Published:Updated:

`இதுக்கு மேல என்னன்னு சொல்றது?' - மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை; வேதனையில் விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடைந்த தளவானூர் தடுப்பணை
உடைந்த தளவானூர் தடுப்பணை ( தே.சிலம்பரசன் )

கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது. அன்றைய தினம் அரசியல் கட்சியினர் கொந்தளித்தனர். சட்டமன்றத் தேர்தலின் போது இந்த சம்பவத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரமும் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் பெண்ணை ஆறு 430 கி.மீ் தூரம் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 106 கி.மீ நீளம் பாய்ந்து செல்லுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், இந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சில சிறிய தடுப்பணைகளால் போதுமான நீரை தேக்கி வைக்க முடியாமல் போனது. இதனால் பெருமளவிலான நீர் கடலில் கலந்து வந்தது. புதிய தடுப்பணை வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, கடலூர் - விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் எனதிரிமங்கலம், தளவானூர் இடையே கடந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 25.37 கோடி திட்ட மதிப்பீட்டில் 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டு கட்டப்பட்ட அந்த தடுப்பணை 2020 ஆண்டு அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணையை அன்றைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார். கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி, எனதிரிமங்கலம் பகுதியில் அந்த தடுப்பணை திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது. அன்றைய தினம் அரசியல் கட்சியினர் கொந்தளித்தனர். சட்டமன்றத் தேர்தலின் போது இந்த சம்பவத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரமும் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கடந்த முறை உடைந்த தடுப்பணை பகுதி
கடந்த முறை உடைந்த தடுப்பணை பகுதி
விழுப்புரம்: ரூ. 25.37 கோடியில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை... மீண்டும் உடைந்தது! #ExclusiveVideo

அன்றைய தினம் உடைந்த தடுப்பணை அருகே தனது கட்சியினருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் பொன்முடி. அன்றைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமோ, ``உடைப்பு ஏற்பட்ட பகுதியில் புதியதாக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாகக் கட்டப்படும்" என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது அப்போதைய மாநில அரசு.

500 மீட்டர் நீளம் கட்டப்பட வேண்டிய இந்த தடுப்பணையை, 400 மீட்டர் நீளம் கட்டுவதற்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்ற கருத்து, இந்த தடுப்பணையை கட்டிய பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்ஷன் தரப்பில் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

``இந்தத் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டது சரிசெய்யப்படும் எனக் கூறி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இன்னும் 60 நாட்களுக்குள்ளாக சரி பண்ணினால்தான் எங்களுக்கு விவசாயம். அணை உடைந்த போது கட்சிக்காரர்கள் உடன் இங்கு அமர்ந்து போராட்டம் செய்த பொன்முடி, அமைச்சரான பின்பு இங்கு எட்டியும் பார்க்கவில்லை" என்று கூறிய அப்பகுதி மக்களின் ஆதங்கத்தையும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கத் தலைவர்களின் கருத்துகளையும், `உடைந்த தடுப்பணை; அன்று கொதித்த பொன்முடி... இன்று செவிசாய்க்காத துரைமுருகன்? - தவிப்பில் விவசாயிகள்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விரிவான ஃபாலோ அப் கட்டுரையை விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

பொன்முடி
பொன்முடி
தே.சிலம்பரசன்
உடைந்த தடுப்பணை: `அன்று கொதித்த  பொன்முடி... இன்று செவிசாய்க்காத துரைமுருகன்?' -தவிப்பில் விவசாயிகள்

அதன் பின்னர் மூன்று மாதங்கள் ஆகிய நிலையிலும் அந்த தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்படாமல் இருந்து வந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த அணையில் மேலும் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக மணல் போக்கிகளின் வழியே தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஓரிரு தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருவதினால் நீர் தடாகங்களில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அதன்படி தென்பெண்ணை ஆற்றிலும் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இந்த தடுப்பணையின் மறுபுறத்தில் (தளவானூர் பகுதி) உடைப்பு ஏற்பட்டு நீர் பெருக்கெடுத்துள்ளது. 3 மணல் போக்கிகளும் முழுவதுமாக சரிந்து சேதமடைந்துள்ளன. `எப்போது வேண்டுமானாலும் கீழே சரிந்து விழும்' என்ற நிலையில் காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அணையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிடுவதற்காக இன்று (09.11.2021) அங்குவந்த பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``விழுப்புரம் தொகுதியை ஒட்டிய பகுதியில் இந்த அணை சரிந்துள்ளது. இந்த தடுப்பணையை சரிசெய்ய வேண்டும் என்று ஏற்கனவே புரபோசல் அனுப்பியிருக்காங்க. அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறி இருக்காங்க. இரண்டு பகுதிகளிலும் சரி செய்வதற்காக கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை ஒதுக்கியிருக்காங்க. கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட இந்த அணையில், இந்த அளவுக்கு பாதிப்பு நடந்திருக்கு. கடந்த முறை இங்கு அமைச்சராக இருந்த சி.வி.சண்முகத்தின் தொகுதியில் கட்டப்பட்டதுதான் இது. இந்த தடுப்பணை கட்டியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருக்காங்க. அந்த நடவடிக்கை தொடரும்" என்றார்.

உடைந்த தளவானூர் தடுப்பணை
உடைந்த தளவானூர் தடுப்பணை
தே.சிலம்பரசன்
`புளியந்தோப்பில் மட்டுமல்ல; பி.எஸ்.டி-யால் கல்லணை கால்வாயிலும் பிரச்னைதான்!' - குமுறும் விவசாயிகள்

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம்.

``கடந்த முறை தண்ணீர் வந்தபோது எனதிரிமங்கலம் பகுதியில் ஒரு கதவுதான் உடைந்தது. இப்போ தளவானூர் பகுதியில் மொத்தமாக சாய்ந்துவிட்டது. இதில் அரசின் அலட்சியப் போக்கும் உள்ளது. முதன்முறையாக அணை உடைந்தபோது `விரைவில் சரி செய்யப்படும்' என கூறினார்கள். ஆனால் சரி செய்யவில்லை. இந்த அரசு வந்த பின்னாவது துரித நடவடிக்கையாக சரி செய்திருக்கலாம். ஆனா இவங்களும் செய்யல. இந்தத் தடுப்பணையில் தண்ணீர் நின்றால்தான் மலட்டாற்றில் தண்ணீர் வரும். இப்போ அந்த வாய்ப்பும் கிடையாது. இதனால் சுமார் 50 கிராமங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. மலட்டாற்றில் தண்ணீர் வராததால், எங்கள் பகுதியில் போர்வெல் ஆழம் 250 அடி வரை சென்றுவிட்டது. இம்முறை அது மாறிவிடும் என்று நினைத்து பார்த்தோம். ஆனால் அணையின் மறுபுறமும் உடைந்துவிட்டது" என்றனர் ஆதங்கமாக.

தடுப்பணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது தொடர்பாக கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம்.

``போன முறை தண்ணீர் வந்தபோது கடலூர் பகுதியில் தடுப்பணை உடைந்தது. இந்த முறை தண்ணீர் வந்தபோது விழுப்புரம் தளவானூர் பகுதியில் உடைந்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட உடைப்பையே இன்னும் சரி செய்து தரவில்லை. இப்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள், எப்போதுதான் இந்த அணையை சரிசெய்து விவசாயத்துக்கு பயன்படும்படி தண்ணீர் நிரப்பி தர போகிறார்களோ... என்று தெரியவில்லை.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

இதுக்கு மேல என்னன்னு சொல்றது? எவ்வளவு கோரிக்கைகள் வைப்பது? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதிகாரியிடம் கேட்டால், `பழைய உடைப்பை சரி செய்வதற்கு இப்போதுதான் அரசாணை வந்தது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது' என்கிறார்கள். எங்களுக்கு இந்த அணையை விரைவில் சரி செய்து தரணும்" என்றார் வருத்தமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு