Published:Updated:

சீர்காழி: `பலத்த சூறைக்காற்று; சேதமடைந்த விசைப்படகுகள்!'

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் சூறைக்காற்றில் மோதிக்கொண்டதில் உடைந்து நொறுங்கின.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் இருக்கிறது. இந்தத் துறைமுகத்தில் தினமும் 300 விசைப்படகுகள், 300 ஃபைபர் படகுகள், 250 நாட்டுப்படகுகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அனைத்து விசைப்படகுகளும் பழையாறு துறைமுகத்திலுள்ள படகு தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வருடம் படகுதளம் மேடாகிப் போனதால் வழக்கம்போல அந்த இடத்தில் சில படகுகளை மட்டும் மீனவர்கள் நிறுத்திவிட்டு, மீனவர்கள் மற்ற படகுகளைச் சற்று தூரத்தில் கடலில் நங்கூரம் போட்டு நிறுத்திவருகின்றனர்.

பழையாறு மீன்பிடி துறைமுகம்
பழையாறு மீன்பிடி துறைமுகம்

இந்த நிலையில், சீர்காழியில் நேற்று நள்ளிரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதில், கடல் அலைகள் உயரமாக எழுந்தன. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோத ஆரம்பித்தன. இதில் பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு உடைந்து நொறுங்கியது. மேலும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐந்து விசைப்படகுகள் சேதமடைந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இன்று காலை உடைந்த படகை மற்ற படகுகளின் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். சூறைக்காற்றால் சேதமடைந்த படகின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்களிடம் பேசினோம். "பழையாறு படகு தளம் தற்போது மணல் மேடாகிவிட்டதால், கடந்த ஒரு வருட காலமாக நாங்கள் அந்த இடத்தில் விசைப் படகுகளை நிறுத்துவதில்லை. சற்றுத் தொலைவில் படகுகளை நிறுத்திவிடுகிறோம். துறைமுகத்திலிருந்து சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருப்பதால் படகுகளை நங்கூரம் பாய்ச்சி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

பழையாறு மீன்பிடி துறைமுகம்
பழையாறு மீன்பிடி துறைமுகம்

அதனால், படகுகள் காற்று வீசும்போது எளிதில் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதமடைகின்றன. எனவே, படகு நிறுத்தும் இடத்தை மேம்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றனர்.

இந்த நிலையில், சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், மீன்பிடி ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பேசிய எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், ``படகுகள் சேதம் குறித்து உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன். உரிய நிவாரணம் பெற்றுத் தருகிறேன்" என்றார்.

சீர்காழி: மழைநீர் புகுந்ததால் விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது! - கவலையில் மீனவர்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு