Published:Updated:

`மூன்று மாதங்களுக்குப் பின் மீன்பிடிக்க அனுமதி!’ - உற்சாகத்துடன் கடலுக்குப் புறப்பட்டுச் சென்ற மீனவர்கள்

மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள்
மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள்

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுமார் 10,000 விசைப்படகு மீனவர்கள், இன்று அதிகாலை முதல் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்களும் அடியோடு முடங்கின. கடந்த மார்ச் 23-ம் தேதியுடன் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியது. வழக்கமாக, ஜூன் 15-ம் தேதி வரை அதாவது 61 நாள்கள் இத்தடைக்காலம் அமலில் இருக்கும்.

அதிகாலையில் புறப்பட்ட விசைப்படகுகள்
அதிகாலையில் புறப்பட்ட விசைப்படகுகள்

ஆனால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் மத்தியில் எழுந்த கோரிக்கையையடுத்து, மீன்பிடித் தடைக்காலத்தை 47 நாள்களாக குறைத்தது மத்திய அரசு. இதனால், தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று காலை முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் உற்சாகத்துடன் மீன்பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்தும் விசைப்படகுகளில் மீனவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுழற்சி முறையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரின்சி வயலா, விசைப்படகு இயக்கத்தை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 240 பதிவுசெய்யப்பட்ட விசைப்படகுகளில் 120 விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்றன. திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களில் 120 விசைப்படகுகளும், மீதமுள்ள 120 விசைப்படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாள்கள்.. என சுழற்சி முறையில் கடலுக்குள் செல்ல வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்குள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல டோக்கன் பெற்றுக்கொண்ட மீனவர்கள், வியாபாரிகள் மட்டும் மீன்பிடித் துறைமுகத்திற்குள் சென்றனர்.

மீனவர்களுக்கு  உடல்வெப்பநிலை சோதனை
மீனவர்களுக்கு உடல்வெப்பநிலை சோதனை

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வந்த மீனவர்கள் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் கண்காணிக்கப்பட்டது. மீன்பிடிப்புக்குத் தேவையான வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் டீசல், ஜஸ் பார்கள் உள்ளிட்டவற்றை படகுகளில் ஏற்றினர். விசைப்படகுகளுக்கு மாலை போட்டு, ஜெபம் செய்து அதிகாலை முதலே கடலுக்குள் மீன்பிடிக்கக் கிளம்பினர். மீன் பிடிப்பிற்குப் பிந்தைய மீன் ஏலத்திலும் வியாபாரிகள், மீனவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10,000 மீனவர்கள் விசைப்படகுகளில் இன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆழ்கடல் மீன்பிடித்தலுக்குச் செல்லும் மீனவர்களிடம் பேசினோம், ``இந்த ஊரடங்கு நாள்கள்ல மீன்பிடித்தொழிலும் முடங்கிப் போச்சு. ஊரடங்கு நாளோடு மீன்பிடித் தடைக்காலமும் அறிவிக்கப்பட்டதுனால எந்தவித வருமானமும் இல்லாம சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். மூணு மாசத்துக்குப் பிறகு மீன்பிடிப்பு தொழிலுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கு. கடந்த ஒரு வாரமாவே படகுகள், வலைகள் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைச் செய்தோம். வழக்கமா ஒரு விசைப்படகில் 21 பேர் மீன்பிடிக்கப் போவோம். இப்போ 12 பேருக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. 21 பேர் இருந்துமே சில நேரங்களில் சமாளிக்க முடியாது. வேற வழியில்லாம ஒரு விசைப்படகிற்கு 12 பேருடன் கடலுக்குள்ள போறோம்.

`மூன்று மாதங்களுக்குப் பின் மீன்பிடிக்க அனுமதி!’ - உற்சாகத்துடன் கடலுக்குப் புறப்பட்டுச் சென்ற மீனவர்கள்

இந்த ஊரடங்கில் வெளியூர்களில் உள்ள பல மீனவர்கள் இன்னும் சொந்த ஊர்களுக்குத் திரும்பவில்லை. அதனால், மீன்பிடிக்க அனுமதி கிடைச்சும் மீனவர்கள் பற்றாக்குறை நிலவுது. இந்த நிலைமை சீராக இன்னும் ஒருவாரம் வரை ஆகலாம். தமிழக அரசு மீனவர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகை கொடுத்ததோடு தனது பணியை நிறுத்திக்கொண்டது. அதன்பிறகு எந்த உதவியும் செய்யவில்லை” என்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததால், மீன் விலையும் அதிகமாக இருந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றதால் மீன் விலை குறைய வாய்ப்புள்ளது.

அடுத்த கட்டுரைக்கு