தென்னிந்திய திருச்சபை எனப்படும் சி.எஸ்.ஐ திருமண்டலங்களுக்கு உட்பட்டு 24 திருமண்டலங்கள் இருக்கின்றன. 24 திருமண்டலங்களின் தலைவராக பிரதம பேராயர் பதவி வகிப்பார். ஒவ்வொரு திருமண்டலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ பள்ளிகள், நூற்றுக்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ ஆலயங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. இவை அந்தந்த திருமணடலத்தின் பேராயரின் கட்டுப்பாட்டில் இயங்கும். பேராயர் இவற்றின் நிர்வாகத்தினை கவனிப்பார். திருமண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை குருவானவர் கவனிப்பார். இவர்களின் ஓய்வு பெறும் வயது 67-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓய்வு பெறும் வயதினை 67-ல் இருந்து 70-ஆக உயர்த்திட முடிவு செய்யப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 திருமண்டலங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 மண்டலங்களில் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு திருமண்டலங்களிலும் நிர்வாகக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துவருகிறது. அதே நேரத்தில், இதற்கு திருமண்டலத்தின் பெருமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி, சண்முகபுரத்தில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதம பேராயர் தர்மராஜ் ரசலம், கேளர மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அவருடன் கோவை திருமணடல பேராயரும், தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் பேராயராகப் பொறுப்பு வகித்து வரும் ரவீந்திரனும் வந்திருந்தார். ஆனால், திருமண்டல நிர்வாகிகள், திருமண்டலத்தைச் சேர்ந்த மக்கள், பேராயரையும், பிரதம பேராயரையும் ஆலயத்துக்குள் வர விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். இருவரும் காரை விட்டு இறங்காமல் திரும்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆலோசனைக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கெனவே தூத்துக்குடி – நாசரேத் திருமணடலத்தின் பேராயராக இருந்த தேவசகாயம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் பேராயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது பிரதம பேராயராக உள்ள தர்மராஜ் ரசலும் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வுபெற இருக்கிறார். இந்த நிலையில் தங்களின் பதவியை தக்க வைப்பதற்காக ஓய்வு பெறும் வயதினை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்ற முயற்சி செய்வதாக திருமணடல, பெருமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். பேராயர், பிரதம பேராயர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் திருமண்டல சி.எஸ்.ஐ கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.