Published:Updated:

``அவர் நல்லா வேலை பார்த்ததுதான் தப்பா?" - வள்ளலார் ஐஏஎஸ் இடமாற்றத்தால் விவசாயிகள் அதிருப்தி

இதற்கு முன்பு தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (டாமின்) இயக்குநராக வள்ளலார் இருந்தபோது, அதுவரை நஷ்டத்தில் இருந்த டாமினை அதிக லாபம் பெறும் நிறுவனமாக மாற்றினார். உலக அளவில் தமிழகத்தின் கிரானைட் விற்பனையைக் கொண்டு சென்றார்.

விவசாயத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது விற்பனை. அதற்காக உருவானதுதான் வேளாண் விற்பனைத்துறை. ஆனால், இப்படியொரு துறை இருப்பதே பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரியாது. இந்நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் விற்பனைத்துறை ஆணையராக வள்ளலார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.

Fruits
Fruits
Photo by Magda Ehlers from Pexels

இதற்கு முன்பு தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (டாமின்) இயக்குநராக வள்ளலார் இருந்தபோது, அதுவரை நஷ்டத்தில் இருந்த டாமினை அதிக லாபம் பெறும் நிறுவனமாக மாற்றினார். உலக அளவில் தமிழகத்தின் கிரானைட் விற்பனையைக் கொண்டு சென்றார். அந்த அனுபவங்கள் அடிப்படையில் வேளாண் பொருள்களை உள்ளூர் முதல் உலகச்சந்தை வரை விற்பனை செய்வதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டினார். இதற்காக விவசாயிகள், விவசாயச் சங்க பிரதிநிதிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அழைத்துத் தொடர்ந்து பேசிவந்தார். இந்நிலையில், நவம்பர் 8-ம் தேதி ஜவுளித்துறைக்கு இடமாற்றம் செய்தது தமிழக அரசு.

இந்த இடமாற்றத்தின் பின்னணி குறித்து விசாரித்தோம். பெயர் சொல்ல விரும்பாத தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், ``இருக்குற இடம் தெரியாம, வேலைக்கு வந்தோமா... சம்பளம் வாங்குனமானு இருந்தது விற்பனைத்துறை. ஆனா, வள்ளலார் ஆணையரா வந்ததும், இந்தத் துறை தீப்பிடிச்ச மாதிரி பரபரன்னு இயங்க ஆரம்பிச்சிடுச்சு. தமிழ்நாடு முழுக்க போய் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்திச்சு, அவங்களோட கோரிக்கைகளைக் கேட்டார். தமிழ்நாடு அரசு தாக்கல் செஞ்ச வேளாண் பட்ஜெட்டுக்காக ராத்திரி, பகலா உழைச்சாரு. பட்ஜெட்ல இடம்பெற்ற சில நல்ல அறிவிப்புகளுக்கு அவரும் ஒரு காரணம்.

விவசாயம்
விவசாயம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை ஆளுக்கொரு பேர்ல விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. அதை மாத்தி, அவங்க பொருள்களை வாங்கி ஒரே `லேபிள்'ல சந்தைப்படுத்த முயற்சி எடுத்தாரு. அவரு பதவியில இருந்த இந்த நாலு மாசத்துல பல மாவட்டங்களுக்கு நேரடியா போய் ஆய்வு பண்ணுனாரு. பல இடங்கள்ல சில தனியார் கட்டுப்பாட்டுல இருந்த குடோன்கள், சேமிப்பு கிட்டங்கிகளை மீட்டெடுத்து அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தாரு. கொடைக்கானல் பூண்டுக்காகத் தனி கவனம் எடுத்துகிட்டாரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேனி மாவட்டத்துல வாழைப்பழத் தொழில்ல இருக்க ஒருத்தர், அங்க இருக்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களையே அவர் கட்டுப்பாட்டுல வெச்சிருந்தார். அதையும் சரிசெய்ய முயற்சி எடுத்தார். உழவர் சந்தைகள்ல இயற்கை விவசாய பொருள்களைக் கண்டறிய கருவி அமைக்கிறது, நடமாடும் காய்கறி வாகனங்கள், உணவுப் பூங்காக்கள் அமைப்பதுனு வெளிநாட்டுல இருக்க மாதிரி நம்ம விவசாய பொருள்களையும் சந்தையில விற்பனைக்குக் கொண்டு வரணும். அதுக்கு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் `பேக்கிங்' இருக்கணும்னு ரொம்ப மெனக்கெட்டாரு. முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமா 7 மாவட்டங்களை அறிவிச்ச பிறகு, உலக அளவிலான கருத்தரங்கு ஒன்றை பெரியகுளம் கல்லூரியில நடத்த காரணமா இருந்தார். அந்தக் கருத்தரங்குல விவசாயிகளையும் வியாபாரிகளையும் ஒண்ணா சந்திக்க வெச்சு, அவங்க அவங்க தேவைகளை நேரடியா கேட்டுத் தெரிஞ்சு வெச்சாரு.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஒவ்வோர் அதிகாரியையும் கூப்பிட்டு, என்ன வேலை செய்றீங்க... ஏன் இப்படி இருக்கீங்க. இதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அதுபத்தி எனக்குத் தேவையில்லை. ஆனா, இனிமேல் ஒழுங்கா வேலை பார்க்கணும். இல்லையின்னா டிரான்ஸ்பர் வாங்கிட்டு கிளம்பிடுங்க'னு சொல்லிட்டாரு. அது அதிகாரிக மத்தியில அதிருப்தியை உருவாக்கிடுச்சு. அதே போல அ.தி.மு.க ஆட்சியில அமைச்சரா இருந்த `அக்ரி' கிருஷ்ணமூர்த்தியோட உறவினர் ஒருத்தர், கட்டுப்பாட்டுலதான் திருவண்ணாமலை வேளாண் விற்பனைக்குழு இருந்துச்சு. அங்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து அதைச் சரிசெஞ்சாரு வள்ளலார்.

இப்படி அவர் எடுத்த நடவடிக்கையால ஒரு சிலரோட கட்டுப்பாட்டுல இருந்த வேளாண் விற்பனைத்துறை விவசாயிகள் பயன்பாட்டுக்குத் திரும்பிச்சு. அதைப் பொறுக்க முடியாத அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவங்க, இவரை இடமாற்றம் பண்ணிட்டாங்க. இதையெல்லாம்விட வருத்தமான விஷயம், வேளாண்துறை அமைச்சர் தன்னோட துறையில அவர் சமூகத்தைச் சேர்ந்த ஆளுங்கதான் இருக்கணும்னு நினைக்கிறாரு. அதுனால இவரை இடமாத்திட்டு அந்த இடத்துக்குத் தன்னோட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியைக் கொண்டு வந்திருக்காரு. மத்த அதிகாரிங்க மாதிரி இவரும், வந்தோமா, சீட்ல உக்காந்தோமா, நாலு காசு சம்பாதிச்சோமானு இருந்திருந்தா பிரச்னை இல்லை. ஆனா, வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்க்கணும்னு நினைச்சதுதான் தவறு'' என்றார் வருத்தமாக.

ஈசன் முருகசாமி
ஈசன் முருகசாமி

வள்ளலார் இடமாற்றம் தொடர்பாகக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம். அதன் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமியிடம் பேசினோம். ``தமிழ்நாடு அரசின் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை ஆணையராகக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட வள்ளலார் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென இடமாற்றம் செய்திருப்பது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை.

உழவர் சந்தைகளைச் சீரமைக்கக்கோரி எங்க சங்கம் சார்பா, செப்டம்பர் மாதம் வேளாண் விற்பனைத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் செய்வதற்காகக் கூடினோம். உடனே அலுவலகத்துக்கு உள்ளே இருந்து வந்த வள்ளலார் உங்க கோரிக்கைகளைக் கேட்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். உங்க ஆலோசனைகள் இந்த அரசுக்குத் தேவை' எனச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்று இரண்டு மணி நேரம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். உழவர் சந்தை குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு 4 மாத கால அவகாசத்தையும் கேட்டுப் பெற்றுக்கொண்டு, தொடர்ச்சியாகப் படிப்படியாக இயங்கி வந்தார். உழவர் சந்தைகளின் மேம்பாட்டுக்காக, உழவர் சந்தைகளில் நிலவிவரும் வியாபாரிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக, போலி விவசாயிகளின் வியாபாரத்தை ஒழிப்பதற்காக அரசாணைகளைப் பெறும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

உழவர் சந்தை
உழவர் சந்தை
`நாடாளுமன்றத்தில் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!' - வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து விவசாயிகள்

மேலும் விவசாயிகளை வியாபாரிகளாகவும் மாற்றுவதற்குத் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் நேரடியாகத் தயாரிக்கப்படும் அனைத்து பொருள்களையும் சந்தைப்படுத்துவதற்கு ஒரு மிகச் சிறப்பான ஏற்பாட்டைச் செய்து வந்தார். அந்த நிலையில் அவருடைய இடமாற்றம் தற்போது அவர் செய்து வந்த அனைத்து திட்டங்களையும் பின்னடைவைச் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது, அனைத்து விவசாயிகளையும், விவசாயச் சங்கங்களையும் வருத்தமடையச் செய்துள்ளது.

சிறந்த அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்திச் சிறப்பான ஆட்சி நடத்திவரும் தமிழக முதல்வர், வள்ளலார் போன்ற திறமையான அதிகாரிகளை நான்கே மாதத்தில் இடமாற்றம் செய்திருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை தற்போதைய முதல்வர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தேனி உழவர் சந்தை
தேனி உழவர் சந்தை
`வேளாண் சட்டங்கள் வாபஸ்’ - தேசிய, மாநிலத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?!

ஆனால், தற்போது உழவர் நலத்துறை அமைச்சர் தன் சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஆட்களை மட்டுமே தனக்கு அருகே வைத்துக்கொண்டுள்ளார். அவரது ஜாதி பாசமும் வள்ளலார் இடமாற்றத்துக்கு ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். நிர்வாகக் காரணங்களுக்காக அதிகாரிகளை இடமாற்றம் செய்வது இயல்புதான். ஆனால். நான்கே மாதத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த அதிகாரியை இடமாற்றம் செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு, வள்ளலார் பணியிட மாற்றத்தை ரத்து செய்து, அவரை மீண்டும் வேளாண் விற்பனைத்துறை ஆணையராக நியமிக்க வேண்டும். இதுதான் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு