Published:Updated:

சென்னையில் முதல் கொரோனா கிருமி நாசினி சுரங்கப்பாதை - ஊரடங்கிலும் உதவும் நல் உள்ளங்கள் #Lockdown

கொரோனா சுரங்கப்பாதை
கொரோனா சுரங்கப்பாதை

சென்னையில் முதல் முறையாக 12 மணி நேரத்தில் கொரோனா கிருமி நாசினி சுரங்கப்பாதை தயாராகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுரங்கப்பாதை
சுரங்கப்பாதை

ஆனால், வெளியில் வரும் பொதுமக்களில் பலர் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. மேலும், தேவையில்லாமல் வாகனங்களில் பலர் சுற்றிவருகின்றனர். அவர்களை எச்சரிக்கும் போலீஸார் நூதன தண்டனைகளையும் வழங்கிவருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் திருந்தியபாடில்லை. சென்னை புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டனர். தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி நேதாஜி பஸ் நிலையம் பகுதியில் தற்காலிக மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை என்பதை துணை கமிஷனர் சுப்புலட்சுமி கண்டறிந்தார். அதனால், கொரோனா கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைக்க அவர் முடிவு செய்தார்.

சுரங்கப்பாதை
சுரங்கப்பாதை
`சென்னை அரசு டாக்டருக்கு கொரோனா; தனியார் மருத்துவமனையில் அனுமதி!' - தனிமைப்படுத்தப்பட்ட 35 பேர்

இதற்காக சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சேவியர் கூறுகையில், ``துணை கமிஷனர் சுப்புலட்சுமி கேட்டதும், 10 அடி அகலத்தில் 10 அடி நீளத்தில், 20 அடி உயரத்தில் சுரங்கப்பாதையை அமைத்தோம். ஊரடங்கு காரணமாகத் தொழிலாளர்கள் இல்லை என்றாலும் 7 தொழிலாளர்கள் மூலம் 12 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை அமைத்தோம்.

இந்த சுரங்கப்பாதையின் அருகே 3,000 லிட்டர் தண்ணீர் தொட்டி, மோட்டர் உள்ளது. தண்ணீருடன் கிருமி நாசினி கலந்ததும் சுரங்கப்பாதையில் உள்ள பைப்கள் மூலம் மக்கள் மீது ஒரே அளவில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்தப் பாதையைக் கடந்துதான் மக்கள் மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். அதனால் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும். தண்டையார்பேட்டையைத் தொடர்ந்து சென்னையில் இன்னும் சில இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது" என்றார்.

இலவச அரிசி, மளிகை பொருள்கள்
இலவச அரிசி, மளிகை பொருள்கள்
`9.25-க்கு அட்மிட்; 11.45-க்கு மரணம்... இறந்தபிறகு கொரோனா உறுதி’- அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

ஊரடங்கின்போதும் வீட்டுக்குள் முடங்கினாலும் மனித நேயம் மிக்கவர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளராகப் பணியாற்றும் பாலு, வீட்டைவிட்டு வெளியில் சென்று உதவி செய்ய முடியாத சூழலும் நண்பர்கள் மூலம் ஏழைகளுக்கு உதவிகளைச் செய்ய திட்டமிட்டார். மாங்காடு பத்ரிமேடு பகுதியில் உள்ள ஏழைகளுக்கு இலவச அரிசி, மளிகைப் பொருள்கள், பால், பிஸ்கட் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யும்படி நண்பர்களிடம் கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அனைத்துப் பொருள்களையும் ஏற்பாடு செய்த பாலுவின் நண்பர்களும் மாங்காடு பகுதி சமூக நல ஆர்வலர்கள் கென்னடி, ரவி ஆகியோர் மூலம் வீடு வீடாகக் கொடுத்தனர். அதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஊரடங்கு முடிந்த பிறகு, இன்னும் ஏராளமானவர்களுக்கு உதவி செய்ய பாலு மற்றும் நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். முகக் கவசங்கள், கைகளைக் கழுவ பயன்படுத்தப்படும் திரவங்கள் ஆகியவற்றை மக்களுக்கு விரைவில் விநியோகிக்க முடிவு செய்துள்ளனர். ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அடையாள அட்டை அரசு தரப்பிலிருந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

உதவி
உதவி

சென்னை மணப்பாக்கத்திலுள்ள உத்தரப்பிரதேசம் , ஜார்க்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கு பி.ஜே.பி மாநில இளைஞரணிச் செயலாளர் வழக்கறிஞர் அருள், உள்ளிட்ட அக்கட்சியினர் உணவு வழங்கினர்.

அடுத்த கட்டுரைக்கு