Published:Updated:

ரயில் நிலையத்துக்கு தாமதமாக வந்த மருத்துவக்குழு- நாகர்கோவிலில் பின்வாசல் வழியாக வெளியேறிய பயணிகள்?

ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகள்
ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகள்

ரயில் வந்த பிறகு சோதனைக்கான குழுவினர் வருகைக்காக அரை மணி நேரத்துக்கும் மேல் பயணிகள் காக்க வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றினைத் தொடர்ந்து நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு 5.0-வில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு தடை உத்தரவின்போதும் கடைகள் உள்ளிட்டவைக்கு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பொது போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஐந்தாம்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஊரடங்கு காலத்திலும் முற்றிலும் முடங்கிக்கிடந்த ரயில், பேருந்து போக்குவரத்து மெல்ல தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் தாமதமாக நாளையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், ரயில் போக்குவரத்து இன்று முதல் இயங்கின. இன்று திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்கு 19 பெட்டிகளுடன் இன்டர்சிட்டி ரயில் வந்தது. முதல் நாள் என்பதால் ரயில் பெட்டிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. திருச்சியில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக இன்று மதியம் நாகேர்கோவிலை வந்தடைந்தது.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

சுமார் 300 பயணிகள் இந்த ரயிலில் வந்தனர். ரயில் நாகர்கோவில் வந்தடைவதற்கு முன்பே பயணிகளிடம் இ-பாஸ் சோதனை, கொரோனா சோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த வசதிகள் ரயில் நிலையத்தில் செய்யப்படவில்லை. ரயில் வந்த பிறகு சோதனைக்கான குழுவினர் வருகைக்காக அரை மணி நேரத்துக்கும் மேல் பயணிகள் காக்க வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர், ஒரு குழு மட்டும் வந்து பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் எடுத்தனர். இதனால் பயணிகள் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும், பயணிகளைக் கண்காணித்து நெறிப்படுத்த போதுமான ஊழியர்கள் அங்கு இல்லை. இதனால் சுமார் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் எந்தவித பரிசோதனையும் செய்துகொள்ளாமல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளனர்.

பயணிகளுக்கு சோதனை
பயணிகளுக்கு சோதனை

வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேறிய சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகள் கூறுகையில், ``சோதனை செய்துகொள்ளாமல் பின்வாசல் வழியாகச் சிலர் வெளியேற முயன்றனர். அவர்களைக் கண்டறிந்து மாதிரிகள் சேகரித்துள்ளோம். வேறு யாரேனும் மாதிரிகள் எடுக்கும் முன்பே வெளியேறினார்களா என லிஸ்ட் மூலம் ஆய்வு செய்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு