Published:Updated:

`எங்களுக்கு இரண்டு தீபாவளி’ - தீயணைப்பு வீரர்களின் வாழ்வும் பணியும்... இது மதுரை ரவுண்டப்!

Fire station and services men
Fire station and services men

மதுரை மாவட்ட தீயணைப்பு வீரர்களின் அனுபவங்கள், துறையின் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ளப் புறப்பட்டோம்.

தீபாவளி, மழை, வெள்ளம் என தீயணைப்பு வீரர்களின் சவால் நிறைந்த காலக்கட்டம் இது. மனித ஆற்றலுக்கெல்லாம் அப்பாற்பட்டது இயற்கை. அதன் கோபக் கரங்களில் அபாயத் தருணங்களில் உயிர்களைக் காத்திடும் சேவையை தீயணைப்புத்துறை வீரர்கள்தான் செய்கிறார்கள்.

ஆலைகள், புழுதி மண்டிய சுடுசாலைகள், விதிகளைப் புறந்தள்ளிய உயரக்கட்டிடங்கள்.. இவை, நகரத்துக்காட்சியெனில் மறுபக்கம் கிணறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள் கொண்ட கிராமங்கள். இங்கெல்லாம் ஆபத்துகள் நேரும்போது உயிர்காக்கும் படைவீரர்கள், தீயணைப்புத்துறையினரே.

மதுரை மாவட்ட தீயணைப்பு வீரர்களின் அனுபவங்கள், துறையின் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ளப் புறப்பட்டோம்.

தீயணைப்பு நிலையம் - பெரியார்
தீயணைப்பு நிலையம் - பெரியார்

மாவட்டத்தில் மொத்தம் 13 நிலையங்கள். அவற்றுள் உயர்நீதிமன்றம், பெரியார், தல்லாகுளம், நாராயணபுரம், அனுப்பானடி, மீனாட்சிக்கோயில் என 6 நிலையங்கள் நகருக்குள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நிலையத்துக்கும் அலுவலர், அவர்களின்கீழ் வீரர்கள். இவர்களே மதுரையின் பேரிடர்கால உயிர் மீட்பர்கள்!

மதுரை மாவட்டத்தில் அழகர்மலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. காட்டுத்தீ அவ்வளவு எளிதில் மனிதக்கட்டுகளுக்குள் வாரா. இருப்பினும் தீப்பிடித்த தொடக்க நிலையிலேயே காய்ந்த இலைகளால் வேகமாக அடிக்கிற Beating Method உத்திமூலம் தீயை அணைக்கலாம். வீரர்கள் ‘எதிர்முனைத் தீ’ Counter Fire எனும் உத்தியைக் கையாளுகின்றனர். காற்றின் வீச்சில் தீ பரவும்போது அதன் எதிர்த்திசையில் நெருப்பு வைத்தால் இரண்டும் மோதி அணையும்.

குரங்கணி ‘தீவிபத்து போன்றவற்றில் இந்த 'Counter Fire' உத்தியையே தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தினர்.

நெருப்பு மற்றும் அதன் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகின்ற பெரிய உடைகள், ஷூ, கையுறை, தலைக்கவசம் ஆகிய Personal Protective Equipment தற்காப்புக் கருவிகள்தான், தீயை அணைக்கும் வீரர்களின் முழுமுதல் பாதுகாப்பு.

நிலைய அலுவலர் வெங்கடேசனுடன் தீயணைப்பு வீரர்கள்
நிலைய அலுவலர் வெங்கடேசனுடன் தீயணைப்பு வீரர்கள்

கட்டடங்கள் நிறைந்த பகுதியில் சிலிண்டர் விபத்து வாய்ப்புகள் அதிகம். இந்த விபத்துகள் நொடியில் நிகழ்வதல்ல. எதிர்பாராமல் சிலிண்டரில் பற்றிய தீ, உள்ளிருக்கும் வாயுமூலம் தொடர்ந்து எரியும். நன்கு நனைக்கப்பட்ட சாக்குகளை சிலிண்டரைச் சுற்றிப் போர்த்திவிட்டால், சிலிண்டர் சூடாவது தாமதப்படும். நிறுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கும்வரை சிலிண்டரால் ஆபத்தில்லை. பதறிப்போய் தள்ளிவிடுவதோ, உருட்டுவதோ தான் விபத்துக்கு வித்திடுவது. சிலிண்டர் வாங்கும்போதே பரிசோதனை செய்து வாங்குவதும், கேஸ் ரெகுலேட்டரை மூடி அடுப்பு அணைந்த பிறகு ஸ்டவ்வை மூடுவதும் விபத்துகளைத் தவிர்க்கும்.

சிலிண்டரை சப்ளை செய்யும்போதே ‘மாதிரி ரெகுலேட்டர்’ மாட்டி ஏஜென்சிக்காரர் பரிசோதனை செய்யவேண்டும். அப்படி யாருமே செய்வதில்லை, நாமும் கேட்பதில்லை. ஆனால், ரெகுலேட்டர் டெஸ்ட் செய்துவிட்டதாகத்தான் நம்மிடம் கையெழுத்து வாங்குகின்றனர்
தீயணைப்புத்துறை அதிகாரி

நிலையத்தில் ‘Quick Response Vehicle ‘உடனடி சேவை ஊர்தி’ இருக்கின்றது. ஒடுங்கிய தெருக்களில் பற்றிவிட்ட தீயை அணைக்க இந்தச் சிறிய ரக ஊர்தி பயன்படும். இதர கன ரக வாகனங்களைப் பயன்படுத்துகையில் அதன் இன்ஜின் இயக்கத்தை தீயணைக்கும் பம்புக்கு மாற்றவேண்டும். ஆனால், இந்த ‘உடனடி சேவை ஊர்தி’யில் அந்தத் தேவை இல்லை. அதனால், முன்னும் பின்னும் வாகனத்தை இயக்கிக்கொண்டே தீயை அணைக்கலாம்.

அவசர ஊர்திகளில் 4,500 லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். குயிக் ரெஸ்பான்ஸ் வாகனத்தில் 300 லிட்டர் வரை தண்ணீரைச்சேமிக்க இயலும். போர்வெல்லில் குழந்தை விழுந்துவிட்டால் மீட்டெடுக்கும் கருவியை உருவாக்கிய மதுரை மணிகண்டனை யாரும் மறந்துவிட முடியாது.

அவசரத்தேவையெனில் அந்தக்கருவியின் உதவியை நாடுவதற்காக எப்போதும் மணிகண்டனுடன் தொடர்பில் உள்ளனர் துறையினர்.
'போர்வெல் மீட்புக் கருவி'யுடன் மணிகண்டன்
'போர்வெல் மீட்புக் கருவி'யுடன் மணிகண்டன்

எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றில் பற்றுகிற தீ மிகவும் ஆபத்தானவை. அவற்றை அணைப்பதற்கென ‘நுரை தெளிப்பான்’ Foam Tendar வாகனம் தல்லாகுளம் நிலையத்தில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்துத் தீயையும் அணைக்க Brando Sky Lift ‘தானியங்கி தூக்கி’ கொண்ட வாகனம் இங்கே கைவசம் இருக்கிறது.

அறைகளில் சூழ்ந்த புகையை வெளியேற்ற புகை தடுப்பான் Smoke Exhauster உபயோகப்படுகின்றது. உலகையே உலுக்கிய மீனாட்சிக்கோயில் தீ விபத்தின்போது இந்த புகை தடுப்பான் கொண்டுதான் முடிந்தளவுக்கு புகையை வெளியேற்றியதாகக் கூறினார், சம்பவம் நடந்த இரவில் பணியிலிருந்த பெரியார் தீயணைப்பு நிலைய அதிகாரி திருமுருகன்.

மீனாட்சிக்கோயில் தீவிபத்தின்போது இந்தப் 'புகை தடுப்பான்' கொண்டுதான் முடிந்தளவுக்குப் புகையை வெளியேற்றினோம்.
திருமுருகன், நிலைய அதிகாரி.
மீனாட்சிக்கோயில் தீவிபத்துக் காட்சி
மீனாட்சிக்கோயில் தீவிபத்துக் காட்சி

அவசரகால மீட்பு ஊர்தி ‘Emergency Rescue Tender - ERT’ இங்கு உள்ளது. இந்த வாகனத்தினுள் 25 வகையான மீட்புக்கருவிகள் இருக்கின்றன. வெள்ளத்தின்போது, நீரில் மிதக்கின்ற பொருட்களைக்கொண்டு நீந்தித் தப்பிக்கலாம். காலி சிலிண்டர்கள்கூட நீந்தப் பயன்படும். இறுக மூடிய காலிக்குடம், தீர்ந்துபோன சிலிண்டர்மூலம் நீந்தித் தப்பிக்கலாம்.

மாவட்ட அலுவலர் கல்யாண்குமார் பேசுகையில், “தீ விபத்துக்கள் தீவிரம் பெறுவதற்குக் காரணம், விழிப்புணர்வு இல்லாமையே. தயக்கமின்றி சமயோசிதமாகச் செயல்பட்டால் விபத்தின் வீரியத்தைத் தவிர்க்கமுடியும். அரசு அனுமதியுடன் ஆயிரம் ரூபாய் பணம் கட்டி வருகிற மாணவர்களுக்கு, 10 நாள்கள் பயிற்சி, முதலுதவி, அவசரகாலப் பாதுகாப்பு, மீட்புமுறைகள் குறித்து கற்றுத்தரப்படுகின்றன” என்றார்.

தீயணைப்பு அதிகாரி சரவணன்
தீயணைப்பு அதிகாரி சரவணன்

பெரியார் பகுதியிலுள்ள தீயணைப்பு நிலைய அலுவலர் ரா.வெங்கடேசன் கூறுகையில், “தீபாவளி வருது. ஆனா, பண்டிகை நாளில் நாங்க கொண்டாட முடியாது. அதனால, பண்டிகைக்கு முன்ன ஒருநாளும், முடிஞ்சு வீடு திரும்பியதும் ஒரு நாளும்ன்னு குடும்பத்தோட கொண்டாடுவோம். வருஷா வருஷம் எங்களுக்கு இரண்டு தீபாவளி” என்று சிரிக்கிறார்.

இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால்தான் நமது பாதுகாப்பு உணர்வு சாத்தியமாகிறது.

`தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்பார்கள்... நம்பாதே..!’ - தேனியைக் கலக்கும் காவல்துறையின் மீம்ஸ்
அடுத்த கட்டுரைக்கு