Published:Updated:

`பெரியகோயில் குடமுழுக்கு!' -ஓவியக் கல்லூரி மாணவர்கள் கைவண்ணத்தில் வண்ணமயமாகும் தஞ்சை சுவர்கள்

தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்கள்
தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்கள்

பொன்னியின் செல்வன் நாவலைக் காட்சிப்படுத்தக்கூடிய ஓவியங்கள், சிவ தாண்டவம், மாமன்னன் ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றம், தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள், தலையாட்டி பொம்மை, வயல்வெளிகள் போன்ற ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்கள் கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவ, மாணவிகள். பெரியகோயிலுக்கு வரக்கூடிய பொதுமக்களை இந்த ஓவியங்கள் கவர்ந்திழுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவர்கள்
கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவர்கள்

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலையின் மீதான தாக்கத்தினாலும், சிவ பக்தியினாலும்தான் மாமன்னன் ராஜராஜ சோழன், உலகமே வியக்கக்கூடிய கலைப்பொக்கிஷமாக தஞ்சை பெரியகோயிலை கட்டி எழுப்பினார். இதனால்தான் இக்கோயிலில் ஆன்மிகமும் கலைநயமும் சேர்ந்து மிளிர்கிறது.

கும்பகோணம் ஓவியக்கலூரி மாணவர்கள்
கும்பகோணம் ஓவியக்கலூரி மாணவர்கள்

கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவர்கள், தஞ்சை நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள். பெரியகோயில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது, அதை மாமன்னன் ராஜராஜசோழன் பார்வையிடுவது போன்ற ஒவியங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. தற்பொழுது பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டும், தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். தற்போதைய தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்தராவ் இந்த ஓவியங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த ஒரு மாதமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொன்னியின் செல்வன் நாவலைக் காட்சிப்படுத்தக் கூடிய ஓவியங்கள், சிவ தாண்டவம், மாமன்னன் ராஜராஜ சோழனின் கம்பீரத் தோற்றம், தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள், தலையாட்டி பொம்மை, வயல்வெளிகள் உட்பட 170-க்கும் அதிகமான ஓவியங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

`எவ்வளவு அழகு தஞ்சை பெரிய கோயில்!' - தீயணைப்பு வாகனத்தின் உதவியால் மெய்சிலிர்த்த மக்கள்

தஞ்சைக்கு வரும் வெளியூர் மக்கள், இந்த ஓவியங்களைக் காண, அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவைகளில் இருந்து பெரிய கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே இந்த ஓவியங்களை கண்டுகளிக்கலாம். நள்ளிரவில் கொட்டும் பனியிலும், பகலில் கொளுத்தும் வெயிலிலும் ஓவியக் கல்லூரி மாணவ மாணவிகள் மிகுந்த அர்ப்பணிப்போடு, இந்த ஓவியங்களைப் படைத்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு