Published:Updated:

`விவசாயிகளே ஓட்டலாம்... ஆனா, ஒரு கண்டிஷன்!' -உழவர் உற்பத்தியாளர் குழுவின் சிறப்பான முன்னெடுப்பு


டிராக்டருடன் விவசாயிகள்
டிராக்டருடன் விவசாயிகள்

"புதுசா வாங்கியிருக்கிற டிராக்டரை விவசாயிங்களே இயக்கலாம். அதனால, ஓட்டுநருக்கான செலவு மிச்சம். டிராக்டருக்கும் குறைவான வாடகைதான் வசூலிப்போம்."

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அழகுசேனை கிராமத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். சிறு, குறு விவசாயிகள்தாம் இந்த ஊரில் அதிகம். அவர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் இயங்கிவருகிறது உழவர் உற்பத்தியாளர் குழு. ‘இயற்கை விவசாயம் மட்டுமே செய்வது; உழவுப் பணிகளுக்கான செலவுகளைக் குறைக்க டிராக்டர் பயன்பாட்டுக்கு குறைந்த வாடகை’ என்ற சிறப்பான முன்னெடுப்புடன் இந்த விவசாயிகள் குழுவின் சார்பில் புதிதாக டிராக்டர் வாங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து இந்தக் குழுவின் தலைவர் மூர்த்தியிடம் பேசினோம்.


டிராக்டருடன் விவசாயிகள்
டிராக்டருடன் விவசாயிகள்

“ஊர்ல 200-க்கும் மேற்பட்ட விவசாயிங்க இருக்காங்க. அதில் சிலரைத் தவிர எல்லோருமே சிறு, குறு விவசாயிகள்தாம். அவங்களுக்கெல்லாம் உதவவே இந்தக் குழுவைத் தொடங்கினோம். எங்க குழுவில் உறுப்பினர்களாக இருக்கிற எல்லா விவசாயிகளுக்கும் டிராக்டர் ஓட்டத் தெரியும். ஆனா, சொந்தமாக டிராக்டர் இல்லாததால உழவுத் தேவைக்கு டிராக்டரை வாடகைக்கு எடுப்போம். அதற்கான வாடகைத் தொகை அதிகமாகிட்டே இருக்கு. தவிர, டிராக்டர் உரிமையாளர்தான் உழவு வேலைகளைச் செய்வார். அவருக்கு தனி வாடகை கொடுக்கணும்.

இதுபோன்ற செலவுகளைக் குறைக்க, எங்க குழுவின் சார்பில் சொந்தமா டிராக்டர் வாங்க முடிவெடுத்தோம். திருவண்ணாமலை மாவட்டத் தோட்டக்கலை மற்றும் மானாவாரி பயிர்கள் துறை சார்பில், எங்க சங்கத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் மானியமா கிடைச்சுது. குழு உறுப்பினர்களான 100 விவசாயிங்க தலா 1,000 ரூபாய் கொடுத்ததில் 1,00,000 ரூபாய் சேர்த்தோம்.

‘இயற்கை விவசாயம் மட்டுமே செய்வது; உழவுப் பணிகளுக்கான செலவுகளைக் குறைக்க டிராக்டர் பயன்பாட்டுக்குக் குறைந்த வாடகை’ என்ற சிறப்பான முன்னெடுப்புடன் இந்த விவசாயிகள் குழுவின் சார்பில் புதிதாக டிராக்டர் வாங்கியிருக்கிறார்கள்.

ஊரிலுள்ள முன்னோடி விவசாயிங்க 20 பேர், தலா 5,000 ரூபாய் கொடுத்ததில் 1,00,000 ரூபாய் கிடைச்சுது. மொத்தம் 7,00,000 ரூபாயில் டிராக்டர் வாங்கினோம். கலப்பை உள்ளிட்ட உழவுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க 3,00,000 ரூபாய் தேவைப்படுது. அதற்கும் குழு உறுப்பினர்களிடம் பணம் திரட்டுறோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மூர்த்தி.

மூர்த்தி
மூர்த்தி

குழுவிலுள்ள அனைத்து விவசாயிகளிடமும் மாடு இருக்கிறது. எனவே, மாட்டுச் சாணம் மற்றும் இதர இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் மட்டுமே குழுவிலுள்ள விவசாயிகளுக்கு டிராக்டரை வாடகைக்குக் கொடுக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசும் மூர்த்தி, “எங்க குழுவிலுள்ள பல விவசாயிங்க, முன்பு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாங்க. இனி எல்லோரும் இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருக்கோம். குழுவை வழிநடத்துற ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரிகளும் தாசில்தாரும் எங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறாங்க. புதுசா வாங்கியிருக்கிற டிராக்டரை விவசாயிங்களே இயக்கலாம். அதனால, ஓட்டுநருக்கான செலவு மிச்சம். டிராக்டருக்கும் குறைவான வாடகைதான் வசூலிப்போம்.


டிராக்டருடன் விவசாயி
டிராக்டருடன் விவசாயி

எங்க சங்கத்துல உறுப்பினரா இல்லாத விவசாயிகளுக்கு மட்டும் டிராக்டர் பயன்பாட்டுக்குக் கொஞ்சம் கூடுதலான வாடகை வாங்குவோம். இதனால் கிடைக்கும் பணத்தையெல்லாம் சேமிச்சு, ரெண்டு வருஷத்துக்குள் மானியமா கிடைச்ச அஞ்சு லட்சம் ரூபாய் பணத்தையும் திரட்டிடுவோம். பிறகு, அந்தத் தொகையில மீண்டும் புது உபகரணம் வாங்கத் திட்டமிட்டிருக்கோம். தவிர, விவசாயிகளின் இயற்கை விளைபொருள்களை குழுவுலயே எளிதில் விற்பனை செய்யலாம். அதை மொத்தமா சேகரிச்சு, குழுவின் சார்பில் சந்தையில் விற்போம்” என்கிறார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு