்டு தார்சாலை கணக்கு; மாற்றப்படும் வாய்க்கால்!’ - கொதிக்கும் விவசாயிகள்

வாய்க்காலில் தார் சாலை
வாய்க்காலில் தார் சாலை

இந்த வாய்க்கால் தார் சாலையாக மாற்றப்பட்டால், இங்கவுள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவாங்க. எதிர்காலத்துல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். அதுவும் விவசாய அமைச்சரின் தொகுதியிலேயே இப்படி ஒரு அவலமா என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

நீர்நிலைகள் உயிர்ப்போடு இருந்தால்தான், விவசாயம் வெற்றிகரமாக நடந்து, விவசாயிகள் நிம்மதியாக உணவு உற்பத்தி மேற்கொள்ள முடியும். இதனால்தான் நீர்நிலைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு விதமான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. நீதிமன்றங்களும் இதுதொடர்பாகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. ஆனாலும் கூட, இவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளே, அவ்வப்போது விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதுதான் துரதிர்ஷ்டம். அதுவும் விவசாய அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலேயே இப்படி ஒரு அவலம் நிகழ்வது வேதனை அளிப்பதாக, விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

ஆதனூர்
ஆதனூர்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ளது, தென்பாதி வாய்க்கால். இதில் தார்ச்சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இது விதிமுறைகளுக்கு புறம்பானது எனவும் இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் ஆயத்தமாகி வருகிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயியும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கரும்புப் பிரிவு செயலாளருமான சரபோஜி, ‘’இது விவசாய அமைச்சரோட சொந்தத் தொகுதி. அவரும் ஒரு விவசாயிதான். ஆனாலும் கூட, இதே பகுதியிலதான் விவசாயிகளுக்கு விரோதமாக அதிகாரிகள் செயல்படுறாங்க. கொங்கன் ஆறுல இருந்து பிரியக்கூடிய தென்பாதி வாய்க்கால் வழியாகத்தான், எங்க ஊர்ல உள்ள பெருமாள் கோயில் குளத்துக்குத் தண்ணீர் போயாகணும்.

குளத்துல தண்ணீர் தேக்கப்பட்டால்தான், சுற்றுவட்டார பகுதிகள்ல உள்ள விவசாய போர்வெல்களுக்குத் தண்ணீர் கிடைக்கும். இந்த வாய்க்கள்ல இருந்து நேரடியாகவும் பல விளைநிலங்கள் பாசனம் பெறுது. இந்த வாய்க்கால்ல சுமார் 100 மீட்டருக்கு தார்ச்சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. வருவாய்த்துறை ஆவணங்கள்லயும் வரைப்படத்துலயும், இந்த இடம் வாய்க்கால்னுதான் குறிப்பிடப்பட்டிருக்கு. ஆனாலும் கூட, பஞ்சாயத்து நிதியில் இதை தார்ச்சாலையாக மாத்துறாங்க.

இந்தப் பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் இதுக்கு எப்படி ஒப்புதல் கொடுத்தார்னு தெரியலை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தாசில்தார், கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கார். இந்த சாலை அமைக்குறதுனால மக்களுக்கும் பெரிய பயன் எதுவும் கிடையாது. காரணம் இந்தச் சாலை முடியக்கூடிய இடத்துல தனியாருக்குச் சொந்தமான ஒரு செங்கல் கால்வாய்தான் இருக்கு. இந்த வாய்க்கால் சாலையாக மாற்றப்பட்டால், இங்கவுள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவாங்க. எதிர்காலத்துல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். தீடீர்னு அதிகாரிகள் ஏன் இதுல ஆர்வம் காட்டுறாங்கனு தீவிரமாக விசாரிக்கும்போதுதான், இதுல ஏற்கெனவே நடந்த மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. 2007-ல் வருஷம் இதுல தார்ச்சாலை போட்டதாகக் கணக்கு காட்டி அதிகாரிகள், பணத்தை சுருட்டியிருக்காங்க.

விவசாயி சரபோஜி
விவசாயி சரபோஜி

2018-19-ம் ஆண்டு, மறுபடியும் ரோடு போட்டதாகக் கணக்கு காட்டியிருக்காங்க. அந்த ஊழலை, இப்ப புதிசா வந்திருக்கிற ஊராட்சி பிரதிநிதிகள் கண்டுபுடிச்சிட்டாங்க. அந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்கிறதுக்காகத்தான் இப்ப ரோடு போட அதிகாரிகள் துடிக்கிறாங்க. இதை ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் தன்னோட சுயநலத்துக்குப் பயன்படுத்திக்க பார்க்கிறார். தார்ச் சாலை அமைக்கச் சொல்லி ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் அழுத்தம் கொடுத்திருக்காங்க. நீர்நிலைகளை, வேறு உபயோகத்துக்கு மாத்துறது சட்டவிரோதம். பெருமாள் கோயில் குளம், இந்த ஒரு வாய்க்காலைத்தான் நம்பியிருக்கு. அதுக்கு வேற நீர்வழிப்பாதையே இல்லை. தார்ச்சாலை அமைக்கும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்தணும்னு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியிருக்கோம்” எனத் தெரிவித்தார்.

கொரோனா: 170 கி.மீ; ஒற்றைக் காலுடன் தஞ்சை டு மதுரை சைக்கிள் பயணம்! - தன்னம்பிக்கை மனிதர்

விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து, தாசில்தார் கண்ணனிடம் பேசியபோது, ``இதுல சாலை அமைக்கக் கூடாதுனு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் எழுதியிருக்கேன். ஆனாலும் இதையும் மீறி பணிகளைத் தொடங்கியிருக்காங்க. கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்படும்‘’ எனத் தெரிவித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்ச்சி அலுவலர் கூத்தரசனிடம் விளக்கம் கேட்டோம். ``மக்களின் வசதிக்காகத்தான் ரோடு போட ஏற்பாடு செஞ்சோம். ஆனாலும் இப்ப பிரச்னை ஆனதால, உடனடியாக வேலைகளை நிறுத்தச் சொல்லிட்டேன். ஆளும்கட்சி பிரமுகர்கள் யாரும் அழுத்தம் கொடுக்கலை. பொதுமக்களில் ஒருதரப்பினர் ரோடு போட சொல்லிக் கேட்டாங்க. அதனால்தான் ஏற்பாடு பண்ணினோம்” எனத் தெரிவித்தவரிடம், ``ஆவணங்களில் உள்ளபடி இது வாய்க்காலா, இல்லையா எனக் கேட்டபோது, ``ஆமாம், இதன் புல எண்ணில் வாய்க்கால் மற்றும் வயல்கள்னு குறிப்பிட்டப்பட்டிருக்கு” எனத் தெரிவித்தார். தென்பாதி வாய்க்காலில் சாலை அமைக்கும் பணி நிரந்தரமாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் இப்பகுதி விவசாயிகளின் உறுதியான கோரிக்கை.

அடுத்த கட்டுரைக்கு