Published:Updated:

`ஊரடங்கில் 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள்!’ - மாநகராட்சியோடு கைகோத்த `ஃபீட் மை சென்னை’ தன்னார்வ அமைப்பு

ஃபீட் மை சென்னை
ஃபீட் மை சென்னை

``ஒருவரின் பசியை ஆற்றுவதைவிட, இந்த வாழ்வின் நிறைவுக்கு வேறென்ன வேண்டும்?" - நெகிழும் `ஃபீட் மை சென்னை' தன்னார்வ அமைப்பினர்.

கொரோனா தாக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்தியாவே முடங்கிப்போய் இருக்கிறது. இப்படியான தொடர் ஊரடங்கு காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளும் புலம்பெயர்ந்து நம் ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கும் தினக்கூலிளும்தான். இப்படியானவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், உணவும் இருப்பிடமும். அந்த இரண்டையும் நிவர்த்திசெய்வதுதான், தலையாய கடமை என அரசு உணர்ந்து வரும் இந்தச் சூழலில், அரசோடு இணைந்து, பல தன்னார்வ அமைப்புகள் கைகோத்து களத்தில் இறங்கியுள்ளன.

ஃபீட் மை சென்னை
ஃபீட் மை சென்னை

அப்படி ஒரு தன்னார்வ அமைப்புதான், `ஃபீட் மை சென்னை' (Feed My Chennai). சென்னையின் மிகமுக்கியமான சில தனியார் நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள், நிர்வாக இயக்குநர்கள், நிறுவனர்கள் 10 பேர் இணைந்து உருவாக்கியதுதான், இந்த ஃபீட் மை சென்னை இனிஷியேட்டிவ்.

டி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் தலைவர் கோபால் ஶ்ரீநிவாசன்,

சிஃபி & தி சென்னை ஏஞ்சல்ஸின் நிறுவனத்தைத் தோற்றுவித்த ராமராஜ்,

கெவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன்,

யுனிமிடி சொல்யூஷன்ஸின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன்,

டி.ஐ.இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அகிலா ராஜேஷ்வர்,

டி.எஸ்.மகாலிங்கம் குழுமத்தின் பங்குதாரரும் இயக்குநருமான மகாலிங்கம்,

காங்குரென்ட் சொல்யூஷன்ஸின் இணை இயக்குநர் பலராமன் ஜெயராமன்,

டி.வி.எஸ். எலெக்ட்ராடிஸின் இணைத்தலைவர் பிரசன்னா,

ஆக்ஸோஹப் நிறுவனத்தின் நிறுவனர் யாஷாஸ்வினி ராஜசேகர்,

மார்கா சிஸ்டஸின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி

- ஆகியோர்தான் அந்த 10 பேர்!

ஏப்ரல்-1 ம் தேதி முதல் உணவளிக்கும் சேவையைத் தொடங்கிய இந்த அமைப்பு, இந்நாள் வரை ஐந்து லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளதாம். பிற நேரத்தைவிடவும், தொற்றுநோய்ப்பரவுதலின்போது உணவு விநியோகிப்பதென்பது, மிகவும் சவாலான காரியம் என்றே சொல்ல வேண்டும். காரணம், கொஞ்சம் தவறினாலும், தொற்று அபாயம் ஏற்பட்டுவிடும். அந்த வகையில், இந்தச் சேவைக்கு பொறுப்பும் பொறுமையும் மிகவும் அவசியம். இத்தனை லட்சம் உணவுப்பொட்டலங்களை இவர்கள் விநியோகித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகும். இதை இவர்கள் எப்படி சாத்தியப்படுத்தினர் எனத் தெரிந்துகொள்ள, ஒருங்கிணைப்பார்களில் ஒருவரான டி.எஸ்.மகாலிங்கம் குழுமத்தின் பங்குதாரரும் இயக்குநருமான மகாலிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.

ஃபீட் மை சென்னை
ஃபீட் மை சென்னை

``இது, சிரமமான விஷயமென நாங்கள் நினைக்கவில்லை. மாறாக, சவாலானது என்றே நினைக்கிறோம். இருப்பினும், எல்லா சவால்களுக்கும் துணிந்தே இதை நாங்கள் செய்யத் தொடங்கினோம். இதற்கு முன்பு, இப்படியான தன்னார்வ அமைப்புகளில் எங்களுக்கு அனுபவமில்லை என்பதால், அனுபவம் பெற்றவர்களிடமிருந்து அறிவுரைகள் பெற்றுக்கொண்டோம். இதற்கு முன் பெங்களூரில் கணேஷ் என்பவர் இலவச உணவு விநிநோயகத்தை 'ஃபீட் மை பெங்களூரு' என்ற பெயரில் மேற்கொண்டிருந்தார்.

