Published:Updated:

`12 நாட்டிகல் தாண்டினால் சிறை?' - மீன்பிடிப்பு ஒழுங்குமுறை மசோதாவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு

மீனவர்கள் அனுமதி பெறாமல் மீன் பிடித்தால் அதை குற்றமாகக் கருதி அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் மீன்பிடி கலன்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மீனவர் குறைதீர் கூட்டம்
மீனவர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், ``தேசிய கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது.

மீனவர் குறைதீர் கூட்டம்
மீனவர் குறைதீர் கூட்டம்

இந்த மசோதா கொண்டு வருவதன்மூலம் கடலில் 12 நாட்டிகல் தூரத்துக்கு மேல் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்படும். 12 நாட்டிகல் தூரத்துக்கு மேல் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் அனுமதி பெறும் நிலை ஏற்படும்.

இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், 2020-ம் ஆண்டுக்குள் மீனவர்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் அனுமதி மறுக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கப்பல்களுக்கும் 12 நாட்டிகலுக்கு அப்பால் மீன் பிடிக்க அனுமதித்து கடல் வளத்தை அழிக்கும் நிலை ஏற்படும்.

மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசும் கலெக்டர்
மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசும் கலெக்டர்

இந்த மசோதா சம்பந்தமாக குளச்சல் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தப்பட்டுள்ளது" என குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறுகையில், ``இந்த மசோதா தொடர்பாக அரசு ஆணை எதுவும் பிறப்பிக்கவில்லை. இது சம்பந்தமாக தனியாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எழுத்துபூர்வமாக மீனவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்" என்றார்.