Published:Updated:

`காத்திருந்த அமைச்சர்கள்... கல்லணைக்கு வர தாமதமான தண்ணீர்!' -பொய்த்துப் போன பொதுப்பணித்துறை கணக்கு

கல்லணை
கல்லணை

கல்லணையைத் திறப்பதற்கு காலை 10 மணிக்கெல்லாம் அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து சேரவில்லை.

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று காலை 11 மணிக்குத் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கல்லணைக்கு தண்ணீர் வந்து சேராததால் அணை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. காவிரி ஆற்றில் பெருமளவில் நடந்த மணல் கொள்ளையே தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

டெல்டா மாவட்டப் பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்தநிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டப் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று காலை 11 மணிக்குத் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் அரசு அதிகாரிகள், விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஏராளமான விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

Vikatan

கல்லணையைத் திறப்பதற்கு காலை 10 மணிக்கெல்லாம் அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து சேரவில்லை என்பதால் அணை திறப்பது தாமதமானது. இது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து விவசாயிகள் பேசும்போது, ``எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்டா மாவட்டப் பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. மேட்டூரில் 12-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் 15-ம் தேதி இரவே கல்லணைக்கு வந்துசேரும் எனப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதனடிப்படையில் இன்று காலை 11 மணிக்குக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்து அதற்கான ஏற்பாட்டையும் செய்தனர்.

கல்லணை
கல்லணை

ஆனால், 11 மணி வரையிலும் திறந்துவிடும் அளவுக்கான தண்ணீர் அணையை வந்து சேரவில்லை. இதுபோல் எந்த வருடமும் நடந்தது இல்லை. காவிரி ஆற்றில் பெரிய அளவில் நடந்த மணல் கொள்ளையே தண்ணீர் வர தாமதமானதற்குக் காரணம். பொதுப்பணித் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்த பிறகே 15-ம் தேதி இரவு தண்ணீர் கல்லணைக்கு வந்து சேரும் என அறிவித்தனர். தண்ணீர் வருவது தொடர்பாக பொதுப்பணித் துறையினரின் கணக்கில் எங்கே தவறு நடந்தது எனவும் தெரியவில்லை” என்றனர் ஆதங்கத்துடன்.

இது காலையிலேயே ஆர்வமுடன் வந்த விவசாயிகள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம்.

`தலைமடையிலயே இந்த நிலைமைனா, கடைமடையில்?’ -மேட்டூர் அணை திறந்தும் தீராத விவசாயிகளின் சோகம்
அடுத்த கட்டுரைக்கு