Published:Updated:

`கோபூஜை... ஆரத்தி... ஆடிப்பெருக்கு நீராடல்!’ - மதுரையில் முதல்முறையாய் வைகைப் பெருவிழா!

முத்துக்குமரன் மு
வி.சதிஷ்குமார்

நதி, வணங்கப்பட வேண்டியது. அதை அசுத்தப்படுத்துவதும் அதில் கழிவுகளைக் கொட்டுவதும் கூடாது. நதிகளை மீட்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தத்தான் இந்தப் பெருவிழா!

வைகைப் பெருவிழா
வைகைப் பெருவிழா

ஆடிப் பெருக்கையொட்டி, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் முதல்முறையாக நடத்தும் ‘வைகைப்பெருவிழா – 2019’ மாநாடு மதுரையில் இன்று தொடங்கியது. மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் இன்றுதொடங்கி 12 நாள்களுக்கு நடைபெறுகிறது.

வைகைப் பெருவிழா
வைகைப் பெருவிழா

இப்பெருவிழாவில் துறவிகள் மாநாடு, பெண்கள் மாநாடு, வைஷ்ணவ மாநாடு, ஐயப்பப் பக்தர்கள் மாநாடு, பூசாரிகள் மாநாடு, சிவனடியார்கள் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, முத்தமிழ் மாநாடு, இளைஞர்கள் மாநாடு, நதிநீர்ப் பாதுகாப்பு மாநாடு, விவசாயிகள் மாநாடு, சன்மார்க்கர்கள் மாநாடு, சித்தர்கள் மாநாடு என ஒவ்வொரு நாளும் தனித்தனியே மாநாடு நடைபெறவுள்ளது. முத்தாய்ப்பாக ஆகஸ்ட் 3-ம் நாள் ஆடிப்பெருக்கில் வைகையில் மாபெரும் நீராடல் நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த வைகைப் பெருவிழா மாநாட்டுக்கு வருகிற துறவிகள் மற்றும் மக்கள் தங்கிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரம்பேர் அமர்ந்து மாநாட்டைக் கண்டிடவும், தினசரி அன்னதானத்திற்கும் ஏற்பாடாகியுள்ளது. 108 கோ-பூஜை, தினசரி மாலைவேளைகளில் வைகையில் ஆரத்தி வழிபாடு, ஒரு லட்சம் பேர் பங்குபெறவுள்ள ஆடிப்பெருக்கு நீராடல், ஆன்மிக சமயச்சான்றோர் சொற்பொழிவுகள், கிராமியக் கலைநிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

வைகைப் பெருவிழா
வைகைப் பெருவிழா

ஆகஸ்ட் 2 அன்று மத்திய நீர்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் -யும், ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு தினத்தன்று துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். விழாவின் நிறைவுதினமான ஆகஸ்ட் 4 அன்று நீர்சக்தித்துறை அமைச்சர், தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், ப.ரவீந்திரநாத்குமார், முன்னாள் எம்.பி., நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ராஜன் செல்லப்பா, மதுரை ஆட்சியர், மாநகர ஆணையர், காவல் ஆணையர் என ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இங்கு வருகை தரவுள்ளனர். அர்ஜுன் சம்பத், பா.ஜ.க., தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

வைகைநதி மக்கள் இயக்கம் ராஜனிடம் இதுகுறித்து பேசினோம். “காவிரி, தாமிரபரணியைத் தொடர்ந்து வைகையிலும் ஆடிப்பெருக்கைக் கொண்டாடுவதற்காக முதல்முறையாய் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளோம். ஆற்றில் உறைகிணறு அமைத்து வழிபட இருக்கிறோம். இயற்கை வளங்களுள் ஒன்றான நதிகளைத் தூய்மையாய்ப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது” என்றார்.

வைகைப் பெருவிழா
வைகைப் பெருவிழா

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கச் செயலாளர் சுவாமி வேதானந்த ஆனந்தா கூறுகையில், “நதி, வணங்கப்பட வேண்டியது. அதை அசுத்தப்படுத்துவதும் அதில் கழிவுகளைக் கொட்டுவதும் கூடாது. நதிகளை மீட்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தத்தான் இந்தப் பெருவிழா” என்றார்.