Published:Updated:

மதுரை: `லாக்டெளனிலும் பணத்தைக் கட்டச்சொல்லி மிரட்டுறாங்க!’ - ஃபைனான்ஸ் நிறுவனத்தால் கலங்கும் பெண்கள்

ஃபைனான்ஸ் மிரட்டல்கள் (கோப்பு)
ஃபைனான்ஸ் மிரட்டல்கள் (கோப்பு)

லாக்டெளன் காரணமாக எங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது வேலைக்குச் செல்வது வீட்டுச் செலவுக்குதான் சரியாக உள்ளது. அதன் காரணமாகக் குறைந்த அளவு பணத்தைத்தான் தற்சமயம் கட்ட முடிகிறது.

கொரோனா ஊரடங்கு வரலாறு காணாத மாற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து சிரமப்படுகின்றனர். ஊரடங்கு தளர்வு இருந்தாலும் சராசரி வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத இந்த இக்கட்டான நேரத்தில் தங்களுடைய கடனை உடனடியாக செலுத்த வேண்டும் எனத் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அழுத்தம் கொடுப்பதாகப் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

கொரோனா
கொரோனா

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கிராமப் பெண்கள் சிலர், "லாக்டெளன் காரணமாக எங்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது வேலைக்குச் செல்வது வீட்டு செலவுக்குதான் சரியாக உள்ளது. அதன் காரணமாகக் குறைந்த அளவு பணத்தைத்தான் தற்சமயம் கட்ட முடிகிறது. பல ஃபைனான்ஸ்காரர்களும் நிலைமையைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், 'மதுரா ஃபைனான்ஸ்' என்ற நிறுவனத்தில் திருவேடகம் கிளையில் வேலை செய்யும் சித்ரா தேவி என்ற பெண் ஊழியர் எங்களைத் தகாத வார்த்தையில் பேசி பணத்தைக் கட்டச் சொல்கிறார். அவர் வாயில் வரும் வார்த்தைகள் அனைத்தும் கேட்க முடியாத ஒன்று.

சக பெண் என்ற உணர்வு இல்லாமல் பேசுகிறார். அதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, குறிப்பிட்ட தனியார் நிறுவங்களைத் தற்கொலைக்குத் தூண்டும் விதமாகப் பேசாமல் சில வாரங்கள் பொறுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ள அரசு உத்தரவு விடவேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட சித்ரா தேவி என்ற ஃபைனான்ஸ் ஊழியரிடம் பேசினோம், ``நான் யாரையும் மிரட்டவில்லை. பணம் கட்டவில்லை என்றால் வட்டி கூடிவிடும் என்று கனிவாய்தான் சொல்லி இருக்கேன். நான் யாரையும் மிரட்ட வேண்டும் என அவசியம் இல்லை" என்று தெரிவித்தார்.

ஃபைனான்ஸ் மிரட்டல்கள் (கோப்பு)
ஃபைனான்ஸ் மிரட்டல்கள் (கோப்பு)

இது குறித்து மதுரா ஃபைனான்ஸில் பணியாற்றும் மதுரை மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, "யாரையும் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கச் சொல்லவில்லை. இந்த லாக் டெளன் சமயத்தில் எப்படிப் பணத்தை மிரட்டி கேட்க முடியும். இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் பேசிகிறேன். அவர் யாரையும் தவறாகப் பேசி இருக்க மாட்டார். அப்படிப் பேசி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் நமக்கு அனுப்பிய ஆடியோவில் ஃபைனான்ஸ் ஊழியர் சித்ரா தேவி பணம் கட்டாத பெண்களைத் தரைக்குறைவாகப் பேசி இருந்தார். `பணம் கட்ட முடியவில்லை என்றால் செத்துவிடு. அதில் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் பணத்தை வைத்து பணத்தை கட்டிக்கொள்கிறேன்” என்று பேசி இருந்தார். மேலும், சொல்ல முடியாத பல்வேறு வார்த்தைகளையும் பயன்படுத்திப் பேசி இருந்தார் என்பதும் வேதனைக்குரியது.

அடுத்த கட்டுரைக்கு