Published:Updated:

"மூணு பெண் பிள்ளைங்க வாழ்கையை காப்பாத்தியிருக்கீங்க" - தீயணைப்பு வீரர்களிடம் உருகிய கூலித் தொழிலாளி

தீயணைப்பு வீரர்களிடம் உருகிய கூலித் தொழிலாளி

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போராடி மணலுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சித்திரவேலைக் காப்பாற்றினர்.

"மூணு பெண் பிள்ளைங்க வாழ்கையை காப்பாத்தியிருக்கீங்க" - தீயணைப்பு வீரர்களிடம் உருகிய கூலித் தொழிலாளி

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போராடி மணலுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சித்திரவேலைக் காப்பாற்றினர்.

Published:Updated:
தீயணைப்பு வீரர்களிடம் உருகிய கூலித் தொழிலாளி

தஞ்சாவூர் மவ்வட்டம், பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் (45). செப்டிக் டேங்க் அமைத்துக் கொடுக்கும் கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி சித்திரவள்ளி (35). இவர்களுக்குக் கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். கூலி வேலைசெய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார் சித்திரவேல். இந்த நிலையில், இன்று சேதுபாவசத்திரம் அருகேயுள்ள கடற்கரைப் பகுதியான சின்னமனை கிராமத்தில் செப்டிக் டேங்க் கட்டிக் கொடுப்பதற்காகச் சென்றிருக்கிறார் சித்திரவேல்.

உயிருக்குப் போராடிய சித்திரவேல்
உயிருக்குப் போராடிய சித்திரவேல்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிமென்ட் உறை இறக்குவதற்காக எடுக்கப்பட்ட சுமார் 15 அடி ஆழம் கொண்ட குழிக்குள் சித்திரவேல் நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் குழிக்குள் மணல் சரிந்து சித்திரவேல் முழுவதுமாக மண்ணுக்குள் மூழ்கிவிட்டார். செய்வதறியாமல் திகைத்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக பேராவூரணி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பேராவூரணி தீயணைப்புத்துறையின் நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மின்னல் வேகத்தில் சின்னமனை கிராமத்துக்குச் சென்றதுடன், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போராடி மணலுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சித்திரவேலைக் காப்பாற்றினர்.

தீயணைப்பு வீரர்கள்
தீயணைப்பு வீரர்கள்

கூலித் தொழிலாளி உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அங்கிருந்த அனைவரும் கைதட்டிப் பாராட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துத் தீயணைப்புத்துறையினரிடம் பேசினோம். ``சித்திரவேல் தன்னுடன் வேலை செய்யும் சிலருடன் சேர்ந்து செப்டிக் டேங்க் கட்டுவதற்காக சுமார் 20 அடி வரை குழி எடுத்திருக்கிறார்.

பின்னர் சிமென்ட் குழாய்களை அந்த குழிக்குள் இறக்கியிருக்கின்றனர். சித்திரவேல் குழிக்குள் இருந்தபடி சிமென்ட் குழாய்களை வாங்கி இறக்கியிருக்கிறார். கடற்கரைப் பகுதி என்பதால் மணல் பரப்பு அதிகமாக இருந்திருக்கிறது. குழிக்குள் மேல் பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டு சிமென்ட் குழாய்களை எடுத்து கொடுத்திருக்கின்றனர்.

மணல் சரிந்த குழிக்குள் சித்திரவேல்
மணல் சரிந்த குழிக்குள் சித்திரவேல்

மணல் பகுதியில் 20 அடி வரை பள்ளம் தோண்டியிருந்ததால் திடீரென மணல் சித்திரவேல் மேல் சரிந்தது. சட்டென அவர் கையை மட்டும் மேல் தூக்க தலை மற்றும் உடல்பகுதி முழுவதும் மணலில் மூடிவிட்டது. முற்றிலும் மூடிய நிலையில் கையை அசைத்து `காப்பாத்துங்க’ என்று சைகை செய்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் உடனடியாக எங்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

மேலும் அவர்கள் மணலை அகற்றும் பணியிலும் ஈடுபட்டிருக்கின்றனர். லேசாக சித்திரவேலின் தலை தெரிந்த பிறகு விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்குள் மீண்டும் மீண்டும் மணல் சரிந்துகொண்டே இருந்திருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் அவர்களுக்குப் படபடப்பு ஏற்பட்டது. மணல் மூடிய குழிக்குள் இருந்த சித்திரவேலின் நிலை அவர்களுக்குக் கவலையை உண்டாக்கியது. அடுத்த பத்து நிமிடங்களில் நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுவிட்டோம்.

தீயணைப்பு வீரர்கள்
தீயணைப்பு வீரர்கள்

மேல் பகுதியிலிருந்த சித்திரவேலின் கைகளின் பக்கவாட்டில் இருந்த மணலை வேகமாக அள்ளினோம். அருகில் இருந்தவர்களும் உதவி செய்தனர். முதலில் தலை முழுமையாக தெரிகிற வகையில் சுற்றிலும் மணலை அள்ளிவிட்டோம். மணல் சரியாத அளவுக்கு சுற்றியிருந்த மணலை அள்ளிவிட்டோம். அதன் பிறகு அவருக்கு மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படவில்லை.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போராடி முற்றிலுமாக மணலை அகற்றி சித்திரவேலை வெளியே தூக்கினோம். அருகிலிருந்த அனைவரும் எங்களைக் கைதட்டிப் பாராட்டினர். சித்திரவேல், `மணல் என் மேல விழுந்த அடுத்த கொஞ்ச நேரத்துல என்னால மூச்சுவிட முடியலை. நம்ம உசுரு போகப்போகுது, பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு உசுரவிடப்போறோமேன்னு கண்கள் கலங்கிச்சு. பொழைப்பேனு நம்பிக்கையே இல்லை.

தீயணைப்பு வீரர்கள் மீட்ட சித்திரவேல்
தீயணைப்பு வீரர்கள் மீட்ட சித்திரவேல்

என்னோட மூணு பொம்பளைப் பிள்ளைகளுக்கு நான்தான் உசுரு. அவங்கதான் என்னோட உலகம்... வாழ்க்கை... எல்லாம். நீங்க என்னையக் காப்பாத்தலை சார், என்னோட மூன்று பிள்ளைகள் வாழ்க்கையைக் காப்பாத்தியிருக்கீங்க' என்று கையெடுத்து கும்பிட்டார். எங்களோட வேலையைத்தான் நாங்க செஞ்சோம் எனக் கூறி அவரைச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவெச்சோம். பெரும் சவாலாக அமைந்த இந்தச் சம்பவத்துல கூலித் தொழிலாளி உயிரைக் காப்பாற்றியது எங்களுக்குப் பெரும் நெகிழ்ச்சியைத் தந்தது" என்றனர்.