Published:Updated:

`விவசாயிகளுக்கும் வருமானம்; நகராட்சிக்கும் நட்டம் இல்லை!' -புதுக்கோட்டை ஆட்சியரின் அசத்தல் முயற்சி

பரங்கிக்காய் விநியோகம்
பரங்கிக்காய் விநியோகம்

புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து 20 டன் பரங்கிக்காய்கள் விலைக்கு வாங்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கும் காய்கறி பையுடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையான காய்கறிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளைச் சரியாக ஏற்றுமதி செய்யமுடியாததால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்றும் சில விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்க முடியவில்லை என்று புலம்பித் தவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை அருகே இடையப்பட்டி கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் 50 டன்னுக்கும் அதிகமாகப் பரங்கிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வருடமும் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்திருந்தனர். வெளியூர்களுக்கு அனுப்பும் நேரத்தில் அறவே ஏற்றுமதி செய்ய முடியாததால், டன் கணக்கில் காய்கள் அழுகி வீணாகத் தொடங்கின.

பரங்கிக்காய்
பரங்கிக்காய்

விவசாயிகள் ஒன்று சேர்ந்து இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடவே, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, இந்த பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து 20 டன் பரங்கிக்காய்கள் விலைக்கு வாங்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கும் காய்கறி பையுடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புது முயற்சியாக, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மாஸ்க், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வெளியே வரும் பொதுமக்கள் அனைவருக்கும் 1 கிலோ பரங்கிக்காய் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர். நகராட்சியின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதுபற்றி நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் கூறும்போது, ``நகராட்சி சார்பில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒருபுறம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் குறைவான விலையில் தரமானதாகக் கிடைக்கும் வகையிலும் பல்வேறு வழிவகைகளைச் செய்துள்ளோம். இடையப்பட்டி விவசாயிகள் பரங்கிக்காய்களை நம்பித்தான் இருந்தனர். வழக்கமாக இந்தநேரம் கேரளாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பபடுவது வழக்கம். நல்ல விலையும் கிடைக்கும். கொரோனா பிரச்னையால இந்த வருடம் உற்பத்தி செஞ்ச விலையைக்கூட எடுக்க முடியலைன்னு கலெக்டர் மேடத்திடம் மனு கொடுத்தாங்க.

பரங்கிக்காய் விநியோகம்‘
பரங்கிக்காய் விநியோகம்‘

அவங்க உத்தரவின் பேரில்தான் நகராட்சியே ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி அதைப் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம்னு முடிவு பண்ணி தற்போது கொடுத்துக்கிட்டு இருக்கோம். விவசாயிகளுக்கும் கணிசமான வருமானம் கிடைச்சிருக்கு. நகராட்சிக்கும் நட்டம் எல்லாம் இல்லை. பொதுமக்களுக்கு ரொம்பவே சந்தோஷமாக வாங்கிக்கிட்டுப் போறாங்க. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அடுத்தடுத்து புது முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு