Published:Updated:

சிவகாசி: `ராஜாஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்கத் தடை!’ - ரூ.150 கோடி விற்பனை பாதிக்கும் அபாயம்

பட்டாசு
பட்டாசு

``ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், சுமார் ரூ.150 கோடி வரை பட்டாசு விற்பனை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது’’ என்று கவலையுடன் கூறுகின்றனர் சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்கள்.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே இருக்கின்றன. புத்தாடைகள், பட்டாசுக் கடைகளில் விற்பனை களைகட்டிவருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல், காற்று மாசுபாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி, அம்மாநில முதல்வர்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், ஒடிசாவில் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை

இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசுகள், சிவகாசியிலிருந்து விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருக்கும் தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மிகவும் கவலையடைந்திருக்கிறார்கள். பட்டாசு விற்பனை மீதான தடையை நீக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் இரண்டு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

இது குறித்து டான்பாமா சங்கத்தின் (தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்) தலைவர் கணேசனிடம் பேசினோம், ``விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தொழிற்சாலைகளுக்கு உள்ளே மூன்று லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் உற்பத்தியில் ஐந்து லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

பட்டாசு
பட்டாசு

1,070 பட்டாசு ஆலைகள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ரூ.3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் உற்பத்தி செஞ்சுட்டுவர்றோம். ஆனால், கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு 30 சதவிகித உற்பத்திக் குறைவால், ரூ.800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொரோனாவைக் காரணம்காட்டி பட்டாசு வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. இந்த அறிவிப்பால் ரூ.150 கோடி வரை விற்பனை பாதிக்கப்படும். கொரோனா பாதிப்புக்கும், பட்டாசு வெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தடைசெய்யப்பட்ட ரசாயன மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு விற்பனையை மட்டுமே தடை செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி குறைவான உமிழ்வு, குறைந்த டெசிபெல் திறன்கொண்ட மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தியைச் செய்துவருகிறோம். உற்பத்திக்குப் பிறகும் தகுந்த சோதனை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்பிவருகிறோம். பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தீபாவளிதான் ஆறுதலாக இருக்கிறது.

பட்டாசு
பட்டாசு

கொரோனாவைக் காரணம் காட்டி பட்டாசுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தத் தடை அறிவிப்பு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எங்களின் பட்டாசு விற்பனைக்கு இரண்டு மாநில அரசுகளும் அனுமதியளிக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு