Published:Updated:

`தலைமடையிலயே இந்த நிலைமைனா, கடைமடையில்?’ -மேட்டூர் அணை திறந்தும் தீராத விவசாயிகளின் சோகம்

குடமுருட்டி ஆற்றில் மணல்-நாணல் திட்டுகள்
குடமுருட்டி ஆற்றில் மணல்-நாணல் திட்டுகள்

தூர் வாரும் பணியை ஆய்வுசெய்யும் சிறப்பு அதிகாரிகள், நெடுஞ்சாலைகளிலிருந்தவாறே பார்வையிடுகிறார்கள். அப்பகுதி சுத்தமாக வைக்கப்படுகிறது. கிராமங்களுக்குள் திடீர் விசிட் செய்தால் உண்மை நிலை தெரியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பொங்கிவரும் காவிரியை வரவேற்க, டெல்டா விவசாயிகள் ஆர்வத்தோடும், மகிழ்ச்சி ஆராவாரத்தோடும் காத்திருக்கிறார்கள். 9 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த ஆண்டுதான் குறுவை சாகுபடிக்காக சரியான தருணத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வெண்ணாறு
வெண்ணாறு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரிநீர் இன்னும் ஓரிரு நாள்களில் கல்லணையை வந்தடையும். அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், இந்த வார இறுதிக்குள் டெல்டா மாவட்டங்களுக்குள் பயணிக்கும். ஆனால், அனைத்து கிராமங்களுக்குள்ளும் பாய்ந்தோடி, விவசாயிகளின் வயல்களைக் குளிர்விக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், இந்த ஆண்டும் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3, 455 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி மேற்கொள்ள தமிழக அரசு 69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், இப்பணி முழுமையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆறுகளின் தலைமடைப் பகுதியிலேயே ஏராளமான முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பந்துருத்தி, திருவளாம்பொழில், நடுக்காவேரி, அந்தலி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றோம். இங்கு பாயும் குடமுருட்டி ஆற்றில் ஆங்காங்கே மணல் திட்டுகளும் நாணல்களும் சேர்ந்து தீவுகள் போல் காட்சியளிக்கின்றன. பாய்ந்துவரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்த இவை காத்திருக்கின்றன. இங்கு தூர் வாரப்பட்டதா? தூர் வாரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதா என இப்பகுதி விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி சுகுமாறன், ``கல்லணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலையிலேயே இந்த அவலம். இங்க தூர் வாரும் பணியே நடக்கலை. இவ்வளவு மோசமாக இருந்தால் எப்படி வாய்க்கால்களின் வாய்க்கால் வழியாகத் தண்ணீர் பாயும். தலைமடையிலயே இந்த நிலைமைனா, கடைமடை விவசாயிகளின் நிலைமையை நினைச்சிப் பாருங்க. இது, திருத்துக்கால் வாய்க்கால். இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏ சேனல் வாய்க்கால். நெய்வேலி காட்டாமணக்கும், ஆகாயத்தாமையும் மண்டி, முழுமையாகாவே அடைப்பட்டுக்கிடக்குது.

வெட்டாறு
வெட்டாறு

இந்த வாய்க்காலை நீர் ஆதாரமாகக் கொண்டு, கண்டியூர், காட்டுக்கோட்டை, மேலத்திருப்பந்துருத்தி, கீழத்திருப்பந்துருத்தி உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களில் உள்ள ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இதில் தண்ணீர் வரவே இல்லை” என ஆதங்கப்பட்டார்.

வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளிலும் ஆங்காங்கே மணல் மேடுகளும், களைச்செடிகளும் உருவாகி, நீர்வரத்து பாதையைத் தடுத்து நிற்கின்றன. தூர் வாரும் பணி முழுமையாக செய்யப்பட்டிருந்தால், இவ்வளவு மோசமாக இருக்குமா என இப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள். தூர் வாரும் பணியை ஆய்வு செய்ய வரக்கூடிய சிறப்பு அதிகாரிகள், பிரதான நெடுஞ்சாலைகளில் இருந்தவாறே ஆறுகளைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள். அங்கிலிருந்து கண்ணில் படக்கூடிய இடங்களில் மட்டும் கண் துடைப்புக்காக, முன் கூட்டியே தூர் வாரப்பட்டு அப்பகுதி சுத்தமாக வைக்கப்படுகிறது. ஆய்வுசெய்ய வரும் அதிகாரிகள், கிராமங்களுக்குள் திடீர் விசிட் செய்தால், உண்மை நிலை அவர்களுக்குத் தெரியவரும் என்கிறார்கள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு