Published:Updated:

`இத்தாலியிலிருந்து வந்த மகன்; புகைப்படத்துடன் பரவும் வதந்தி!’ -கலங்கும் பேராவூரணி பெற்றோர்

கொரோனா
கொரோனா

அந்த இளைஞருக்குக் கொரோனா தாக்கியிருப்பதாகவும் சென்னையில் வைத்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், அங்கிருந்து தப்பி வந்து விட்டார் எனச் சிலர் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவற்றில் வதந்தி பரப்பியுள்ளனர்.

இத்தாலியில் பணிபுரிந்துவிட்டு தன் சொந்த ஊரான பேராவூரணி திரும்பிய இளைஞர் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளைஞரின் பெற்றோர் தஞ்சாவூர் கலெக்டருக்குக் கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

பேராவூரணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்தாலி நாட்டில் பணிபுரிந்து வந்தார். இவருடைய அப்பா பாண்டியன். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா இத்தாலி நாட்டிலும் பரவியது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தாலியில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இத்தாலியில் பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த இளைஞக்கு கொரோனா பாதிப்பு இல்லாததையடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அவர் மும்பை வழியாக மதுரை வந்து பின்னர் நேற்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதனிடையே அந்த இளைஞருக்கு கொரோனா தாக்கியிருப்பதாகவும் சென்னையில் வைத்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து தப்பி வந்து விட்டார் எனச் சிலர் குறிப்பிட்ட இளைஞரரின் போட்டோவைப் பயன்படுத்தி வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவற்றில் வதந்தி பரப்பியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கூறி வருகிறார்.

கொரோனா
கொரோனா

இது குறித்து பாண்டியனிடம் பேசினோம், ``எனது மகன் இத்தாலியில் வேலை பார்த்தான். அங்கு கொரோனா பரவியதையடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இத்தாலியிலும் மும்பையிலும் சோதனை செய்யப்பட்டுக் கொரோனா பதிப்பு இல்லை என அறிந்து அதற்குறிய மருத்துவச் சான்றிதழையும் கொடுத்து அவனை ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திலும் சோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என மீண்டும் உறுதி செய்யப்பட்ட்து. ஆனால், உங்க ஊருக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் தகவல் சொல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி பேராவூரணி மருத்துவமனைக்குச் சென்று விவரத்தைக் கூறினான். அவர்களுக்கும் சோதனை செய்து எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக சில தினங்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் தங்கியிருக்க வேண்டும் என்று மட்டும் கூறினர். இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதுடன் தற்போது மருத்துவக்கல்லூரியில் தங்கியிருக்கிறான். என் மகனுக்கு அங்கு செய்யப்பட்ட சோதனையிலும் கொரோனா பதிப்பு இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொரோனா
கொரோனா

ஆனால், பேராவூரணியில் எனது மகனுக்குக் கொரோனா இருப்பதாகவும் சென்னையில் சிகிச்சையில் இருந்த அவன் தப்பித்து வந்து விட்டதாகவும் அவன் போட்டோவைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதனால் நாங்க மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். நல்லாயிருக்கிற என் மகனைப் பற்றி இப்படிச் சொல்றாங்களே என அவன் அம்மா தவித்தபடி அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதையும் மீறி மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையிலும், எங்களுக்கு மன உளைச்சல் உண்டாக்குகிற வகையில் வதந்தி பரப்பியவர்கள் மீது தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு