Published:Updated:

`வழக்கு; ஆலோசனைக் கூட்டம்!' - மீண்டும் சூடுபிடிக்கும் 8 வழி பசுமைச் சாலை விவகாரம்

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 18-ம் தேதி, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு ஆதரவாக மத்திய அரசும் இவ்வழக்கில் இணைந்திருப்பதால், 8 வழி பசுமைச் சாலை விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டம், மத்திய அரசால் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. `இச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்கள் வழியாக 277 கி.மீட்டர் தொலைவு போடப்பட உள்ளது. இதில், 20 கி.மீட்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், 257 கி.மீட்டர் விளை நிலங்கள், கஞ்சமலை, சருகு மலை, கல்வராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை என 8 மலைப் பகுதிகள், 5-க்கும் மேற்பட்ட ஆறுகள், 100-க்கும் மேற்பட்ட ஏரிகள், 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள், 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்பட உள்ளன.

அளவீடு கல் அகற்றம்
அளவீடு கல் அகற்றம்

இப்படி முற்றிலும் பசுமையை அழித்து 8 வழி பசுமைச் சாலை போடப்பட இருக்கிறது' என்று விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டங்களுக்கு மாநில அரசு கொஞ்சமும் செவிசாய்க்காமல் 8 வழிச் சாலை பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடைச் சட்டத்தைப் போட்டு காவல்துறையினரைக் கொண்டு அச்சுறுத்தி, விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் கைதுசெய்து, நிலங்களைக் கையகப்படுத்தியது.

அதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர் நீதிமன்றம் சென்றார்கள். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ''இத்திட்டத்திற்கு அவசர கதியில் சட்டங்களை மீறி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் 8வழிச் சாலைக்கு அறிவிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்துசெய்வதாகக் கடந்த 2019 ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவிட்டது. அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் 2019 ஜூன் 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கூட்டம்
கூட்டம்

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 18-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு ஆதரவாக மத்திய அரசும் இவ்வழக்கில் இணைந்திருப்பதால், 8 வழி பசுமைச் சாலை விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி யிருக்கிறது. இதையடுத்து, சேலத்தில் 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், குப்பனூர் பகுதியில் ஆலோசனைக் கூட்டங்கள் போட்டு, அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குப்பனூர் கூட்டத்தில் கலந்துகொண்ட உழவர் உற்பத்தியாளர் பேரியக்கத்தின் செயலாளரும், 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயுமான நாராயணன், ``இதுவரை 8 வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மட்டுமே நேரடியாக ஈடுபட்டுவந்தது. மத்திய அரசு வாய் திறக்காமல் மௌனமாக இருந்துவந்தது. தற்போது, மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசும் இணைந்திருப்பது இயற்கைக்கும் விவசாயத்திற்கும் மத்திய அரசு எதிராகச் செயல்படுகிறது என்பதை உணரமுடிகிறது. அதை முறியடிப்பதற்காக, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து வழக்கு சம்பந்தமான முன்னெடுப்புகள் செய்ய இருக்கிறோம்'' என்றார்.

அருள் ஆறுமுகம்
அருள் ஆறுமுகம்

இதுபற்றி 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், ``மத்திய அரசு, 8 வழிச் சாலையை ஆதரித்து வழக்கில் இணைந்திருப்பதை நாங்கள் புதியதாகப் பார்க்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் நிலைப்பாடும், மத்திய அரசின் நிலைப்பாடும் ஒன்றுதான். இவர்கள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் ஆணவப் போக்கோடு நடந்துகொள்கிறார்கள். ஹைட்ரோ கார்பன், 8 வழிச் சாலை எனத் தொடர்ந்து தமிழகத்திற்கு அழிவுத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும். அதை தமிழகத்திலுள்ள எடப்பாடி அரசு ஆதரிக்கும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு