Published:Updated:

இந்தியன் - 2 விபத்தில் 3 பேர் உயிரிழந்தது எப்படி?!- போலீஸாரிடம் விவரித்த இணை இயக்குநர்

இந்தியன் - 2   படப்பிடிப்பு தளம்
இந்தியன் - 2 படப்பிடிப்பு தளம்

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் நடந்த `இந்தியன் - 2' படப்பிடிப்பில் விபத்து எப்படி நடந்தது என்று இணை இயக்குநர் பரத்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

`இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்தது. 19.2.2020-ம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் (27), ஆர்ட் உதவியாளர் சந்திரன் (58) ஆகிய 3 பேர் இறந்தனர். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார்.

காலா, பிகில், இந்தியன் 2... மொத்தம் ஏழு பேர்! - ஈ.வி.பி-யில் இதுவரை நடந்த விபத்துகள்
இந்தியன் 2
இந்தியன் 2

இந்த விபத்தில் காயமடைந்த இணை இயக்குநர் குமார் என்கிற பரத்குமார் (52) என்பவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் கெருகம்பாக்கம், ஜெயராம் நகரில் குடியிருந்துவருகிறேன். ஒன்றேகால் வருடமாக லைகா நிறுவனத்தில் சினிமா படப்பிடிப்பில் இணை இயக்குநராக பணியாற்றிவருகிறேன். கடந்த 10 நாள்களாக செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் டைரக்டர் ஷங்கர் இயக்கும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் `இந்தியன் -2' சினிமா படப்பிடிப்பு நடந்துவந்தது.

19.2.2020 இரவு 9.30 மணியளவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது படப்பிடிப்புத் தளத்தைச் சுற்றிலும் 5 ராட்சத கிரேன்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதில் வடக்கு தெற்காக தெற்கு திசையை நோக்கியவாறு ராட்சத மின்விளக்குகளுடன் கூடிய டிஎன் 18 ஏஆர் 9858 என்ற பதிவெண் கொண்ட கிரேன் வாகனமானது 35 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் கிரேனை ராஜன் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார்.

எஸ்.ஆர்.சந்திரன்
எஸ்.ஆர்.சந்திரன்

திடீரென அந்தக் கிரேன் கிழக்குப் பக்கமாக சாய்ந்து கீழே விழுந்ததில் சந்திரன் என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் மது, கிருஷ்ணன், ராம்ராஜ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் என்னுடன் இருந்த வாசு அருண்பிரசாத், குணபாலன், மாத்துங்யாந்தன், திருநாவுக்கரசு, முருகதாஸ், ராமசான்புல்ட், மென்டோசா மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டன.

எங்கள் அனைவரையும் படப்பிடிப்பு தளத்திலிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டாக்டர்கள் பரிசோதித்து சந்திரன், மது, கிருஷ்ணன் ஆகியோர் இறந்துவிட்டதாக உறுதி செய்தார்கள். காயமடைந்த நாங்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகிறோம். எனவே, மிகுந்த அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் கிரேனை இயக்கிய ராஜன் மீதும் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அஜாக்கிரதையாக படப்பிடிப்பு நடத்திய லைகா படப்பிடிப்பு நிறுவன புரொடக்ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

`அந்த நொடியிலும் ஒரு பெண்ணைக் காப்பாற்றினார் கிருஷ்ணா!' -விபத்தை விவரிக்கும் `இந்தியன் 2' படக்குழு
எப்.ஐ,ஆர்
எப்.ஐ,ஆர்

இணை இயக்குநரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், புரொடக்ஷ்ன் மேனேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 287, 337, 338, 304 (ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை பூந்தமல்லி உதவி கமிஷனர் விசாரணை நடத்திவருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் உள்பட அனைவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த `இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்துக் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு