Published:Updated:

`அதிகார பலம், பாலில் முறைகேடு செய்றாங்க!' - பெண் கலெக்டரிடம் கொந்தளித்த விவசாயிகள்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

பால் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஆவின் பால் பாக்கெட்
ஆவின் பால் பாக்கெட்

தேனி மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு சொசைட்டிகள், விலையைக் குறைத்து முறைகேடு செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பால் விலையை உயர்த்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், எனவே தமிழக அரசிற்கு நன்றி எனவும், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. இந்நிலையில், பால் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயி சீனிராஜ்
விவசாயி சீனிராஜ்

அப்போது தேனி பள்ளபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிராஜ் நம்மிடையே பேசும்போது, “ஆவின் நிறுவனம், அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையானது, அந்தந்த சொசைட்டி தலைவர் நிர்ணயிப்பதுதான். கடந்த வாரம் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியது. 28 ரூபாய் விற்ற பசும்பாலின் விலை, 6 ரூபாய் உயர்ந்து தற்போது 34 ரூபாய்.

ஆனால், விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் போது 22 ரூபாய், 27 ரூபாய்க்கு மேல் கொடுப்பதில்லை. பாலில் எவ்வளவு கொழுப்புச் சத்து இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். இதை, பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே சோதனை செய்து, அதன் விலையை விவசாயிகளிடம் சொல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான கிராமங்களில் அதைச் செய்வதில்லை.

Theni Collector M Pallavi Baldev
Theni Collector M Pallavi Baldev

கொள்முதல் செய்யும் பால், தேனி ஆவினுக்கு வந்த பின்னரே சோதனை செய்கிறார்கள். ஆவின் அதிகாரிகளும், சொசைட்டி தலைவரும் கைகோத்துக்கொண்டு பாலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கிறது என எழுதிக்கொண்டு, விலையை குறைத்துப் போட்டுக்கொள்வார்கள். படிக்காத பாமர மக்கள், அதை நம்பிச்சென்றுவிடுகிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால், அந்த விவசாயிடம் பால் கொள்முதல் செய்ய மாட்டார்கள். மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, அதிகார பலத்தால் தேனியின் பெரும்பாலான பகுதிகளில் இந்த முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.

இது தொடர்பாக கலெக்டர் கூறும்போது, ”சில கிராமங்களைக் குறிப்பிட்டு, அங்கே முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் கூறினர். அந்தந்த கிராமங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆவின் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறேன். விசாரிக்கிறேன்’ என்றார்.