இப்போது அவரோடு இணைந்து, சென்னையில் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதில் புலம் பெயர்ந்து வந்து நம் ஊரில் பணிபுரிந்துகொண்டிருக்கும் தினக்கூலிகளுக்கு, உணவளிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கக் காரணம், இப்போது அவர்களின் வாழ்வாதாரம்தான் கேள்விக்குறியாகியிருக்கிறது. ரேஷன் அட்டை இல்லாத இவர்களுக்கு, அரசின் நிதிஉதவிகூட கிடைத்திருக்காது. அப்படியிருக்கும்போது, சாப்பாட்டுக்கு எங்கே போவார்கள்?

நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம் ஊரையும் நம்மையும் நம்பி வேலைக்கு வந்தவர்களின் பசியைப் போக்கவேண்டியது நம் கடமை இல்லையா?
ஃபீட் மை சென்னை அமைப்பினர்
நாங்கள் மிகக் கவனமாக இருக்கும் மற்றொரு விஷயம், உணவின் தரம். அந்த வகையில் சத்தான உணவு, சுத்தமான உணவு என்பது மட்டுமே எங்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஃபீட் மை சென்னை
ஃபீட் மை சென்னை

இவையெல்லாம் ஒருபக்கம் இருப்பினும், நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு, இவர்களுக்கு மட்டுமன்றி உணவுக்கு சிரமப்படும் அனைவருக்குமே உணவளித்து வருகிறோம். நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், மாஸ்க், சானிடைஸர் போன்றவற்றை விநியோகிக்கலாமே என சிலர் சொல்லக் கேட்க முடிகிறது. ஆனால் மாஸ்க் - சானிடைஸரைவிடவும், உணவுதான் மிக மிக முக்கியமென எங்களுக்குத் தோன்றியது.

எங்களின் இந்தச் சேவையில், நாங்கள் வெறும் ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும்தான். டொனேஷன் கலெக்ட் செய்வது தொடங்கி களத்தில் இறங்கிச் செயல்படுவது வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்பில், எங்கள் தன்னார்வலர்கள் மட்டுமன்றி மேலும் இரண்டு தரப்பினருக்கு நன்றி கூற விரும்புகிறோம். ஒன்று, சென்னை மாநகராட்சி. மற்றொன்று, எங்களுக்கு நிதி அளிப்பவர்கள்.

ஃபீட் மை சென்னை
ஃபீட் மை சென்னை

இவர்கள் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அளவுக்கதிகமான உணவு விநியோகிக்கும்போது, இரு மாபெரும் சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. அவை, உணவு மீதமாவதும், நிதிப்பிரச்னையும். ஆனால் எங்களுக்கு இவை இரண்டுமே ஏற்படவில்லை. இதில் உணவு மீதமாகாமல் இருக்கக் காரணம், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள்தான்.

தினமும் அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு எந்தப் பகுதியில் எத்தனை உணவுப்பொட்டலங்கள் தேவை என அப்டேட் செய்வார்கள். பல நேரங்களில், `இந்த இடத்துக்கு இத்தனை சப்பாத்தி பொட்டலங்கள், சாப்பாடு பொட்டலங்கள் அனுப்பி வையுங்கள்' என அறிவுரையும் சொல்வார்கள். அவர்களிடம் கேட்டு, தேவைக்கேற்ப சமைப்போம். நிதியைப் பொறுத்தவரை, எங்களுக்கு பிரச்னையே இல்லை. 100 ரூபாய் தொடங்கி லட்சக் கணக்கில் எங்களுக்கு நிதி தருகிறார்கள் ஒவ்வொருவரும். ஒவ்வொரு ரூபாயும் இங்கு மதிப்புமிக்கது.

ஃபீட் மை சென்னை
ஃபீட் மை சென்னை

இந்த உணவளிக்கும் சேவையில், நல்ல மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கான பெரிய ஆறுதல். அந்த ஆறுதல் தரும் நிறைவைத்தவிர, வாழ்க்கைக்கு வேறென்ன தேவைப்பட்டுவிடப்போகிறது..." என்கிறார் அகமகிழ்ச்சியோடு.

அடுத்த கட்டுரைக்கு