Published:Updated:

FASTag:`உங்கள் சேவையைச் சரிசெய்துவிட்டு கட்டாயமாக்குங்கள்!’ - குளறுபடியால் கொதிக்கும் வாகன ஓட்டிகள்!

Fastag
Fastag

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வேலை செய்யாததற்கும், ஃபாஸ்டேக் இணையதளம் சரியாக வேலை செய்யாததற்கும் வாகன ஓட்டிகளை இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு, ஃபாஸ்டேக் (FASTag) சேவை கொண்டுவரப்பட்டது. இந்தச் சேவை, சுங்கச்சாவடிகளில் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவதன் மூலம், சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், அதேநேரத்தில், அவர்களின் வாகனத்தின் எரிபொருளை மிச்சப்படுத்தக்கூடும் என்ற நோக்கத்தோடும் கொண்டுவரப்பட்டது. பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், `ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்’ என்று மத்திய அரசு கூறியது.

Tollgate
Tollgate
Autocar India

பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த கோரிக்கையை அடுத்து, ஃபாஸ்டேக்குக்கான கால அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்றும், ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்திருந்தது. பிப்ரவரி 16-ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.

சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் நோக்கத்தில் ஃபாஸ்டேக் சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், இந்தத் திட்டத்திலுள்ள பல்வேறு குளறுபடிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உதாரணமாக, நேற்று ஃபாஸ்டேக் சர்வர் கோளாறு காரணமாக நீண்டநேரம் கட்டணம் செலுத்த முடியாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வேலை செய்யாமல், வரிசையில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்
ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்

உதாரணமாக, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவுகூர வேண்டும். தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் சுங்கச்சாவடி செயல்பட்டுவருகிறது. இந்தச் சுங்கச்சாவடிக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெகதீசன் தனது சரக்கு வாகனத்தில் வந்தார். அந்த சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் வேலை செய்யாததால் கட்டணம் செலுத்தும்படி ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். ஓட்டுநரான ஜெகதீசனின் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருந்திருக்கிறது. அவர் கையில் பணம் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியைவிட்டுச் செல்ல முடியாது என்று ஊழியர்கள் மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள்.

`ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனது ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருக்கிறது. கையில் பணம் எதுவும் இல்லை. ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லையென்றால் அது உங்கள் பிரச்னை’ என்று ஜெகதீசன் பேசியிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்க, ஒருகட்டத்தில் அந்தப் பெண் ஊழியர் ஜெகதீசனின் கன்னத்தில் ஓங்கி `பளார்’ என்று அறைந்துவிட்டார். பெண் ஊழியருக்குத் துணையாக வந்த மற்ற ஐந்து ஊழியர்கள் ஜெகதீசனைத் தனியாக அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.

ஜெகதீசனைத் தாக்கும் ஊழியர்கள்
ஜெகதீசனைத் தாக்கும் ஊழியர்கள்

தாக்குதலுக்கு உள்ளான ஜெகதீசன், சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அங்குள்ள ஊழியர்கள் ஐவரைக் கைதுசெய்தனர் போலீஸார். இது போன்றே இன்னொரு சம்பவம் செங்கல்பட்டு அருகிலுள்ள பரனூர் டோல் பிளாஸாவில் நடந்தது. அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், சுங்கச்சாவடி ஊழியரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் சில இடங்களில் மட்டும் நடைபெறவில்லை; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சுங்கச்சாவடிகளில் இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

FASTag பயன்பாட்டில் குளறுபடி; கொதிக்கும் வாகன ஓட்டிகள்... பிரச்னை என்ன?

``பல சுங்கச்சாவடிகளில், `ஊழியர்கள்’ என்ற போர்வையில் அடியாட்களை வேலைக்கு வைத்துக்கொண்டு, அங்கு நடக்கும் தவறுகளை என்னவென்று யாரேனும் கேட்டால், ஜெகதீசனுக்கு நடந்த கதிதான் அவருக்கும் நடக்கிறது” என வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். சுங்கச்சாவடி ஊழியர்கள் பலர் மீதும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதற்குத் தடைவிதித்தும், பாதிக் கட்டணம் வசூல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவை மீறி முழுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் வாகன ஓட்டிகள்.

ஃபாஸ்டேக் ஏஜென்சி - வேலூர்
ஃபாஸ்டேக் ஏஜென்சி - வேலூர்

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வேலை செய்யாததற்கும், ஃபாஸ்டேக் இணையதளம் சரியாக வேலை செய்யாததற்கும் வாகன ஓட்டிகளை இரண்டுமடங்கு கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். `முதலில் அனைத்துச் சேவைகளையும் சரிசெய்துவிட்டு, பின்னர் அந்தச் சேவையைச் செயல்படுத்துங்கள்’ என்று கூறுகிறார்கள் வாகன ஓட்டிகள்.

அடுத்த கட்டுரைக்கு