தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக கண்டறியப் பட்டுள்ளது. அந்த நாள்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். அந்தக் காலகட்டத்தில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக கடலோரப் பகுதியில் மீன்களின் இனப் பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலமாக அறிவித்து ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி, சோழியகுடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்தத் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடைக்காலத்தின்போது மீனவர்கள் விசைப்படகுகளை பராமரித்தல் மற்றும் வலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள். இதனிடையே தடைக்காலம் தொடங்கியதையடுத்து மீன்களின் விலை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் பேசியபோது, "மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தொழிலை நம்பி ஏறத்தாழ 30,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த 61 நாள்களில் 40,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவர் சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு இழப்பு நேரிடும்.

மீன்பிடித் தடைக்காலத்தையொட்டிய நாள்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசும் ஒவ்வொரு மீனவர்களுக்கும் 5,000 ரூபாய் தடைக்கால நிவாரண வழங்கி வருகிறது.
இந்தத் தொகையை மீன்பிடித் தடைக்காலம் உள்ள காலகட்டத்திலேயே வழங்கும்பட்சத்தில் மீனவர்கள் இதை இந்த 61 நாள்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். ஆதலால், தமிழக அரசு மீன்பிடித் தடைக்கால நிவாரண தொகையைக் கூடுதலாக உயர்த்தியும் அதைத் தடைக்காலத்துக்குள்ளேயே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.