Published:Updated:

`தாக்கியதோடு, தனிமைச் சிறையில் அடைத்தார்கள்!' - திருச்சி சிறை அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு

திருச்சி சிறை
திருச்சி சிறை

சிறைக்காவலர்கள் இருவரும் சேர்ந்து எனது மகன் முனியசாமியையும் தலையில் தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த எனது மகனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருச்சி மத்திய சிறையில் கைதியைத் தாக்கிய விவகாரத்தில் சிறைக்காவலர்கள் மற்றும் ஜெயிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முனியம்மாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில், `என்னுடைய மகன் முனியசாமி திருச்சி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறை
சிறை
மாதிரிப் படம்

கடந்த அக்டோபர் 5-ம் தேதி அங்குள்ள 6-வது பிளாக்கில் இருந்துள்ளார். அப்போது 2 கைதிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சீருடை அணியாமல் இருந்த காவலர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர். அப்போது, எதற்காக இருவரையும் அடிக்கிறீர்கள் என்று கைதி ஒருவர் கேட்டுள்ளார். அப்போது சிறைக்காவலர்களான புண்ணியமூர்த்தி, முருகானந்தம் ஆகிய இருவரும் நியாயத்தைத் தட்டிக் கேட்ட அந்தக் கைதியைத் தாக்கியுள்ளனர்.

இதைக் கவனித்த என்னுடைய மகன், `ஏன் இவரைத் தாக்குகிறீர்கள். இந்தக் கைதிக்கு உடல்நிலை சரியில்லை' எனக் கூறி உள்ளார். உடனே, சிறைக்காவலர்கள் இருவரும் சேர்ந்து எனது மகன் முனியசாமியையும் தலையில் தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த எனது மகனை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர்.

`உன்னை நீயே சாகடிக்கும் வரை தொந்தரவு செய்வேன்!'- புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை!

என்னைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. மேலும் எனது மகன் முனியசாமி திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ஜே.எம்- 2 நீதிபதியிடம், நடந்த சம்பவம் குறித்தும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு கொடுத்தார். நீதிபதியும், அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார் .

ஆனால் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்ற வேண்டும். மேலும் எனது மகனை சிறைத்துறை அதிகாரிகள் எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``சிறைக்காவலர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம் ஆகியோர் மீதும் மற்றும் ஜெயிலர் ரமேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறி அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதியரசர்.

பின் செல்ல