Published:Updated:

ஈரோடு: பட்டாசுகளால் மட்டும்தான் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? - உரிமையாளர்கள் வேதனை #SpotVisit

பட்டாசு
பட்டாசு ( vikait )

2020-ம் ஆண்டின் பெரும்பான்மையான நாள்களை கொரோனா, தனது கோரத் தாண்டவத்தால் ஆட்கொண்டுவிட்டது. தமிழகத்தின் நிலைமையை பொறுத்த அளவில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் மக்கள் நியூ நாா்மல் வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த எட்டு மாத காலமாக நிலவிவந்த தொழில் முடக்கம் காரணமாக பொதுமக்களிடையே பணப்புழக்கம் பெரிதும் குறைந்திருந்தது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. `கொரோனா காலக்கட்டத்தில் வரும் தீபாவளிப் பண்டிகையை மக்கள் எவ்வாறு கொண்டாடப்போகிறார்கள்... இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை எதிர்கொள்ளும் அவர்களின் மனநிலை எவ்வாறாக இருக்கிறது... கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை எவ்வாறு இருக்கிறது?’ போன்ற கேள்விகளுக்கு விடையறிய ஈரோடு மாவாட்டத்திலுள்ள பட்டாசுக் கடைகளை ஒரு ரவுண்ட் அடித்தோம்.

பட்டாசு
பட்டாசு
vikait

கொரோனா காலத்தில் இந்த தீபாவளிப் பண்டிகையை மக்கள் எவ்வாறு கொண்டாட விரும்புகிறார்கள், பட்டாசுகளின் விலையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா, பசுமைப் பட்டாசுகளுக்கான வரவேற்பு எப்படி உள்ளது, விற்பனை எவ்வாறு உள்ளது... போன்ற பொதுவான கேள்விகளை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் முன்வைத்தோம். ஈரோடு மாவட்ட ஸ்பெஷல் ஸ்பாட் விசிட் ரிப்போர்ட் இங்கே...

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்குதலுக்கு முதன்முதலில் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்தாலும், அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி துணிக்கடைகளிலும், பலகாரக் கடைகளிலும் புதுத் துணிகள் எடுப்பது, இனிப்புகள் வாங்குவது என பரவலாக எல்லா இடங்களிலும் மக்களின் வழக்கமான கூட்டமே தென்பட்டது. ஆனால், தீபாவளின் முக்கிய அம்சமாக கருதப்படும் பட்டாசு விற்பனையில் வழக்கமான சுறுசுறுப்பு இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது.

பட்டாசு
பட்டாசு
vikait

பட்டாசுக் கடைகளை விசிட் அடிக்கக் கிளம்பினோம். முதலில் இடையன்காட்டு வலசு பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சக்தி பட்டாசுக் கடைக்குச் சென்றோம். கடையின் உரிமையாளர் துரைமுருகன் நம்மிடம் பேசுகையில், ``இந்த வருஷம் தீபாவளி ரொம்பவே டல்தாங்க. போன வருஷம் 5 லட்ச ரூபாய்க்குப் பட்டாசு பர்சேஸ் பண்ணினோம். ஆனா, இந்த முறை 2 லட்ச ரூபாய்க்கு மட்டும்தான் பண்ணியிருக்கோம்.

துரைமுருகன்
துரைமுருகன்
vikait

கொரோனா காலம் என்பதால் விற்பனை எப்படியிருக்கும்னும் தெரியலை. ஒருவேளை விற்பனை ஆகாம மிஞ்சிருச்சுன்னா அதை பத்திரமான இடத்துல பாதுகாத்துவைக்கணும். இது மாதிரி சிக்கல்கள் இருக்குறதுனால, நாங்களும் ரிஸ்க் எடுக்க விரும்பலை. மக்களும் இந்த முறை பெரிய அளவுல வாங்க முன்வரலை” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அடுத்ததாக முனிசிபல் காலனியில் அமைந்திருக்கும் சிறிய மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போகோ பட்டாசுத் திருவிழா கடைக்குச் சென்று, கடையின் உரிமையாளர் சக்திவேலிடம் பேச்சுக் கொடுத்தோம். ``நான் 26 வருஷமா தீபாவளி சமயத்துல பட்டாசுக் கடை நடத்திக்கிட்டு இருக்கேன். இந்த முறை விலையிலயும் பெருசா மாற்றமில்லை. இந்த கொரோனா காலகட்டத்துல மக்களோட வாங்குற சக்தி ரொம்பவே குறைஞ்சிருக்கு. பெரும்பாலும் குழந்தைகளோட ஆசைக்காகத்தான் கொஞ்சமா பட்டாசுகள் வாங்கிக்கிட்டு போறாங்க. அதிகமா பட்டாசு வாங்குறவங்ககூட இந்த முறை ரொம்ப குறைவாத்தான் வாங்கியிருக்காங்க. போன வருஷமெல்லாம் இந்நேரம் 25 சதவிகித பட்டாசுகள் வித்திருப்போம். ஆனா, இந்த முறை 5 சதவிகிதம்கூட இன்னும் விக்கலை. மக்களும் பொதுவான பட்டாசுகள் மட்டும்தான் வாங்குறாங்க அதிக விலை ஃபேன்ஸி ரகப் பட்டாசுகலை யாரும் வாங்க விரும்பறதில்லை. அதேமாதிரி அரசாங்கம் சொல்ற பசுமைப் பட்டாசு விற்பனையும் இன்னும் முழுசா கொண்டுவரப்படலை. நூற்றில் முப்பது சதவிகிதம் மட்டும்தான் முழுமை அடைஞ்சிருக்கு" என்று கூறினார்.

செல்வகுமார்
செல்வகுமார்
vikait

மூலப்பட்டறை பகுதியில் ரோட்டரி சேவா சங்கம் சாா்பில் சிவகாசியின் காா்னேஷன் பட்டாசுக் கடை போடப்பட்டிருக்கிறது. சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தும் செல்வகுமார் கூறுகையில், ``கொரோனா காலத்துல எங்களுக்கு மூணு, நாலு மாசமா வேலையே சுத்தமா இல்லை. பட்டாசு கம்பெனிகாரங்கதான் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள், பண உதவின்னு செஞ்சிக்கிட்டு இருந்தோம். இந்த முறை வட மாநிலங்கள் போக வேண்டிய பட்டாசுகள், அரசுகள் போட்டிருக்கும் தடை காரணமா சிவகாசியிலேயே அதிக அளவில் தேங்கிடுச்சு.

பட்டாசு
பட்டாசு
vikait

போன வருஷம் தீபாவளிக்கு நாங்க 250 கேஸ் பட்டாசு இங்கெ கொண்டு வந்தோம். ஆனா, இந்த முறை 159 கேஸ்தான் கொண்டு வந்திருக்கோம். அதுலயும் இன்னும் நிறைய ஸ்டாக் ஓப்பன் பண்ணாமலேயே இருக்கு. சிவகாசியிலிருந்து நாங்க 25 பேர் வந்திருக்கோம். எங்க சம்பளம் உட்பட எல்லாமே இது விக்கிறதைப் பொறுத்துதான், இந்த வருஷ வியாபாரம் லாபமா, நட்டமான்னு தெரியவரும்" என்றார்.

சிவகாசி: `அதிகரிக்கும் பட்டாசு மீதான தடை!’ - கேள்விக்குறியாகும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம்?

இறுதியாக ஈரோடு மாவட்டத்தின் முக்கியப் பகுதியான மஜீத் வீதியில் தீபாவளி சீஸன் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் பட்டாசுகளை விற்கும் கடைகளுக்குச் சென்றோம்.

``வழக்கமா இந்த நேரத்துலல்லாம் எங்க கடையில நிக்கக்கூட முடியாத அளவுக்குக் கூட்டம் இருக்கும். ஆனா, இந்த தடவை வியாபாரம் இன்னும் பெரிய அளவுல தொடங்காமலேயே இருக்கு. ஜவுளி வாங்கினா அதை வருஷம் முழுக்கப் பயன்படுத்தலாம். இனிப்புகள், உணவுப்பொருள் - இதெல்லாமே அத்தியாவசியமா இருக்கறதுனால மக்கள் பட்டாசு வாங்குறதைத் தேவையற்ற செலவாத்தான் பார்க்குறாங்க" என்று மகாதேவி பட்டாசுக் கடை நடத்தும் செல்வகுமாா் கூறினார்.

தியானேஷ்
தியானேஷ்
vikait

"இந்த வருஷம் தீபாவளி வியாபாரம் மந்தமா இருக்கிறது உண்மைதான். அரசாங்கம் சுற்றுச்சூழல் மாசுபடுதுனு பட்டாசுகளுக்குத் தடை விதிக்கறாங்க. ஆனா, சுற்றச்சூழலை மாசுபடுத்துற எவ்வளவோ விஷயங்கள் வருஷம் முழுக்க நடந்துக்கிட்டேதான் இருக்கு. அதனால கெடாத சுற்றுச்சூழல், மக்கள் ஒரு நாள் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடுற தீபாவளியால் மாசுபடுதுன்னு சொல்றதை எப்படி எடுத்துக்கிறதுன்னே தெரியலை. இந்த தீபாவளிப் பண்டிகையை நம்பிதான், சிவகாசியில பல குடும்பங்களோட வாழ்வாதாரமே இருக்கு. அதனால அரசாங்கம் பட்டாசு வெடிக்கிற நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இதற்கான நடவடிக்கையை எடுக்க முன்வரணும்" என்று கிருஷ்ணா பட்டாசுக் கடையின் மேலாளர் தியானேஷ் கேட்டுக்கொண்டாா்.

`தீபாவளி சமயத்தில் அக்கம் பக்கத்தில் பட்டாசுகள் வெடிப்பார்கள் என்பதால், நாங்களும் ஆசைக்காகக் கொஞ்சம் பட்டாசுகள் வாங்கி வெடிப்போம். மற்றபடி பட்டாசுகளை அதிக விலை கொடுத்து வாங்க விருப்பமில்லை’ என்பதே பொதுமக்களில் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

பட்டாசு
பட்டாசு
vikait

ஈரோடு மாவட்டம், தொழில் சார்ந்த நகரம் என்பதால் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வேலையாட்கள் பண்டிகை நாள்களில் போனஸ் பணத்தின் பெரும்பகுதியை பட்டாசுகளுக்குச் செலவிடுவாா்கள். ஆனால், கொராேனா தாக்குதலால் தொழிற்சாலைகள் செயல்படாதிருந்த நிலையில் இந்த முறை தீபாவளி போனஸ் பணம் கொடுக்கப்படாத நிலைதான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. அதுவே பட்டாசு விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பட்டாசு உற்பத்தி, விற்பனையை மட்டுமே நம்பி சிவகாசியில் பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு