Published:Updated:

`சுழற்சி முறை; 50 சதவிகிதத் தொழிலாளர்கள்!’- 43 நாள்களுக்குப் பின் தொடங்கிய பட்டாசு உற்பத்தி

பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தி

ஊரடங்கு தளர்வால் 43 நாள்களுக்குப் பிறகு சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 சதவிகிதத் தொழிலாளர்களுடன் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகித தேவையை இப்பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்தி செய்து வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், 70 சதவிகிதத் தொழிலாளர்கள் பெண்கள்தான். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன.

திறக்கப்பட்ட பட்டாசு ஆலை
திறக்கப்பட்ட பட்டாசு ஆலை

தற்போது ஊரடங்கு தளர்வினால், அரசின் பல்வேறு நிபந்தனைகளுடன் 43 நாள்களுக்குப் பிறகு பட்டாசு ஆலைகள் 50 சதவிகிதத் தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் பட்டாசுத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

`பட்டாசு தயாரித்துக்கொண்டே படித்தேன்!' - குரூப் 1 தேர்வில் சாதித்த ஏழைத் தொழிலாளியின் மகள்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசனிடம் பேசினோம்.``பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டாசு ஆலைகள் இயங்குவதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. 50 சதவிகிதத் தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளோம். ஆலைக்குள் நுழையும்போதே தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையின் அளவை கண்காணித்த பிறகு, சானிடைசரால் கைகளை சுத்தம்செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

வெப்பநிலை கண்காணிப்பு
வெப்பநிலை கண்காணிப்பு

வேலையாட்கள் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வேலை செய்வார்கள். அதாவாது, ஒரு குழுவினர் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றொரு குழுவினர் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வேலை செய்வார்கள். இதனால், அனைத்துத் தொழிலாளர்களுக்குமே வேலைவாய்ப்பு கிடைக்கும். பட்டாசுத் தொழிலைப் பொறுத்தவரையில் சாதாரணமாகவே இது ஒரு சமூக இடைவெளி உடைய தொழில்தான்.

ஒரு அறைக்கு 4 பேர் அமர்ந்து வேலை செய்வார்கள். தற்போது 2 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். தற்போது வெயில்காலம் என்பதாலும், பட்டாசு உற்பத்தியின் போது தொழிலாளர்களுக்கு அதிகப்படியான வியர்வை வெளிப்படும் என்பதால், துணியால் ஆன மாஸ்க்குகளை வழங்கியுள்ளோம். கடந்த 42 நாள்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தி

அத்துடன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாலும் தற்போதைய 50 சதவிகித தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பட்டாசு உற்பத்தியாலும் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் மொத்த பட்டாசுத் தேவையில் 50 முதல் 60 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். தீபாவளி வரை எந்தத் தடையுமில்லாமல் பட்டாசு உற்பத்தி தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு