Published:Updated:

குமரியில் கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நபர்... 10 நாளில் முன்னேற்றம்! -நம்பிக்கைதரும் அதிகாரி

கொரோனா தொற்றிலிருந்து நலமானவர் வீட்டுக்கு திரும்பினார்
கொரோனா தொற்றிலிருந்து நலமானவர் வீட்டுக்கு திரும்பினார்

சிகிச்சையில் இருக்கும் 15 பேருக்கும் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதில் இரண்டுபேர் வேகமாக குணமடைந்துவருகின்றனர். இன்னும் ஐந்து நாள்களில் சிலர் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 16 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைபெற்றுவந்தனர். டெல்லி மாநாட்டுகு சென்றுவந்த நாகர்கோவில், வெள்ளாடிச்சிவிளை மற்றும் தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருந்தவர்கள், சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த ஒருவர் மற்றும் அவரது தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அனைவரும் நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, கன்னியாகுமரி மாவட்ட கொரோனா நோடல் ஆபீஸர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

நோடல் ஆப்பீசர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
நோடல் ஆப்பீசர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கொரோனா சிகிச்சைக்கான நோடல் ஆபீஸர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 16 பேரில் முதல் நபர் நலமாகி வீடு திரும்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த வாரத்தில் புதிய கொரோனா தொற்று எதுவும் இல்லை. இப்போது சிகிச்சையில் இருக்கும் 15 பேருக்கும் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதில் இரண்டுபேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். இன்னும் ஐந்து நாள்களில் சிலர் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளது. மொத்தம் 10 நாள்களில் அனைவருக்கும் கொரோனா குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளர்கள் மூலமும் 1,253 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 1,066 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவில் குணமடைந்தவர் வீடுதிரும்பினார்
கொரோனாவில் குணமடைந்தவர் வீடுதிரும்பினார்

கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்த 16 பேரில் ஒருவர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். அவரை 14 நாள்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், மொத்தம் 214 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறிய வகையில் இதுவரை 5,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 4,490 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு